இணையவழி கற்கையால் பாதிப்பை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் - மாணவர்கள்

Published By: Gayathri

07 Jun, 2021 | 09:59 PM
image

எஸ்.காயத்திரி

 

“எனது பெற்றோர் வேலைக்கு செல்லமுடியாத நிலையிலுள்ளனர் அதற்கு கொரோனா முடக்கநிலை காரணமாக உள்ளது. இணையவழி கல்விக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாத நிலையில் எனது பெற்றோர்கள் உள்ளனர் ” என பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் சக்தி என்ற மாணவி கூறுகிறார்.

“எமது பிரதேசத்தில் தொலைபேசி அலைவரிசைக்கான சமிக்ஞை கிடைப்பது அரிது. தொலைபேசி அழைப்பை எடுப்பதற்குக்கூட நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இந்த நிலையில் நாம் எவ்வாறு இணையவழியில் எமது கல்வி பயில முடியுமென” கேள்வியெழுப்பும் சக்தி, கல்வியில் சிறப்பாக செயற்பட்டு வகுப்பில் முதன்நிலை மாணவியாக விளங்குபவர்.

மலையகம் போன்ற பின்தங்கிய கிராமங்களில் வாழும் பிள்ளைகள் தமது பெற்றோரின் உழைப்பில் ஒருவேளை உணவை உண்பதற்கே பெரும் கஷ்டப்படுகின்றனர். பெற்றோர் தொழிலுக்கு சென்றாலும் அவர்களால் பிள்ளைகளின் பசியைப்போக்க அவர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை.

 இவ்வாறு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களால் எவ்வாறு ஒரு சிறந்த கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்து பிள்ளைகளை இணையவழியில் கல்வியைத் தொடர வைப்பது? என்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் எழத்தான் செய்கின்றது.

“எங்களுக்கு லப்டொப்போ அல்லது கல்வி பயிலுவதற்கான வேறு எந்தவித தொழில்நுட்ப உபகரணங்களோ கிடையாது. அவை குறித்த தொழில்நுட்ப அறிவுகளும் எமக்கும் இல்லை. எமது பெற்றோருக்கும் இல்லை” என மிகவும் கவலையுடன் தெரிவிக்கும் சக்தி, “ தெலைக்காட்சியில் கற்பதென்றாலும் ஒரு சில சேனல்கள் (அலைவரிசை) வேலை செய்வதில்லை.

மேலும் நாங்கள் வாழ்வது மலையக பிரதேசமாக (பொகவந்தலாவை) காணப்படுவதனால் முழுமையான சமிக்ஞை  (coverage) கிடைப்பதில்லை. நாங்கள் எவ்வாறு ஒன்லைன் வீடியோவில் கல்வி பயில முடியும் ? எங்களால் அனைத்து பாடங்களையும் கற்க முடியாதுள்ளது. ஆசிரியர்கள் வினாத்தாள்கள் மற்றும் பாடங்களை அனுப்புகின்றார்கள். ஆனால் எங்களால் அதனை பெற்றுக்கொள்ள முடிவதில்லை” என்கிறார்.

உலகளாவிய ரீதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை ஆக்கிரமித்து இலட்சக்கணக்கான உயிர்களைக்காவுக்கொள்வதையும், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும் நாங்கள் நாளாந்தம் அறிந்து வேதனைப்படுகின்றோம்.

எது எவ்வாறிப்பினும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன என்பதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இதில் முற்றுமுழுதாக  மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரைக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முற்று முழுதான மாற்றத்துடன் இணையவழி கற்பித்தல் மூலமாகவே மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட  கொரோனா வைரஸின் தாக்கம் இற்றை வரை குறைந்தபாடில்லை.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்கு, முடக்குதல், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இதன்போது அனைத்து நிறுவனங்கள் உட்பட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்தன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பெரும் விளைவுகளைச் சந்தித்துள்ளனர்.  

 

கல்வி அமைச்சின் மாற்று நடவடிக்கை

கொரோனாவின் முதலாவது அலையின்போது அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் முடங்கிய நிலையில் மாணவர்களும் சில நாட்கள் கற்றல் நடிவடிக்கைளில் ஈடுபடமால் இருந்தனர். கல்வி அமைச்சும் பல்வேறு தீர்வுத் திட்டங்களையும் நடைமுறைகளையும் அமுல்படுத்தி வந்தது.

இதன்போது தொலைக்காட்சி (TV) மூலமாக கற்பித்தல் (நேத்ரா TV, நெனச TV),  மாதிரி வினாத்தாள்களை (Model Paper) இணையவழியாக பெற்றுக்கொள்ளல்( Garu gethra.com, Mov.gov.lk, நெனச.lk, nie.lk), சுற்றறிக்கை வெளியிடல் (மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமாக கற்பிக்க வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 15 க்கு குறைவான மாணவர்களை கொண்டு கற்பிக்க வேண்டும், ஆசிரியரால் 50 வீத மாணவர்களை வரவழைக்க வேண்டும், சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், பாடசாலையில் அனைத்து கூட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டாம் ) என பல்வேறு நிபந்தனைகளைகளை உள்ளடக்கி கல்வி அமைச்சு மாற்று நடவடிக்கையை மேற்கொண்டது.

அதுமட்டுமன்றி ஒகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்திலும், டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் க.பொ.த சாதாரன தர பரீட்சை ஜனவரி மாதத்திலும் காலத் தாழ்த்தி நடத்தப்பட்டது.

 

ஆசிரியர்கள் மேற்கொண்ட மாற்று நடவடிக்கை

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கற்றல் கற்பித்தல்  நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.  அதாவது இணையவழி (Online) கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். Zoom, whatsapp video call, conferance call போன்றவற்றை பயன்படுத்தி வகுப்புக்களை நடத்தி வருகின்றனர்.

மாதிரி வினாத்தாள்களை (Model Paper) தயாரித்து அதாவது அலகு வினா விடை பத்திரம் தயாரித்து அதனை வாட்ஸ்அப் ஊடாக  மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் தொலைபேசி மூலமாக வினா விடைகளை மாணவர்களிடம் கேட்டறிகின்றனர்.

 

விடுப்பு வழங்கியுள்ளமையால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்

"பாடசாலையில் வகுப்பறையில் இருந்து கற்பிப்பதைப்போன்று மாணவர்களை முழுமையாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்த முடியவில்லை என்றும், ஒரு சில பிரதேசங்களில் போதுமான தொலைபேசி சமிக்ஞை (Coverage) இல்லையெனவும், இணையவழி கற்பித்தலுக்கான பணப்பிரச்சினை காணப்படுவதாகவும்” அவிசாவளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் 28 வயதுடைய தீபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

“அனைத்து மாணவர்களிடமும் கணினி மற்றும் கற்பதற்கு முறையான தொலைபேசி இன்மை, நவீன வசதியற்ற பாடசாலையில் கற்கும்  மாணவர்களிடம் போதுமான கணினி அறிவு இல்லாமை மற்றும் மாணவர்களை சரியாக மதிப்பிட முடியாமை அதாவது ஒன்லைன் மூலமாக கற்பிப்பதனால் மாணவர்களின் கொப்பிகளை பார்த்து திருத்தி அதனை விளங்கப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு” என்றும்  ஆசிரியர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

இவ்வாறான இணையவழி செயற்பாட்டின் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது இங்கு திறமையான மாணவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கைத்தொலைபேசியோ அல்லது கணினியோ இல்லாத நிலையில் அவர்களால் திறமையை வெளிப்படுத்த முடியாது போகும் நிலை தோன்றும். அதேவேளை, கைத்தொலைபேசி மற்றும் கணினி போன்ற உபகரணங்கள் இருந்தும் இணை சமிக்ஞை இல்லாத மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாக அமையும் சந்தர்ப்பங்களும் உண்டு.

“எழுத்து மற்றும் வாசிப்பில் இடர்பாடுடைய மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமாக முழுமையாக கற்பிக்க முடியாமல் உள்ளது. அதேவேளை கற்றல் நடவடிக்கைகளை பாடவிதானங்களை (Syllbuss) முடிக்க முடியாமை, மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காமை என்பது பாரிய சிக்கலாகவும் காணப்படுகிறது.

வீடு என்பது கற்பதற்கோ, கற்பிப்பதற்கோ ஒரு சரியான இடம் கிடையாது. எனவே மாணவர்களின் கவனம் முழுமையாக கற்றுக்கொள்வதில் இருக்காது. அதுமட்டுமன்றி ஆசியர்களுக்கோ, மாணவர்களின் பெற்றோர்களுக்கோ விசேட பொருளாதார உதவி இன்மை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

அதாவது ஒன்லைன் மூலமாக வகுப்புக்களை நடத்துவதற்கு தொலைபேசி, சிம், கணினி வாங்குவதற்கான பொருளாதார பிரச்சினைக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டியநிலை காணப்படுகின்றது” என்றார் ஆசிரியர் தீபன்.

குடும்ப சூழ்நிலைக்கு மத்தியில் திரைக்கு முன்னாள் நீண்ட நேர கற்பித்தல், கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோது மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 

கர்ப்பிணி, அங்கவீன ஆசிரியர்களால் முழுமையாக இந்த செயற்பாடுகளில் ஈடுபடமுடியாத நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதகமான விதத்திலேயே அமைந்திருக்கின்றது.

கொரோனாவின் தோற்றம் மாணவர்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒன்லைன் கற்றல் மூலமாக மாணவர்களால் முழுமையாக பாடத்தினை விளங்கிக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் சிறிய திரைகளில் அதிக நேரம் பார்ப்பதனூடாக மாணவர்களின் கண்பார்வை பாதிப்படைய அதிக சாத்தியம் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனையடுத்து மாணவர்கள்  இணையவழி கல்வியினை மேற்கொள்வதாக தெரிவித்து தொலைபேசிகளை தவறான விதத்தில் பாவிக்கக் கூடும். இதனால் அவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபாடு செலுத்தாது தவறான விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கற்றல் திறன்களும், ஒழுக்க நடவடிக்கைகளும் குறைந்துள்ளன. மேலும் கேட்டல் / பார்த்தல் போன்ற விசேட தேவையுடைய மாணவர்களுடைய நிலை என்ன ? என்பது கேள்விக்குறியாக இருப்பது வேதனைக்குறிய விடயமாகும்.

இதேபோன்று கல்வி அறிவு குறைவான பெற்றோர்களினால் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களால் பாடங்களை விளங்கப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் நாடு முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தொழில் இல்லாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக பொருளாதார  சிக்கல் இருக்கக் கூடும். 

எனவே அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பதற்கான  ஒன்லைன் சேவையை சரியாக பெற்றுக்கொடுக்க முடியாத காரணத்தினால், அநேகமான மாணவர்கள் ஒன்லைன் வகுப்புக்களுக்கு சமுகமளிப்பதில்லை.

கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைள் எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம்? எமது சமூகத்திலே வசதி படைத்த மாணவர்களும் வசதியற்ற மாணவர்களும்  இருக்கிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வசதியற்ற மாணவர்களால் இதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

இந்த கொரோனா பெருந்தொற்றுடன் கூடிய முடக்க நிலையும் சீரற்ற காலநிலையும் பாடசாலை விடுமுறையும் இவ்வாறு நீண்ட நாட்களுக்கு மாதக்கணக்கில் தொடருமாயின் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04