இலங்கை முதல் லண்டன் - ஹரோ வரை : துணை மேயர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா செவ்வி

Published By: J.G.Stephan

15 May, 2021 | 02:21 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் பிறந்து, வளர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா லண்டனில் ஹாரோவுக்கான முதல் தமிழ் பெண் துணை மேயராகத் தெரிவாகியிருக்கிறார்.

மே 5 ஆம் திகதியன்று நடைபெற்ற ஹாரோ நகரசபைக்கூட்டத்தில் துணை மேயராகத் தெரிவான அவர், அரசியலை விடவும் சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவராக இருக்கின்றார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று, வேறொரு நாட்டில் அரசியல் களத்தில் சாதித்துக்கொண்டிருக்கும் சசிகலா சுரேஷை நேர்காணலொன்றுக்காக இணைத்துக்கொண்டோம்.

அவருடனான முழுமையான நேர்காணல் வருமாறு:

கேள்வி : இலங்கையில் பிறந்து, வளர்ந்த நீங்கள் பின்னர் லண்டனுக்குச் சென்றதுடன், தற்போது அங்கு அரசியல் களத்திலும் பணியாற்றி வருகின்றீர்கள். இலங்கையில் உங்களுடைய பூர்வீகம், லண்டனுக்கான புலம்பெயர்வு, அங்கு உங்களுடைய ஆரம்பகாலம் ஆகியவை தொடர்பில் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பதில்: ஆம், நிச்சயமாக. என்னுடைய தந்தை ஆறுமுகம் இராசரத்தினம் யாழ்ப்பாணம் இணுவிலையும் தாய் சௌந்தரராணி நீர்வேலியையும் சேர்ந்தவர்கள்.

நான் நீர்வேலியில் பிறந்து, வளர்ந்ததுடன் வேம்படி மகளிர் கல்லூரியிலேயே உயர்தரம் வரை கல்வி கற்றேன். பின்னர் மேற்படிப்பிற்காக லண்டன் வந்ததுடன், இங்கு கணக்கியலில் பட்டம் பெற்றேன்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரங்களைத் தொடர்ந்து எனது தம்பியும் தங்கையும் லண்டனுக்கு வந்துவிட்டனர். அப்போது நான் லண்டனில் தொழில்புரிந்து கொண்டிருந்ததுடன் அவர்களது தேவைகளையும் கவனித்துக்கொண்டேன்.

தொழில்புரியும் இடத்திலேயே எனது கணவர் சுரேஷ் கிருஷ்ணாவை முதன்முதலாகச் சந்தித்தேன். அவர் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மொழிப்பிரச்சினையை எதிர்கொண்டிருந்தமையால், அவர்களுக்கு அவசியமான உதவிகளைச் செய்வார்.

நாங்கள் இருவரும் திருமணம் புரிந்துகொண்டதன் பின்னர், எங்களுடைய நண்பர் ஒருவர் 1997 ஆம் ஆண்டில் தொழிற்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார்.

அப்போது அக்கட்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தேவையாக இருந்ததால், அந்தக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அவர் கோரினார்.

உண்மையில் எமக்கு அரசியலில் நாட்டம் இருக்கவில்லை. அதனால் நாம் ஏன் அரசியல் கட்சியொன்றில் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே அப்போது எமது கேள்வியாக இருந்தது. எனினும் நாம் சமூகசேவைகளில் ஈடுபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருந்தமையால், அரசியல் ரீதியில் ஆதரவிருந்தால் இன்னமும் அதனைத் திறம்படச்செய்யமுடியும் என்று கருதி தொழிற்கட்சியில் இணைந்துகொண்டோம்.

கேள்வி :  சமூகசேவைகளில் ஆர்வம்கொண்டு ஆரம்பித்த உங்கள் அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமைந்திருந்தன?

பதில் : தொழிற்கட்சியில் இணைந்துகொண்டதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் நகரசபைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டேன். அப்போது என்னை வேட்பாளராக நிறுத்திவிட்டு, எனது கணவர் எனக்காகப் பிரசாரம் செய்தார்.

அதன்மூலம் நகரசபை உறுப்பினராகத் தெரிவானேன். அதன்பின்னர் மீண்டும் 2010 ஆம் ஆண்டில் நானும் எனது கணவரும் நகரசபை உறுப்பினர்களாகத் தெரிவானோம்.

அப்போது நாங்கள் இருவரும் ஹாரோ நகரத்தின் இருவேறு வட்டாரங்களில் களமிறங்கினோம். அப்போது எமக்குத் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் மேலும் பலர் மத்தியிலும் பெரும் ஆதரவு காணப்பட்டது.

அரசியல் மூலம் மக்களுக்கு அவசியமான உதவிகளையும் சேவைகளையும் செய்யமுடியும் என்ற எதிர்பார்ப்பிலேயே அரசியலுக்குள் வந்தோம். அதேபோன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டிருந்த மொழிப்பிரச்சினையைக்குத் தீர்வை வழங்குவதற்கும் முற்பட்டோம்.

கேள்வி : இலங்கையில் பிறந்து, வளர்ந்த நீங்கள் இப்போது லண்டனில் அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கை அரசியல்களத்தில் எத்தகைய குறைபாடுகள் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் : உண்மையில் இலங்கையின் அரசியலுக்கும் லண்டன் அரசியலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இலங்கையில் அரசியல்வாதிகள் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்திருக்க முடியும். எனினும் அவர்கள் எதனையும் செய்யவில்லை. இப்போதும் இலங்கையர்கள் சிலர் எம்மைத் தொடர்புகொண்டு உதவிகளையும் ஆலோசனைகளையும் பெறுவதுண்டு.

அதேபோன்று எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் எமது கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய சுதந்திரம் லண்டனில் உள்ளது. இலங்கை என்பது பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழிருந்த நாடாகும். எனவே இங்குள்ளதைப் போன்ற சுதந்திரம் இலங்கையிலும் இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.

கேள்வி : அதேவேளை புலம்பெயர்ந்து சென்று லண்டனின் அரசியல் களத்தில் இயங்கும் நீங்கள், தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எத்தகைய பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறீர்கள்?

பதில் : இதற்கான பதிலில் முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது, நாம் தமிழர்கள் தொடர்பில் காணப்பட்ட பிம்பத்தை மாற்றியமைத்திருக்கிறோம். ஏனெனில், முன்னர் தமிழர்கள் என்றால் 'பயங்கரவாதி' என்றே முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதனால் ஹாரோவில் தமிழர்களுக்கான அடையாளத்தை மீளுருவாக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அந்த அடையாளத்தைக் கட்டமைத்ததுடன் எமது கலாசாரம் எத்தகையதென்றும் நாம் இங்கிருப்பவர்களுக்குக் காண்பித்தோம்.

அதேபோன்று இங்குள்ள பாடசாலைகளில் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான ஊக்குவிப்பை வழங்கினோம்.

ஹாரோ கவுன்ஸிலில் 2010 ஆம் ஆண்டில் முதற்தடவையாக பொங்கல் விழாவை தமிழ் கலாசாரத்தின்படி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அதனைத்தொடர்ந்து இப்போதுவரை 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஹாரோ கவுன்ஸிலில் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றோம். லண்டனில் தமிழ் கலாசாரம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்குச் செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்துவருகின்றோம்.

கேள்வி -:நீங்கள் ஓர் இலங்கைத் தமிழர் என்ற வகையில், தற்போது இலங்கையில் சிறுபான்மையினத் தமிழ் மற்றும் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் : எந்தவொரு நாடாக இருந்தாலும் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும்.

அத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்வதும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இலங்கை அரசியல்வாதிகளின் பொறுப்பாக இருக்கவேண்டும். இலங்கையில் இடம்பெறும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும், அவற்றை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கையிடமே உள்ளது.  

கேள்வி -:இப்போது நீங்கள் லண்டனில் அரசியலில் ஈடுபட்டாலும் கூட, உங்களது தாய்நாடான இலங்கைக்கு எத்தகைய உதவிகளைஃ ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றீர்கள்?

பதில் : எங்களுடைய தாய்மண்ணுக்காக எந்தவொரு உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். குறிப்பாக மலையகத்தில் பம்பரல்ல என்ற பகுதியிலிருந்து தொடர்புகொண்டு, அங்குள்ள கோவில் ஒன்றை விரிவுபடுத்துவதற்கு உதவிகோரினார்கள்.

எனது கணவர் அதனை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்கினார். அதேபோன்று மட்டக்களப்பிலும் மிகவும் பின்தங்கிய பிரதேசமொன்றில் உள்ள கோவிலொன்றுக்குச் செல்லும் வழிகள் மிகவும் இருள்சூழ்ந்து காணப்பட்டமையால் அதற்கு மின்விளக்குகள் பொருத்துவதற்கான உதவிகளை வழங்கினோம்.

பின்னர் அக்கோவிலுக்கு வழிபாட்டிற்கான வருகைதருபவர்கள் அமர்ந்து இளைப்பாறக்கூடிய வகையிலான மண்டபமொன்றை நிர்மாணித்து வழங்கினோம்.

இப்போது கிளிநொச்சியில் பின்தங்கிய பகுதியொன்றில் அமைந்துள்ள கோவிலுக்கு மண்டபொன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அவை விரைவில் பூர்த்தியடையும்.

கேள்வி : நிறைவாக புலம்பெயர்ந்துவாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில் : குறிப்பாக தமிழ்ப்பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்வரவேண்டும். அதேபோன்று அனைத்துத்துறைகளிலும் அவர்கள் முன்வந்து செயற்பட வேண்டும்.

மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இன்னும் யுத்தவடுக்களிலிருந்து மீண்டுவராத நிலையொன்று உள்ளது. அவர்கள் அதிலிருந்து மீளவேண்டும். அதற்கு எம்மாலான பங்களிப்பை வழங்குவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49