கடலாமைகள் உயிரிழப்பதற்கான காரணம் குறித்து சமுத்திரவியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

11 Jun, 2021 | 08:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பேர்ள் கப்பல் தீ விபத்தினையடுத்து 19 கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன. 

சூழலியல் ஆய்வாளர்களின் கருத்தின் படி கடல் கொந்தழிப்பு, மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்ளல் மற்றும் மீனவப்படகுகளில் மோதுதல் உள்ளிட்ட காரணிகளே இதுவரையில் கடல் ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாகவுள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கை கடற்பரப்பில் அவ்வாறு கடல் கொந்தழிப்போ, கடலுக்குள் நில அதிர்வோ ஏற்பட்டு அசாதாரணமானதொரு நிலைமையை தோற்றுவிக்கவில்லை. கடற்பரப்பில் காணப்பட்ட ஒரேயொரு ஆபத்து யதெனில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்த இரசாயன பதார்த்தங்களாகும்.

ஆனால் 10 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் 19 கடல் ஆமைகளும் , பல்வகை மீனினங்களும் இறந்து கரையொதுங்கியுள்ள போதிலும் , வனஜீவராசிகள் திணைக்களம் இவற்றின் மரணத்திற்கான காரணத்தை உறுதிபடக் கூறவில்லை. 

பேர்ள் கப்பலிலிருந்து வெளியான இரசாயனங்களும் இந்த உயிரினங்களின் இறப்பிற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்களே தவிர ஸ்திரமாக எதனையும் கூறவில்லை. 

ஆனால் கப்பலிலிருந்து கசிந்து கடலில் கலந்துள்ள பெருமளவான வௌ;வேறு இரசாயன கழிவுகளே கடல் ஆமைகள் உள்ளிட்டவற்றின் இறப்பிற்கு காரணமாக இருக்கும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று சூழலியலாளர்களும் , சமுத்திரவியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

உண்மையில் 19 கடல் ஆமைகள் இறப்பில் தாக்கம் செலுத்தும் காரணி யாதென சூழலியல் ஆய்வாளர் , ஆமைகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் துஷான் கப்புருசிங்க வீரகேசரிக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.

ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்தும் இயற்கை காரணிகள்

நாட்டில் மேற்கு மற்றும் தென் கடற்பிரதேசங்களில் ஜூன் , ஜூலை மாதங்களில் சூறாவளியுடன் கூடிய காலநிலையே நிலவும். எனவே பேர்ள் கப்பல் விவகாரத்தை சற்றுபுறந்தள்ளி காலநிலையுடன் இணைத்து கவனம் செலுத்தும் போது வழமையாகவே கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்குவதை அவதானிக்க முடியும்.

காரணம் இவ்வாறு கடற்பிராந்தியங்களில் சூறாவளியுடனான காலநிலை நிலவுவதால் கடல் அலைகளால் ஆமைகள் கரையை நோக்கி அடித்துச் செல்லப்படும். அல்லது அலைகளின் வேகத்தினால் அவை கடலிலுள்ள கற்பாறைகளில் மோதி காயமடைந்து இறந்து அல்லது பலத்தகாயங்களுடன் கரையொதுங்குவது இயல்பாகும். 

இது குறிப்பிட்ட காலத்தில் வழமையாக இடம்பெறும் நிகழ்வாகும். இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலும் பல கடல் ஆமைகள் மீட்கப்படும். இது ஆமைகள் இறந்து கரையொதுங்குவதற்கு ஏதுவான இயற்கை காரணிகளில் முதலாவதாகும்.

மீன்பிடி செயற்பாடுகளும் ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்துகின்றன

கடல் ஆமைகள் இறப்பதற்கு இரண்டாவது பிரதான காரணி மீனவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்வதாகும். மீன்பிடி வலைகளில் சிக்கி அவற்றிலிருந்து வெளிவர முடியாத சந்தர்ப்பங்களில் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டு ஆமைகள் இறப்பும் வாய்ப்புக்கள் அதிகமாகும். இதேவேளை மீன்பிடி படகுகளில் அடிபட்டு இறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவ்வாறு உயிரிழக்கும் ஆமைகள் சில சந்தர்ப்பங்களில் கடலில் மூழ்கும் அதேவேளை , சில சந்தர்ப்பங்களில் கரையொதுங்கும். அதற்கேற்ப கடந்த சில தினங்களாக நிலவும் காலநிலை காரணமாக வழமையை விட இம்முறை அதிகளவாக கடல் ஆமைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ள என்று கருத முடியும்.

பேர்ள் கப்பல் இரசாயனங்களே ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்

எவ்வாறிருப்பினும் இந்த காரணிகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு , கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்குவதற்கும் பேர்ள் கப்பல் தீவிபத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அர்த்தமில்லை. எனினும் இதனை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்து ஆதாரங்களுடனேயே உறுதியாகக் கூற முடியும். பேர்ள் கப்பலிலிருந்து பிளாஸ்டிக் துணிக்கைகள், பொலித்தீன் பைகள், எரிபொருள், நைற்றிக் அமிலம், கோஸ்டிக் சோடா உள்ளிட்ட பல நச்சுப் பொருட்கள் கடலில் கலந்துள்ளன.

குறிப்பாக நைற்றிக் அமிலம் என்பது மனித சருமத்தில் பட்டால் கூட சருமம் எரிந்து பாரிய காயத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு அபாயம் மிக்கதாகும். அவ்வாறிருக்கையில் கடலில் உள்ள கல்சியம் காபனேற்றால் ஆன பவளப்பாறைகள் காணப்படுகின்ற பகுதியில் அளவுக்கதிகமான நைற்றிக் அமிலம் கலக்கும்போது, பவளப்பாறைகள் கரையக் கூடும். இதுவும் கடல் ஆமைகள் உள்ளிட்ட உயிர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நைற்றிக் அமிலம் பவளப்பாறைகள் உள்ள இடத்தில் மாத்திரம் கலக்கவில்லை. மாறாக நீர் தேங்கியுள்ள இடங்களிலும் நைட்றிக் அமிலம் கலந்திருக்குமாயின் அது குறித்த பகுதியிலுள்ள சகல உயிரினங்களுக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பேர்ள் கப்பல் தீவிபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கடல் நீர் செல்லும் திசை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியதாகவே காணப்பட்டது. அதன் காரணமாகவே நீர்கொழும்பிலிருந்து சிலாபம் , புத்தளம், கற்பிட்டி, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கப்பலின் கழிவுகள் செல்லவில்லை. மாறாக நீர்கொழும்பிலிருந்து தெஹிவளை, பாணந்துரை, வாத்துவ, களுத்துறை, காலி,மிரிஸ்ஸ, மாத்தறை தங்கல்ல - ரெகவ ஆகிய பிரதேசம் வரை சென்றுள்ளன. ரெகவ பிரதேசத்திற்கு அப்பால் இவை இதுவரையில் செல்லவில்லை. இவை சிறிது காலத்தின் பின்னர் ஏனைய நாட்டு கடற்பிராந்தியங்களை நோக்கி செல்லக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

இறந்த மீன்களில் இறக்கைகளுக்கிடையிலும் வாயிலும் பிளாஸ்டிக் துணிக்கைகள் சிக்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இரை என எண்ணி கடல் ஆமைகள் , மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இவற்றை உட்கொண்டிருக்கும். ஆனால் இவை உக்காத பொருட்கள் என்பதோடு , குறித்த உயிரிகளின் உணவு தொகுதிக்குள் இறுகி அவற்றின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையுமாகும்.

கடல் ஆமைகள் பெரும்பாலும் சிறிய மீனினங்கள் மற்றும் மீன் முட்டைகள் என்பவற்றையே உணவாக உட்கொள்ளும். அதற்கமைய பேர்ள் கப்பலிலிருந்து கடலில் கலந்த சிறிய பிளாஸ்டிக் துணிக்கைகளை இரையெனக் கருதி அவற்றை ஆமைகள் அதிகளவில் உட்கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.  இந்த பிளாஸ்டிக் துணிக்கைகள் தவிர பேர்ள் கப்பலிலிருந்து வெளியான நைற்றிக்அமிலம் போன்றவையும் இந்த உயிரினங்களின் இறப்பில் தாக்கம் செலுத்தக் கூடும்.

பவளப்பாறைகளை அண்டி ஜெலிஃபிஸ் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. எனவே பவளப்பாறைகளில் நைற்றிக் அமிலம் போன்றவை கலக்கும் போது அதனை அண்டி வாழும் இவ்வாறான உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மற்றுமொரு விடயம் ஜெலிஃபிஸ் போன்றவற்றையும் கடல் ஆமைகளின் பெரும்லாவும் உணவாக உட்கொள்ளும். எனவே இவற்றை உண்ணும் கடல் ஆமைகளில் உடலில் விஷத்தன்மையுடைய இரசாயனங்கள் கலக்கின்றன. இதுவும் கடல் ஆமைகள் உயிரிழக்க பிரதான காரணமாகிறது.

உண்மையான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை

எவ்வாறிருப்பினும் கடல் ஆமைகளின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணி எது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவற்றின் உடல்கள் ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். இதன் போது இவை எவ்வாறான உணவுகளை உட்கொண்டுள்ளன ? அவற்றின் தசைகளில் இராசாயனம் கலந்துள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட வேண்டும். இவ்வாறு இறந்து கரையொதுங்கியுள்ள 10 கடல் ஆமைகளின் உடல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றின் உயிரிழப்பிற்கு கப்பலிலிருந்துவெளியாகிய இரசாயனங்களும் காரணமாக அமையலாம் என்று சந்தேகிக்க முடியும் என்று கூறியுள்ளார்களே தவிர , ஸ்திரமாக எதனையும் கூறவில்லை. வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஆமைகளின் உடல்களை பரிசோதனை செய்வதற்கு போதிய அனுபவம் இன்மை அல்லது அதற்கு பொறுத்தமான அதிகாரிகள் இன்மை என்பனவே இந்த குறைபாட்டுக்கு காரணமாகும். ஆமைகளின் இறப்பிற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்க முடியும் என அறிக்கையிடுவது பிரயோசனமற்றது. கடல் ஆமைகளின் உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

பேர்ள் கப்பல்தீவிபத்தின் பின்னர் 19 கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் பல்வகை தன்மையுடைய கடல் ஆமைகள் உள்ளடங்குகின்றன. சிறிய மீன்களை அதிகளவான உண்ணக்கூடிய ஆமைகளே பெருமளவில் உயிரிழந்துள்ளன. 

இந்நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வு கூடத்திற்கும் உயிரிழந்த ஆமைகளின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் அறிக்கைகளும் இதுவரையில் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

சூழலியல் ஆய்வாளர் துஷான் கப்புருசிங்க தெளிவுபடுத்தல்களுக்கு அமைய கடல் ஆமைகளின் இறப்பில் பேர்ள் கப்பல் இரசாயனக்கழிவுகளே அதிகளவில் தாக்கம் செலுத்தக் கூடும். பிளாஸ்டிக் துணிக்கைகளும் , இரசாயனக்கழிவுகளும் இலங்கை கடற்பரப்பின் பௌதீக சூழலுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே போன்று கடல் ஆமைகள் மற்றும் மீனினங்கள் உள்ளிட்ட உயிரினங்களின் இருப்பிற்கும் அவை அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. 

எனவே வனஜீவராசிகள் திணைக்களம், விடயத்திற்கு பொறுப்பான ஏனைய நிறுவனங்கள் இதற்கான உண்மை காரணியை வெளிப்படுத்துவை மேலும் தாமதிக்கக் கூடாது என்பதோடு , எதிர்வரும் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32