குறைமதிப்பீட்டு காப்புறுதியால் குலைந்துபோயுள்ள யாழ்.தீயணைப்பு சேவை

13 May, 2021 | 02:43 PM
image

-ஆர்.ராம்-

யாழ்.குடாநாட்டுக்கான  தீயணைப்புச் சேவையை வழங்கிவரும் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு சேவைப் பிரிவானது பத்து மாதங்களுக்கு அதிகமாக வினைத்திறனான சேவையை வழங்க முடியா நிலையில் உள்ளது.

குடா நாட்டு மக்களை தீயால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தீயணைப்பு சேவைப் பிரிவானது கையறு நிலைமையில் இருக்கின்றது.

அந்நிலைக்கு, தீயணைப்பு வாகனத்திற்கான காப்புறுதி விடயத்தில் யாழ்.மாநகர சபையின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளின் (முன்னாள் மற்றும் இன்னாள்) பொறுப்பற்ற செயற்பாடுகளும், முகாமைத்துவ பலவீனமுமே காரணமாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தீயணைப்பு சேவைப் பிரிவு வினைத்திறனான சேவையை வழங்க முடியாத நிலையில் இருக்கும் கடந்த பத்து மாதங்களில் யாழ்.குடாநாட்டில் 23 தீப்பரவல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முக்கியமாக நிகழ்ந்த இரண்டு வேறுவேறு வகை தீப்பரவல் சம்பவங்கள் தீயணைப்பு சேவையின் “ இயலாமையை” அம்பலமாக்குகின்றது.

நான்கரைக் கோடி ரூபா முதலீட்டில் நான்கு தசாப்த காலமாக யாழ்.மானிப்பாய், ஆலடிச் சந்தியில் “ சந்திரன் மரக்காலை” என்ற பெயரில் தொழில் முயற்சியை முன்னெடுத்து வருபவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 40வயதுடைய தங்கராஜா சந்திரமோகன்.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி அன்று அவருடைய தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் அதுபற்றிய தகவல் சந்திரமோகனுக்கு கிடைக்கவும் 15 நிமிடங்களிலேயே தொழிற்சாலையை அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

யாழ்.தீயணைப்பு சேவைப் பிரிவுக்கு உடன் அழைப்பு விடுத்ததாகவும், யாழ்.தீயணைப்பு பிரிவிலிருந்து வெறும் ஐந்தரைக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தனது மரக்காலையை  25நிமிடத்திற்கு பின்னரே தீயணைப்பு வாகனம் வந்தடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான்கரை மணிநேர போராட்டத்தின் பின்னரும், தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது போனதாகவும், மானிப்பாய் பிரதேச சபை மற்றும் பொலிஸ், இராணுவம் ஆகிய தரப்பினரின் உதவியுடனேயே தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார் சந்திரமோகன்.

தீப்பரவலால் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து கவலை தோய்ந்த முகத்துடன் விபரித்த சந்திரமோகன், “12 ஏக்கரில் இயங்கிவரும் எனது தொழிற்சாலை வங்கிகடன் உதவியுடனேயே முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட தீயினால் 40 முதல் 60இலட்சம் பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிற்சாலையை நடாத்திவருவதால், காப்புறுதி தொடர்பிலும் அதிகளவில் கவனம் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தற்போது வங்கிக் கடன், மூலம்பொருட்களுக்கான மீள் முதலீடு, மின்சாரக்கட்டணம் என்று அனைத்து செலவீனங்களையும் சுமூகமாக முன்னெடுக்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

தீயணைப்பு வாகனம் முறையாக செயற்பட்டிருந்தால் தீப்பரவலை தடுத்திருக்கலாம் என்றும் மரக்காலையின் மூலப்பொருட்களையும் பாதுகாத்திருக்கலாம் என்று குறிப்பிடும் சந்திரமோகன், மிகப் பழமையான தீயணைப்பு வாகனத்தினால் உடன் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலைமையை தான் உள்ளிட்ட பலர் நேரில் கண்டு உணர்ந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.

இவ்வாறிருக்க, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி அன்று, யாழ்.நாவற்குழியில் உள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக இரவு 9.30மணியளவில் கிடைத்த அழைப்பை அடுத்து, யாழ்.தீயணைப்பு வாகனம் அங்கு சென்றிருந்தது.

இந்நிலையில், யாழ்.மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்டதும் தீயணைப்பு பிரிவு அலுவலகத்திலிருந்து வெறும் நூறுமீற்றரில் அமைந்திருந்த 'கிட்டு' பூங்காவின் முகப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக 10மணியளவில் பிறிதொரு அழைப்பு கிடைத்தபோதும் அதுதொடர்பில் தீயணைப்பு பிரிவால் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்க முடிந்திருக்கவில்லை.

தீயணைப்பு வாகனம், மாநகர சபை எல்லையை விட்டு வெளியே சென்றிருந்தமையால் அதனால் உடனே திரும்ப முடிந்திருக்கவில்லை. அத்துடன் 'கிட்டு' பூங்காவின் முகப்பில் ஏற்பட்ட தீப்பரவல் பாரிய அளவில் இல்லாமையினால் நிலைமைகள் மோசமாகியிருக்கவில்லை. அவ்வாறு இல்லையென்றால், விளைவுகள் பாரதூரமாகவே இருந்திருக்கும் என்று தீயணைப்பு பிரிவில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ்.மாநகர எல்லைக்குள் நடைபெறும் தீ அனர்த்த சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதையே முதன்மையான கடமையென்று தீயணைப்பு பிரிவின் பிரதான கடமைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதும் அக்கடமையை நிறைவேற்ற யாழ்.தீயணைப்பு சேவைப் பிரிவு தவறியுள்ளது.

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள்ளேயோ அல்லது குடாநாட்டின் எப்பாகத்திலோ கணிசமான தீப்பரவல் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போது தீயணைப்பு சேவைப் பிரிவு இருக்கின்றது என்பதையும், ஒரே தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தீப்பரவல் அல்லது அனர்த்த சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை கையாள முடியாத நிலைமையிலேயே அக்கட்மைப்பு உள்ளதென்பதையும் மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் சான்று பகர்ந்துள்ளன.

தற்போது யாழ்.தீயணைப்பு சேவைப் பிரிவில் 1986ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட மிகப் பழமையான தீயணைப்பு வாகனமே பயன்பாட்டில் உள்ளது. இதற்கு உறுதுணையளிக்கும் வகையில் தண்ணீர் தாங்கி வாகனமொன்றும் பயன்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே பயன்படுத்த முடியாதென ஒதுக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தில் சிறுசிறு திருத்தங்கள் செய்யப்பட்டு மீளப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தினால், மிதமான வேகத்தில் குறிப்பிட்டளவு தூரமே பயணிக்க முடியும் என்றும் தீயணைப்பு சேவைப் பிரிவில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்கள் கூறினார்கள்.

பழைய வாகனத்தின் நிலைமைகளை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே 2014 ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி WP ZA 4285 என்ற இலக்கமுடைய (Fire Fighting water Tender) வகையைச் சேர்ந்த புதிய தீயணைப்பு தண்ணீர் தாங்கி வாகனமானது மாநகர சபை நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வாகனம் ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டு பின்னர் மத்திய அரசாங்கத்தினால் யாழ்.மாநகர சபையிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாகும். இந்த வாகனத்தின் கொள்வனவுப் பெறுமதி 34,725,000 ரூபாவாகும்.

இந்த வாகனம் யாழ்.தீயணைப்பு சேவைப்பிரிவின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு 65முதல் 75வரையிலான தீப்பரவல் சம்பவங்களை எதிர்கொண்டு அவை வெற்றிகரமாக கையாளப்பட்டதாகவும் தீயணைப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தீயணைப்பு பிரிவு ஊழியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

ஆனால் குறித்த வாகனம், கடந்த 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் திகதி மணற்காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற சமயத்தில் கோப்பாய் பொலிஸ்பிரிவுக்கு உட்பட நீர்வேலிப் பகுதியில் பிற்பகல் 2மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூன்று தீயணைப்பு வீரர்களில் திருநகரைச் சேர்ந்த அரியதாஸ் சகாராஜர் விபத்தில் மரணமடைந்தோடு சாரதியாக கடமையாற்றி செ.விக்கினேஸ்வரன், அ.விஜயதுரை ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினார்கள்.

“ தீயணைப்பு வாகனத்தின் முன்பக்கச் சில்லு காற்றுப் போனதன் காரணமாகவே வாகனம் தடம்புரண்டு விபத்து சம்பவித்தது” என்று அதில் பயணித்தவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்தததாக பொலிஸார் வழங்கியுள்ள விபத்துப்பற்றிய ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், விபத்தில் மரணம் சம்பவித்தமையால் பொலிஸாரால் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு (வழக்கு இலக்கம். BR/281/MT/2020) தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான தீயணைப்பு வாகனம் சம்பவம் நிகழ்ந்த மூன்று நாட்களின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ்.மாநரக சபையின் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் பழைய வாகனங்கள் தரிப்பிடத்திற்குள் மூடிக்கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து மாதங்களாக, இந்த வாகனத்தினை மீள இயக்குவதற்கான முயற்சிகளை மாநகர சபையின் எந்திரப் பொறியலாளர் பிரிவு எடுத்திருந்தபோதும் அம்முயற்சிகள் சாத்தியமாகியிருக்கவில்லை என்பது வாகன விபத்து சம்பந்தமாக யாழ்.மாநகர சபையின் தற்போதைய ஆணையாளர் ரி.ஜெயசீலன் மற்றும் பொறியியலாளர் வி.என்.ராஜவரதன் ஆகியோரால் இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீயணைப்பு வாகனத்தின் பெறுமதி குறைக்கப்பட்டு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் காப்புறுதி செய்யப்பட்டுள்ளமையால் தற்போது வாகனத்தினை திருத்துவதற்காக இயந்திர பொறியிலாளரின் அறிவுத்தலுக்கு அமைய Lanka Development Network (pvt) Ltd நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையான 72,57,600 ரூபாவை மாநகர நிருவாகத்தினால் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு வாகனம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அந்த வாகனத்தின் முக்கிய பாகங்களுக்கான பெறுமதி 69,90,000ரூபாவாக வரையறுக்கப்பட்டு அந்த தொகைக்கே காப்புறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும், அந்த அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீயணைப்பு வாகனத்தின் உண்மையான பெறுமதித்தொகைக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் வருடாந்தம், 3,67,354ரூபா செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை காப்புறுதி நிறுவனம் தெரிவிக்கின்றது. 

அதுமட்டுமன்றி, காப்புறுதி சேவை பெறுநருக்கு முழுமையான விபரங்கள் தங்களால் வழங்கப்படுகின்றபோதும் சேவை பெறும் வடிக்கையாளரின் விருப்பத் தெரிவிற்கே காப்புறுதி தொகை இறுதி செய்யப்படுவதாகவும் அத்தொகைக்குரியவாறே காப்புறுதி வசதிகளும் அமைகின்றன என்றும் அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, யாழ்.மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்ட குறித்த தினத்திலேயே இதேபோன்றபிறிதொரு வாகனம் மட்டக்களப்பு மாநரசபைக்கும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, தீயணைப்பு வாகனம் மாவட்டம் முழுவதும் சேவையை வழங்குவதால் அதன் உண்மையான பெறுமதித்தொகைக்கு “முழுமையான காப்புறுதி” செய்யப்பட்டுள்ளது என்பதை அம்மாநகர சபையின் ஆணையாளர் மா.தயாபரன் உறுதிப்படுத்தினார்.

அவ்வாறிருக்க, குறைமதிப்பீட்டுத்தொகைக்கான காப்புறுதி, விபத்துக்குள்ளான வாகனத்தின் மீள் திருத்தப்பணிகள் தொடர்பில் 2017ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் பதவியில் நீடித்துக்கு கொண்டிருக்கும் தற்போதைய ஆணையாளர் ரி.ஜெயசீலனிடத்தில் வினவியபோது, “கடந்த காலத்தில் செலுத்தப்பட்டதற்கு அமைவாக காப்புறுதி கட்டணம் செலுத்தப்பட்டது. அதுபற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.

ஆனால், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட விபத்து பற்றிய அறிக்கையில், “ காப்புறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளல், காப்புறுதித் தொகை பற்றிய நிர்வாகக் கட்டளைகள் எவையும் கோவைகளில் காணப்படவில்லை. காப்புறுதித் தொகையில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் உரிய உத்தியோகத்தர்களால் அறிக்கையிட்டிருக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“குறித்த வாகனம் மாநகர சபையின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடந்த 2020ஆம் ஆண்டில் வாகனத்தின் பெறுமதி மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய தேவை காணப்பட்டது. ஆனால் அச்செயற்பாடு நிறைவடைவதற்குள் விபத்து ஏற்பட்டுவிட்டது” என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாரால் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், “மாநகர ஆணையாளரின் அறிக்கை கிடைத்தது. ஆனால் தற்போது வரையில் எந்த குழுவும் நியமிக்கப்பவில்லை. அதுபற்றி நீண்ட ஆய்வுகளை நடத்தி வருகின்றோம்” என்று வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் குறிப்பிட்டார்.

தீயணைப்பு வாகனத்தின் காப்புறுதி விவகாரம் உள்ளிட்ட அதனோடு தொடர்புடைய விடயங்கள் பற்றி முன்னாள் மாநாகர ஆணையாளர்களிடத்தில் விளக்கங்களை அல்லது விசாரணைகளைக் முன்னெடுப்பதற்கான குழுவை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக உள்ளூராட்சி அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், இவ்விவகாரங்களுடன் தொடர்புகளுடைய ஆணையாளர்கள் நிருவாக சேவையில் விசேட நிலையில் உள்ளவர்கள் என்றும் அவர்களிடத்தில் விசாரணைகளை முன்னெடுப்பதாக இருந்தால் அவர்களை விட சிரேஷ்டத்துவம் வாய்ந்தவர்களே குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டியும் உள்ளது.

இதன் காரணமாகவே தற்போது வரையில் “விசாரணை அல்லது விளக்கம் கோரும் குழு” நியமிக்கப்படுவதில் இழுபறிகள் நீடிப்பதாகவும் அடுத்துவரும் காலத்தில் பிரதம செயலாளரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவிருப்பதாகவும் அந்த அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆனால், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனோ, “மாநாகரசபையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளான செய்தியை ஊடகங்களின் ஊடாக அறிந்ததன் பின்னர் அதுபற்றிய விளக்கத்தினை கேட்டபோது, ஆணையாளரால் எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். ஆகவே அதுபற்றிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர்களே முன்னெடுக்க வேண்டியுள்ளது”என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இத்தீயணைப்பு வாகனம் மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டபோது பதவியில் இருந்தவரும் தற்போது, வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றும் செ.பிரணவனிடத்தில், வாகனத்தொகை குறைமதிப்பீடு செய்யப்பட்டு காப்புறுதி செய்யப்பட்டமை தொடர்பில் வினவியபோது, “யாழ்.மாநரக சபையின் நிருவாகம் அரசாங்கத்தின் நிதியில் அல்ல, மக்கள் வரிப்பணத்திலேயே நடைபெறுகின்றது. ஆகவே தான் வாகனத்தின் முழுப்பெறுதிக்கும் காப்புறுதி செய்வதானால் பெருந்தொகையொன்று செலுத்த வேண்டி ஏற்படும் என்பதால் வாகனத்தின் முக்கியமான பகுதிகளை மையப்படுத்தியே காப்புறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

அத்துடன் “அக்காலப்பகுதியில் இந்த வாகனத்தின் முழுமையான நிர்வகிப்பு கட்டுப்பாடுகளையும் நானே கொண்டிருந்தேன். மாநகர சபை எல்லைக்குள்ளேயே வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அதற்கான ஆபத்து நிலைமைகள் மிகக் குறைவு” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்தில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தீயணைப்பு வாகனத்தின் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தால் எல்லைக்கு வெளியில் தீ அனர்த்தம் ஒன்று அக்காலத்தில் ஏற்பட்டிருந்தால் அதற்கான சேவை வழங்கலை மாநகர சபை நிர்வாகம் மறுதலித்திருக்குமா? என்ற வினா மேலெழுக்கின்றது. இவருக்கு அடுத்தபடியாக, பதவியில் இருந்தவரும் தற்போது வடமாகாணத்தின் ஆளணியும் பயிற்சியும் பிரிவின் பிரதி பிரதம செயலாளராகவும் இருக்கும் பொ.வாகீசன் கூறுகையில், “காப்புறுதி விடயத்தில் எனக்கு முன் பதவியில் இருந்த ஆணையாளரின் முறைமையே பின்பற்றப்பட்டது. ஏனெனில் நிர்வாகத்தில் நிதி சார்ந்த கொள்கை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அவ்வாறான முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் இவ்விடயம் பற்றி என்னிடத்தில் இதுவரையில் யாரும் பேசவும் இல்லை” என்று பதிலளித்தார்.

அதேநேரம், “தீயணைப்பு சேவைப் பிரிவானது இல்லாமையானது அண்மைக்காலத்தில் மிகுந்த சாவால் மிக்கதாக இருக்கின்றது. யாழ்.நகரத்தில் புதிய கட்டட நிர்மாணங்கள், மற்றும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள வெப்பநிலை என்பன தீப்பற்றலுக்கான நிலைமைகளை அதிகரிகரிக்கச் செய்கின்றன.

அவ்விதமான அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை எதிர்த்துப் போராட முடியாத நிலைமையொன்று தற்போது காணப்படுகின்றது” என்று யாழ்.மாநகர தீயணைப்பு பிரிவுடன் கூட்டிணைந்து செயற்படும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் வரிப்பணம் செலுத்தும் நிரந்திர வதிவிடப்பிரதிநிதிக்கான குறித்தொதுக்கப்பட்ட சேவையை மாநகர சபை வழங்க முடியாத நிலைமை காணப்படுமாயின் அதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட முடியும் என்று சட்டத்துறையில் 13வருட அனுபவத்தினையும், சமூக நல வழக்குகளை அதிகளவில் கையாள்பவருமான சட்டத்தரணி ஸ்ரலிஸ் லோஸ் குறிப்பிடுகின்றார்.

“மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட சேவையை வழங்க முடியாத விடத்து அந்த மாநகர எல்லைக்குள் வாழும் ஒன்றுக்கு மேற்படவர்கள் கூட்டிணைந்து மாநகர நிருவாகத்திற்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மாநகர கட்டளைகள் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் வெசாக் தின சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய யாழ்.நாகவிகாரைக்கு வருகை தரவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் அவருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது பாவனையில் உள்ள மிகப்பழமையான தீயணைப்பு வாகனத்தினை நாகவிகாரை வளாகத்திற்கு கொண்டு செல்வதென்று மாநகர நிருவாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் வாகனத்தின் தற்போதைய நிலையினை மாற்றியமைத்து அதாவது, அப்பழைய வாகனத்திற்கு புற நிறப்பூச்சினை மட்டும் உடனடியாக மேற்கொள்வதென்றும் அதற்காக 2,19,000 ரூபா மதிப்பீட்டுத் தொகையும் யாழில் உள்ள தனியார் வாகனத்திருத்தும் நிறுவனமொன்றிடம் பெறப்பட்டது.

தற்போது அப்பழைய தீயணைப்பு வாகனம், வாகன திருத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு வெறுமனே நிறப்பூச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த தேசிய வெசாக் வைபவம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தீவிர பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04