ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுங்காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்துகளை ஏற்றி சென்ற கனரக வாகனமொன்றுடன் தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் செனன் பகுதியில் வைத்து  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் படுங்காயம்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.