கப்பலிலிருந்து எரிபொருள் கசிந்தால் கடற்பரப்பில் கலப்பதை தடுக்க முடியாது - தேசிய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

Published By: Digital Desk 3

28 May, 2021 | 11:17 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்திற்கு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் அதிகரிக்குமாயின் அதிலுள்ள எரிபொருள் கடலில் கலப்பதை தடுக்க முடியாது.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக உபகரணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடற்பரப்பில் பரவுவதை தடுப்பதும் சிரமமாகும். எனவே எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தூய்மைப்டுத்துவதே தற்போதுள்ள ஒரே மாற்று வழி என்று தேசிய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹன்டாபுர தெரிவித்தார்.

இதேவேளை தீப்பரவலால் நைதரசன் வாயு வெளியேறியுள்ளமையால் அமில மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு கப்பலிலிருந்து விழுந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலரது கைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தர்ஷனி லஹன்டாபுர சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் சகல பகுதிகளிலும் தீ பரவியுள்ளது. (நேற்று காலை) தீப்பரவல் ஆரம்பித்த நாட்களை விட கப்பலின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்டிருந்த தீ ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும் கப்பலுக்கருகில் பாரிய புகை காணப்படுகிறது.

கப்பலின் முன்புறம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதால் தீப்பரவல் குறைவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். எனினும் இரு டக் இயந்திரங்கள் தொடந்தும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றுடன் இந்தியாவினதும் , துறைமுக அதிகாரசபையின் படகுகளும் தீயணைப்பு பயணிகளில் ஈடுபட்டுள்ளன.

கேள்வி : குறித்த கப்பலில் காணப்பட்ட கொல்கலன்களில் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவையே கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பல கொல்கலன்கள் கடலில் வீழுந்துள்ளன. இவற்றில் சில கரையொதுங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலைமை எமது சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது ?

பதில் : இந்த நாட்களில் காற்று வீசும் திசைக்கு அமைய இவை வடமேல் பகுதியிலேயே கரையொதுங்கியுள்ளன. களனி , வத்தளை பிரதேசத்திலிருந்து மகா ஓயா வரை காணப்படுகின்ற கடற்பரப்புக்கள் கப்பலிலிருந்து விழுந்த பொருட்களால் பாதிப்படைந்துள்ளன.

கேள்வி : குறித்த கப்பலில் முழுமையாக தீப்பரவல் ஏற்பட்டு வெடிப்புக்கள் ஏற்பட்டால் அது எமது கடற் சூழலுக்கு எவ்வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் ?

பதில் : தீப்பரவல் எந்தளவிற்கு அதிகரித்துச் செல்கிறது என்பதை அவதானித்த பின்னரே அது தொடர்பில் தீர்மானிக்க முடியும். குறிப்பான கப்பலின் கட்டுப்பாட்டளர் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதியில் எரிபொருள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள தாங்கி காணப்படுகிறது. இந்த தாங்களிலிருந்து சற்று தூர இடைவெளியில் கொண்டு செல்லும் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதி உள்ளது.

இவ்வாறிருக்க கப்பல் முழுமையாக தீப்பற்றும் போது கப்பல் போக்குவரத்துக்காக காணப்படும் 268 மெட்ரிக் தொன் எரிபொருளும் தீப்பற்றக் கூடும். இவை தீப்பற்றினால் 50 வீதமேனும் தீக்கிரையாகும். எஞ்சிய 50 வீதம் கடலில் கலக்கக் கூடும். இதேவேளை ஏதேனுமொரு வகையில் வெடிப்பு ஏற்பட்டால் அல்லது கப்பல் இரண்டாகப் பிளவடைந்தால் அதிலிலுள்ள முழு எரிபொருளும் கடலுக்குள் கலக்கும்.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எரிபொருளானது களனி கங்கையிலிருந்து மகா ஓயா வரையான கடற்பரப்பில் கலக்கும். இதன் போது குறித்த கடற்பரப்பில் எண்ணெய் படலம் ஏற்படும். இதனால் முழு கடற்பகுதியும் பாதிப்படையக் கூடும். அத்தோடு கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு எரிபொருள் கசிவு ஏற்படும் போது அது முழு கடற்பரப்பிலும் பரவாமல் தடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் உள்ளன. எனினும் தற்போது நிலவுகின்ற காலநிலையால் கப்பலுக்கு அருகில் அந்த உபகரணங்களை உபயோகிக்க முடியாது. எனவே தற்போதுள்ள ஒரே மாற்று வழி கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக அதனை சுத்தம் செய்வதேயாகும். அதற்கமைய சுத்தப்படுத்தலுக்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கேள்வி : கப்பலிலிருந்து விழுந்து கரையொதுங்கிய பொருட்கள் மக்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளன. அவை மிகவும் ஆபத்தான இரசாயன பொருட்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த மக்களுக்கு பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடுமா?

பதில் : விபத்துக்குள்ளாகியுள்ளது சாதாரண கப்பல் அல்ல. அதன் காரணமாகவே மக்களுக்கு ஆரம்பத்திலேயே இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும் மக்கள் அதனை அவதானத்தில் கொள்ளவில்லை. இது வரையில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய இந்த பொருட்களை எடுத்து சென்ற சிலரது கைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். நாம் எதிர்பார்க்காதளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இனியாவது கரையொதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று கட்டுக் கொள்கின்றோம்.

சுற்று சூழல் அதிகாரசபை, கடல்வள பாதுகாப்பு திணைக்களம், கடற்படை உள்ளிட்ட முப்படையினரின் உதவியுடன் இதனை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எனவே மக்களை இதில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றோம்.

கேள்வி : கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக எமது சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு எதிராக முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கை யாது ?

பதில் : ஏதேனுமொரு வகையில் கவனக்குறைவு அல்லது தவறு ஏற்பட்டுள்ள இனங்காணப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இதே போன்று சுற்று சூழல் பாதிப்பு உள்ளிட்ட ஏனைய பாதிப்புக்கள் தொடர்பில் சிவில் பொறுப்பு கூறல் குறித்த ஏற்பாடுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

குறிப்பாக சுற்று சூழல் பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் போது , தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடல் நீரின் நிலைமை இராசயான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதே போன்று காற்று மாசு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றினடிப்படையில் எமது கடற்பரப்பிற்கு எந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது மதிப்பிடப்படும்.

விசேடமாக இந்த வலயம் மிக முக்கியத்துவமுடைய கடற் பிராந்தியமாகும். கடற்றொழில் நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்றவொரு வலயமாகும். சுற்றாடலைப் போன்று , எமது பொருளாதாரத்திற்கும் மீனவர்களுக்கும் எந்தளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்பதும் மதிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் பேராசிரியர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்று காணப்படுகிறது. இணையவழியூடாக தினமும் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. எனவே நாடு என்ற ரீதியில் இதற்கு எதிராக எடுக்கக் கூடிய அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : இதன் மூலம் அமில மழை ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில் : ஆம். அமில மழை ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. நைதரன் வாயு வெளியாகியுள்ளது. இந்த வாயு மழையுடன் சேர்ந்து அமில மழையாக நிலத்தில் பெய்யும். அவ்வாறு ஏற்பட்டால் அது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். குறித்த கடற்பகுதியை அண்மித்த பகுதிகளுக்கு இதன் மூலம் அதிக பாதிப்புக்கள் காணப்படுகின்றன. அத்தோடு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அமில மழை பெய்தால் எமது தோல்களில் எரிச்சல் தன்மை உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக உலோக பொருட்கள் , பொது வெளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புக்கள் அதிகம். எனவே அவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மக்களும் நேரடியாக மழையில் நனையக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33