ஓன்று கூடுவதைத் தவிர்த்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்போம்: த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.தே.கூ பகிரங்க அழைப்பு

Published By: J.G.Stephan

16 May, 2021 | 07:46 AM
image

(ஆர்.ராம்)
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிதப்பேரவலத்தின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்கும் அதேநேரம், பொதுவெளியில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமித் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிடத்தில் கோரியுள்ளது. 

கொரோனா பரவல் மிகவும் மோசமாக காணப்படுகின்ற நிலையில் அனைவரும் தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே நினைவேந்தலை ஏகநேரத்தில் முன்னெடுக்குமாறும் மேற்படி அரசியல் கூட்டுக்கள் கோரியுள்ளன. இனப்படுகொலைக்கான நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழினம் மீண்டும் கொரோனா போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காதிருப்பதற்காகவே இவ்விதமான தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அந்த அரசியல் கூட்டுக்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், “எமக்கு சமூகம் தொடர்பான கடமையும், பொறுப்பும் உள்ளது. எமது மக்கள் முழு நாட்டிற்கும், உலகிற்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆகவே தமிழின உணர்வுகளுடன் வேரூன்றியுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இம்முறை ஒன்றுகூடல்களைத் தவிர்த்து முன்னெடுக்குமாறு கோருகின்றோம். தற்போது கொரோனா பரவல் நிலைமைகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ள நிலையில் எமது மக்களை ஒருங்கிணைச் செய்து மற்றுமொரு நெருக்கடிக்குள் அவர்களைத் தள்ளி விடமுடியாது. ஆனாலும் தமது உறவுகளுக்கான அஞ்சலிகளை உரிய முறையில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்றார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எமது மக்கள் இனப்படுகொலைக்கு முகங்கொடுத்து தற்போதுவரையில் அதிலிருந்து மீள முடியாதுள்ளார்கள். சர்வதேசத்திடம் நீதி கோரி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நிலையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் தீவிரத் தன்மையை உணர்ந்து செயற்படுவது எமது பாரிய கடமையாகின்றது. ஆகவே பொதுவெளியில் ஒன்றுகூடுவதை தவிர்த்து, இணைய வழியிலோ அல்லது அனைவரும் ஏகோபித்து அங்கீகரிக்கும் பிறதொரு வழியிலோ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டும். 

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் தமிழினப் படுகொலைக்கான நீதிக் கோரிக்கை மட்டுமல்ல, நினைவேந்தலைச் செய்வதையே விரும்பவில்லை. அதனாலேயே நினைவுத்தூபியை உடைத்தழித்துள்ளது. ஆகவே, இந்த அரசாங்கம் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு இடமளிக்கும் என்றும் கருதவில்லை. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை தான், அங்கு மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தி நினைவேந்தல் முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

அதேநேரம் நினைவேந்தலை முன்னெடுப்பதற்காக பொதுவெளியில் தற்போது கூடுகின்ற போது, கொரோனாவின் பெயரால் எமது மக்களை வேறுவேறு பொறிமுறைகளை வகுத்து இலங்கை அரசாங்கம் அதனை முடக்கவே முனையும். குறிப்பாக கொரோனா பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்தி எமது மக்கள் மீது திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, எமது மக்கள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்காக, அச்சுறுத்தப்படுவதையோ, அடக்குமுறைக்கு உள்ளாவதையோ தடுப்பதாக இருந்தால் ஒன்று கூடலைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகின்றது என்றார். 

அதேநேரம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்கம் நினைவுத்தூபியை அழித்தல் உட்பட எத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கொரோனா சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்