மருத்துவத்துறை சார் அமைப்புக்கள் 7 பரிந்துரைகளை முன்வைத்து ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Digital Desk 2

09 May, 2021 | 06:59 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும் என்பது கவலைக்குரியது.

இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , தொற்றுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருவதால் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடிய கடுமையான விதிமுறைகளை மிகவும் தீவிரமாக அமுலாக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம் , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவதுறை சார் அமைப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளன.

உரிய தரப்பினர் ஆலோசனை வழங்கும் பட்சத்தில் , மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை மருத்துவ சங்கம் , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் உள்ளிட்டவை 7 பரிந்துரைகளை முன்வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆண்டு ஒக்டோபரில் வெளியிடப்பட்ட கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடிய கடுமையான விதிமுறைகளை மிகவும் தீவிரமாக அமுலாக்க வேண்டும்.

சனத்தொகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பற்றிய விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் சில இடங்களில் தெரிவு செய்யப்பட்ட முடக்கல் நடைமுறையை அமுலாக்குதல் பற்றி தீர்மானிக்க வேண்டும். ஆலோசனை கூறப்படும் பட்சத்தில் , மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது.

கொவிட்-19 தொற்றுக்கள் பற்றிய தீவிர கண்காணிப்புடனும் . நோய் தவிர்ப்பு மூலோபாயங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தியும் , தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய சேவை பிரிவுகளுக்கும், பொருளாதார மையங்களுக்கும் தேவைப்படும் பொருட்களை விநியோகித்து சேவைகளைப் பேணுதல் அவசியமாகும்.

நோய் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து நிர்வகிப்பதுடன் , சுகாதார பராமறிப்பு தொழிற்றுறை சார்ந்தவர்களின் கவனமான கண்காணிப்புடன் கூடியதாக, குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களை விரைவாக அருகிலுள்ள பொருத்தமான வைத்தியசாலைக்கு மாற்றும் ஏற்பாடுகளும் இருப்பது அவசியமாகும்.

கட்டில்கள் , ஒட்சிசன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் போன்றவற்றை போதியளவில் விநியோகிப்பதன் மூலம் நோயை குணப்படுத்தும் துறையை வலுப்படுத்த வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனைகளுடன் கொவிட் தொற்றாளர்களை இனங்காணும் வகையிலும் , திடமானதும் தடங்கல் இல்லாததுமான விநியோக சங்கிலியை உறுதி செய்வதன் மூலமும் நாடளாவிய ரீதியில் ஆய்வு கூட சேவையை வலுப்படுத்த வேண்டும். இயன்றளவு விரைவாக போதியளவு மருந்துடன் பரந்த தடுப்பு மருந்தேற்றலை அமுல்படுத்த வேண்டும்.

இலங்கையில் மருத்துவ தொழிற்றுறை சார்ந்தவர்களது சகல ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கம், மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றுடன், இலங்கை மருத்துவ சங்கத்தின் இடை-கல்லூரிக் குழுவும் சேர்ந்து, இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று பரவி சமகாலத்தில் உருவாகியுள்ள நெருக்கடி நிலமை குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என்பதை ஒருமித்த குரலில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும், நோயுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருவதை ஜனாதிபதியாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். சமுதாயத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும் மும்மடங்கு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதும் கவலையை ஏற்படுத்துகிறது.

சுகாதார நிறுவனங்களில் உள்ள சகல கட்டில்களும், சுகாதார வசதிகளும் தொற்றாளர்களால் பயன்படுத்தப்படும் போக்கு சடுதியாக அதிகரித்து, சகல சுகாதார மூலவளங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒட்சிசனின் தேவைப்பாடும் சடுதியாக அதிகரித்து வருகிறது. அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்காகவும், மருத்துமனை கட்டில்களுக்காகவும் காத்திருப்பதும் நிகழ்கிறது.; எதிர்பாராத அளவு பூதாகரமாக மாறக்கூடிய கொவிட் பேரனர்த்தத்தை நாம் கூடிய விரைவில் எதிர்கொள்ளலாம். இதன்போது, யாருக்கு சிகிச்சையளிப்பது, யாரை நோய் காவு கொள்ள விடுவது என்பதைத் தெரிவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

ஏப்ரல் முற்பகுதி தொடக்கம், ஆய்வுகூடங்களில் பீசிஆர் பரிசோதனைகளுக்கான கோரிக்கைகளும் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. சகல ஆய்வுகூடங்களும் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றக் கூடியதை விடவும் பன்மடங்கு கூடுதலாக வேலை செய்து வருகின்றன. உயர்ந்தபட்ச கொள்ளளவைத் தாண்டி தம்மை வருத்திக் கொண்டபோதிலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல மருத்துவமனை ஆய்வுகூடங்களிலும் பெருமளவு பரிசோதனைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த ஆய்வுகூடங்கள் மீது பெருமளவு அழுத்தம் தொடுக்கப்படுவதால், இவற்றிற்கு விநியோகிக்கப்படும் ஆய்வுகூட பொருட்கள் சடுதியாக பயன்படுத்தி முடிக்கப்படும் நிலையும் உள்ளது. இத்தகைய ரீதியில் ஆய்வுகூட வசதிகளைத் தாண்டிய வேலைப்பளு அதிகரிக்கும் பட்சத்தில், மருத்துவமனையில் பராமரிப்பு வழங்கக்கூடிய தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரமே பரிசோதனைகளை மட்டுப்படுத்துவதென தீர்மானிக்க வேண்டியதாக இருக்கும்.

இத்தகைய பின்புலத்தில், கொவிட் அல்லாத நோய்களுக்கான சிகிச்சை வசதிகள் முடங்கி வருகின்றன. சில சமயங்களில் சிகிச்சை கிடைப்பதும் இல்லை. நோய் சிகிச்சை முகாமைத்துவம் புறக்கணிக்கப்பட்டு, கொவிட் அல்லாத நோய் தொற்றிய நோயாளர்களின் மரண எண்ணிக்கை தவிர்க்க முடியாதவாறு அதிகரிக்கவும் வழியேற்படுகிறது.

சமகாலத்தில், கொவிட் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் தமக்கென கட்டிலொன்று கிடைக்கும் வரை வீட்டில் காத்திருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மிகவும் கரிசனைக்குரியதாக இருக்கிறது.

கட்டில்களும், உள்ளக பராமரிப்பும் கிடைக்க வேண்டிய தொற்றாளர்களுக்கு அவற்றை வழங்குவதில் கணிசமான தாமதம் நிலவுகிறது. இத்தகைய சூழமைவில், அடுத்து வரும் மூன்று வாரங்களில் அல்லது அதனைத் தாண்டிய காலப்பகுதியில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது.

சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் உடல், உள ரீதியாக களைப்படையலாம். எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனர்த்தத்தால் தூண்டப்படக்கூடிய அயர்ச்சி கணிசமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கும்.

கொவிட் மரணங்கள் எதிர்பாராத மட்டங்களை அடையலாம். மிகவும் மோசமான தேசிய ரீதியிலான அனர்த்தம் என்பது மிகக்குறுகிய எதிர்காலத்தில் மெய்யாக நிகழக்கூடிய சாத்தியமுள்ள அச்சுறுத்தலாகும்.

எனவே, தொற்றாளர்கள் நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு நிவாரணம் அளிப்பதும் குறைந்தபட்சம் 60 சதவீதமான மக்களுக்கு தடுப்பு மருந்தேற்றும் வரையில் கால அவகாசம் பெற சாத்தியமான சகலதையும் செய்வதும் அத்தியாவசியமானதாகும். கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது பொருளாதார ரீதியான பின்விளைவுகளையும் கொண்டுள்ளது. நோய்த்தொற்று சடுதியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால், செலவினங்களும் மென்மேலும் அதிகரிக்கும்.

இத்தகைய பின்புலத்தில், இலங்கையின் சகல மருத்துவ தொழில் துறை சார்ந்தவர்களையும் பிரதிநிதித்துப்படுத்தும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில், மேற்கூறப்பட்ட 7 பரிந்துரைகளை இயன்றளவு விரைவாக அமுலாக்குவது பற்றி சிந்திக்குமாறு மிகவும் ஜனாதிபதியான உங்களிடம் நாம் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.

இது தீர்க்கமாகவும், துரிதமாகவும் செயற்பட வேண்டிய தருணம் என நாம் உணர்கிறோம். இதன் போது அனைவரும் கூட்டாக செயற்பட தவறும் பட்சத்தில் வைரஸ் தொற்றின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக இதை விடவும் கடுமையான முடக்கல் நடவடிக்கைகளையும், சில சமயங்களில் ஊரடங்கு உத்தரவுகளையும் அமுலாக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படலாம்.

எமது பரிந்துரைகள் கட்டியெழுப்பப்பட்ட கோட்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கும் அறியத் தரப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், குறுகிய எதிர்காலத்தில்; பொதுமக்கள் மென்மேலும் தீவிரமானவையும், நீடிக்கக் கூடியவையுமான கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதையும் வலியுறுத்துவது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58