இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக வரி உயர்வடைந்துள்ளது. 

உள்நாட்டில் தற்போது பெரிய வெங்காய அறுவடை ஆரம்பித்திருப்பதன் காரணமாகவும் அது தற்போது சந்தையை நோக்கி கொண்டுவரப்படுவதனாலும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக வரி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலுள்ள விவசாயிகளால் ஆகஸ்ட் - ஒக்டோபர் காலப்பகுதியில் பெரிய வெங்காயம் சந்தைக்கு கொண்டு வரப்படுவதனால் அவர்களது நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்கமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியின் கேள்வி குறைந்துள்ளதாகவும் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியினை அதிகரிக்குமாறும் விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.