இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15 ஆம் திகதி அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலத்தினை பிரேத பரிசோதனையிற்கு உட்படுத்த அனுப்பி வைத்த பொலிஸாருக்கு தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.

கூலி தொழிலாளிகளான குறித்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடும் சூழ்நிலையில் அதே வீட்டில் தங்கியிருந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி உயிரிழந்த 15 ஆம் திகதியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த குறித்த 12 வயதான சிறுவனை தற்போது கைது செய்துள்ள பொலிஸார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.