வேகமாக பரவுகிறது கொரோனா ! இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் ?

Published By: Digital Desk 4

04 May, 2021 | 10:18 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் , மரணங்களின் எண்ணிக்கையும் 700 ஐ கடந்துள்ளது.

தற்போது பரவும் வைரஸ் வீரியம் மிக்கது என்பதால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.

அதற்கமைய நேற்று ஒரே நாளில் 13 மரணங்கள் பதிவாகியிருந்தன. புத்தாண்டின் பின்னர் அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான புதிய கொத்தணியில் 10 நாட்களுக்குள் 16 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதே வேளை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 13 000 ஐ கடந்துள்ளது.

மேலும் ஆரம்பத்தில் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்கு, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலேயே தொற்று பரவல் தீவிரமாகக் காணப்பட்டது.

எனினும் தற்போது மத்திய மாகாணத்திலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய நுவரெலியா , கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , அங்கு பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

சுகாதார தரப்பினரின் எச்சரிக்கை

இதே வேளை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தை அண்மிக்கும் வகையில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையானது வைத்தியசாலைகளில் துரிதமாக அவர்களை அனுமதிக்கும் செயற்பாடுகளை சிக்கலாக்கியுள்ளன.

எனவே தற்போது கணிசமானளவு தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது. அவ்வாறானவர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் , குடும்பத்தில் தொற்றுக்கு உள்ளாகாத நபர்கள் காணப்பட்டால் அவர்களுடனான நெருங்கிய தொடர்புகளை சிறிது காலத்தில் முற்றாக தவிர்த்துக் கொள்வது இலகுவானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேலும் நாளொன்று 1800 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து , அதனை விட இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது மிகவும் அபாய நிலைமையாகும்.

எனவே தான் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏனையவற்றையேனும் முடக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று  1860 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 115 596 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 99 153 பேர் குணமடைந்துள்ளதோடு , 14 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் நுவரெலியா , கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நுவரெலியா மாவட்டம் - நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்ஜஸ்ரீ கிராம உத்தியோகத்தர் பிரிவு , ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கடவத்த பொலிஸ் பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி , ரனவிரு தர்மசிறி மாவத்ததை என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராம உத்தியோகத்தர் பிவு , ரக்குவானை பொலிஸ் பிரிவில் பொத்துபிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிவு , கலவான பொலிஸ் பிரிவில் ஹபுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று கொழும்பு மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவில் வில்லோரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவில் போம்புவல கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொத்தணியில் 16 000 தொற்றாளர்கள்

தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 16 446 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதே வேளை இக்காலப்பகுதிக்குள் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 110 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 981 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் அதிக தொற்றாளர்கள்

மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். அதற்கமைய இன்று காலை 6 மணி வரை நுவரெலியா மாவட்டத்தில் 104 தொற்றாளர்களும் , கண்டியில் 58 தொற்றாளர்களும் , மாத்தளையில் 50 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.

திங்களன்று 13 மரணங்கள்

நேற்று திங்கட்கிழமை மேலும் 13 கொவிட் மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது. திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண்னொருவரும் , ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண்னொருவரும் , மாவில்மட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆனொருவரும் , நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆனொருவரும் , மாலபே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆனொருவரும் , 82 வயதுடைய பெண்னொருவரும் , பொரளை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆனொருவரும் , நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆனொருவரும் , முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்னொருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆனொருவரும் , பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண்னொருவரும் , புலத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண்னொருவரும் , கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண்னொருவரும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்