நாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு

Published By: Digital Desk 4

06 May, 2021 | 10:40 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நாட்டில் இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொவிட் பரவலால் இந்தியாவிலிருந்து பயணிகளை அழைத்து வருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை 1895 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 119 424 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 885 பேர் குணமடைந்துள்ளதோடு , 17 215 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரையில் நாடளாவிய ரீதியில் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 81 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8437 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று நோயியல் பிரிவு

தற்போதைய கொவிட் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்ததாவது :  

நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும். தொற்றாளர்கள் துரிதமாக இனங்காணப்பட்டு சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதிலேயே தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பும் தங்கியுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

வைரஸ் தன்மையில் மாற்றங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை முறைமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் , தடுப்பூசியூடாகவும் கட்டுப்படுத்த முடியாத வைரசுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறான வைரசுக்கள் இலங்கையில் இனங்காணப்பட்டால் அதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1200 தொற்றாளர்கள்

நேற்று புதன்கிழமை நாட்டில் 1939 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 42 தொற்றாளர்களை தவிர்த்து எஞ்சியோரில் 1200 இற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்தே இனங்காணப்பட்டுள்ளனர். புதனன்று கொழும்பில் 498 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 387 தொற்றாளர்களும் , களுத்துறையில் 377 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கும் அதிக பகுதிகள் முடக்கம்

குருணாகல் , களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, காலி, பொலன்னறுவை, மாத்தளை, அம்பாறை, மொனராகலை, கொழும்பு, இரத்தினபுரி, நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய 14 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பயணிகளுக்கான அனுமதி இடைநிறுத்தம்

இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் தீவிர நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிவில் விமான சேவை அதிகார சபை மேலும்  தெரிவித்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை கிராம உத்தியோகத்தர் பிரிவும் , திருகோணமலை மாவட்டத்தில் ஆண்டான்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று வியாழக்கிழமை காலை 6.25 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளில் மட்டுப்பாடு

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தரணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அத்தியவசியமான வழக்குகளை மாத்திரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ரயில் சேவைகள் இரத்து

இன்று வியாழக்கிழமை இரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் உள்ளிட்ட 20 ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலின் காரணமாக புகையிரதங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த கொழும்பிலிருந்து - பதுளை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவிருந்த இரவுநேர தபால் புகையிரதங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டன. 

மேலும் கொழும்பு - வேயங்கொட, மீரிகம, அம்பேபுஸ்ஸ, பாணந்துறை, காலி - அளுத்கம மற்றும் அளுத்கம - காலி புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59