கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 3

19 May, 2021 | 09:18 AM
image

பாராளுமன்றில் இன்று (19.05.2021) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் பின்னர், நாளை (20.05.2021) பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்றையதினம்  இடம்பெற்றது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அமைய, அவசியமான திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டு பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தி வாக்கெடுப்பிற்கு விட நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றில்  சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நேற்று சபையில் அறிவித்தார்.

துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபையில் சபாநாயகர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலதின் சில  சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லையெனவும், எனவே சட்டமூலத்தில் சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  நிருபிக்கப்பட வேண்டுமென சட்டமூலம் தொடர்பான நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்தார்.

இந்நிலையில் இன்றும் நாளையும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் அறிவிப்பின் போது, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பிலான உயர் நீதிமன்ற வியாக்கியானம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்போது,

சட்டமூலத்தின் வாசகங்கள் 3(6),30(3) இரண்டாம் காப்பு வாசகம் ,55(2) மற்றும் 58(1) ஆகியவற்றின் ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,

சட்டமூலத்தின் வாசகங்கள் 3(5) காப்பு வாசகம் 3(7), 6(1)(ஆ ), 30(3) முதலாவது காப்பு வாசகம், 71(1) மற்றும் 74 (பொருள் கோடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ) ஆகியவற்றின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 12(1) ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,

சட்டமூலத்தின் வாசகங்கள் 3(4),6(1)(ப), 68(1)(ஊ) மற்றும் 68(3)(அ) ஆகியவற்றின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 3 மற்றும் 4ஆம் உருப்புரையுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 76 ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடனும் 83ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டாலும் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,

சட்டமூலத்தின் வாசகங்கள் 52(5) மற்றும் 72(2)(ஞ)ஆகியவற்றுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 52(3) ஆம் வாசகத்தின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 3,4, மற்றும் 76 ஆம் உறுப்புரைகளுடனும் சேர்ந்து வாசிக்கப்படும் 148ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2) உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பன்மையுடனும் 83ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டாலும் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,

சட்டமூலத்தின் வாசகங்கள் 30(1), 33(1),40(2) மற்றும் 72(2)(ஐ)ஆகியவற்றின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 14(1)(எ ) ஆம் உருபுரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,

சட்டமூலத்தின் வாசகம் 53(3)(ஆ ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் 52(2)(ஆ )ஆம் வாசகத்தின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 3,மற்றும் 4ஆம் உருப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 76ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடனும் 83ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டாலும் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும்,ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்,  

சட்டமூலத்தின் வாசகங்கள் 60(இ) மற்றும் வாசகம் 60(ஊ) ஆகியவற்றின் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 148ஆம் உருப்புரையுடன் ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வாசகங்கள் திருத்தப்படின் சொல்லப்பட்ட ஒவ்வாமைகள் இல்லாதொழியும் எனவும்

சட்டமூலத்தின் வாசகம் 37இன் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பின் 12(1)மற்றும் 14(1)(எ) ஆம் உருப்புரையுடன்  ஒவ்வாததாக உள்ளதுடன் அரசியல் அமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும். ஆயினும் அத்தகைய அதிகார இடப்பரப்பிற்கு வெளியே ஆனால் இலங்கையின் ஆள் புலத்தினுள்ளே நடத்தப்படும் ஒத்த வியாபாரங்களுக்கு தடையாக, கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகார இடப்பரபிற்கு வெளியே வியாபாரத்தில் ஈடுபடும்போது இந்த சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் ஏதேனும் விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆள் பயன்படுத்துவதை தடுக்கும் புதிய சட்ட வாசகமொன்று சட்டமூலத்தின் வாசகம் 37 இற்கு சேர்க்கப்பட்டால் சொல்லப்பட்ட ஒவ்வாமை இல்லாதொழியும். சட்டமூலத்தின் எஞ்சியுள்ள வாசகங்கள் அரசியல் அமைப்புடன் ஒவ்வாததாக இல்லையென உயர் நீதிமன்றத்தின் தீர்மானித்திருந்தது என நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபையில் வாசித்ததுடன் நேற்றைய தினத்திற்கான நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ அறிக்கையுடன் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் அச்சிடப்பட வேண்டுமென கட்டளையிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் சபையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நாளை பிற்பகல் நான்கு மணிக்கு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53