நாடுமுழுவதிலும் இயங்கும் இலங்கை வங்கி கிளைகள் மற்றும் மக்கள் வங்கி கிளைகளின் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளை செய்து கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கபட்ட வரவு செலவு திட்டத்தில் சலுகைகள் குறைக்கபட்டுள்ளதாகவும் இதுவரை வங்கியின் மூலம் நடைமுறையில் இருந்து வந்த வாகன லீசிங் முறையை இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வங்கிகளில் உள்ள ஏ.டீ.எம் மூலம் பணம் பெறும் இயந்திரங்கள் அனைத்தும் தடைசெய்யபட்டுள்ளது. அந்தவகையில் அக்கரபத்தனை, தலவாக்கலை, நுவரெலியா, ஹட்டன் பொகவந்தலாவ, மஸ்கெலியா ஆகிய வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் பணம் வைப்பு செய்ய முடியாமலும் பணம் மீளப்பெற முடியாமலும் வீட்டுகளுக்கு திரும்பி சென்றனர்.

அத்தோடு இப்பகுதியில் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.