இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார்.

நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து  தெரிவித்த அவர்,

இலங்கை அணியின்  தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் செயற்படுமாறும், குறித்த காலப்பகுதிக்குள் தலைமை பதவிக்கு ஒருவரை தெரிவுசெய்து கொள்வதாகவும் கிரிக்கெட் சபையின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

எனினும் அந்த காலப்பகுதியில் எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. எனது துரதிஷ்டவசமாக  இரண்டு பந்துவீச்சாளர்களை இழந்திருந்தோம். முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றார், நுவான் குலசேகர உபாதைக்குள்ளானார். அதுமாத்திரமின்றி எஞ்சலோ மெத்தியுஸ் தோல்பட்டை உபாதைக் காரணமாக பந்துவீசவில்லை. எனினும் மஹேலவின் அதிஸ்டம் தான் அணித்தலைமையிலிருந்து விலகிய  ஒருவாரத்தில் ஆஸி அணியுடனான போட்டியில் மெத்தியுஸ் பந்து வீசினார்.

இவ்வாறு பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் எனக்கு கிடைத்த வீரர்களையும், ஆதரவுகளையும்  கொண்டு அணியை வலுப்படுத்த முயற்சித்தேன். அந்த முயற்சியின் பலனாக தென்னாபிரிக்கா மண்ணில்  டெஸ்ட் போட்டியை வெற்றிக்கொண்டோம். 

நான் போட்டியில் விளையாடும் போது எனது தனிப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. நாட்டுக்கு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டு்ம் என உணர்ந்து விளையாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் நான் அணித்தலைவராக செயற்பட்ட பத்து மாதங்களில் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டேன்.

எவ்வாறாயினும் இப்பொழுது தான் அறிமுகப்படுத்திய வீரர்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உதாரணமாக தினேஸ் சந்திமல் நான் அறிமுகப்படுத்திய வீரர் இன்று அவர் செயற்படும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.