2021 தமிழக சட்டமன்ற தேர்தல் கள வெற்றிக்கனி யாருக்கு ? 

Published By: Digital Desk 2

30 Apr, 2021 | 05:32 PM
image

தமிழறிந்த அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இம்முறை எவ்வாறு அமையும் என்பதன் ஓர் எதிர்வுரை...! 

கடந்து வந்த தமிழக அரசியல் சுவடுகள்...! 
தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளில் ஈர்த்த அண்ணாத்துறை தம்மையும் நீதிக்கட்சியில் இணைத்து பெரியாரின் தலைமைச் சீடராக தனது அடுக்கு மொழி தமிழில் நீதிக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக முழங்கி தமிழக அரசியலில் பெருந்தூணாக விளங்கினார்.

1939 இல் நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் அண்ணா. 1944 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது. 1949 ஆம் ஆண்டு  ஜூலை 9 ஆம் திகதி தந்தை பெரியார் மணியம்மையை விவாகம் செய்து கொண்டார்.இதன் மூலம் பெரியாருடன் சில கருத்து  வேறுபாடு ஏற்டவே,  அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று உதயசூரியன் சின்னத்தில் "திமுக" தோன்றியது.







1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக 138 தொகுதிகளைக் கைப்பற்றி பேரறிஞர் அண்ணா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுங்கட்சியாக பதவியேற்றது.1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம்.திகதி அண்ணா மறைந்தார்.


அவரின் மறைவுக்குப்பின் கலைஞர் கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலைஞர் முதல்வரானதில்  மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது.அப்போது திமுக கட்சியின் பொருளாளரான மக்கள் திலகம் எம்ஜிஆர் உறுப்பினர்களின் சொத்து கணக்குகளை கேட்ட போது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றி எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 








அதே வேகத்தில் 1972 இல் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" (அதிமுக) என்ற ஓர் புதிய கட்சியை கறுப்பு சிவப்பு வண்ணத்தில் அண்ணா உருவம் கொண்ட கொடியுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் உதயமானது. அப்போது 1973 இல் திண்டுக்கலில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் திமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அமோக வெற்றி பெற்றார்.








பின் 1977 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி,தமிழக முதலமைச்சராக மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைத்தார். அதற்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எம்ஜிஆர்  வெற்றி பெற்று 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து  ஆட்சியில் இருந்தார்.இது தமிழக அரசியல் சாதனை என்றே கூறவேண்டும். 


1987 டிசம்பர் 24 இதய தெய்வம் எம் ஜி ஆர் மறைந்தார்.அவரது மறைவுக்குப் பின் எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. கட்சி செயற்குழு கூட்டத்தில் முதல்வராக ஜானகி தேர்வு செய்யப்பட்டார். 









அதிமுக வின் இரட்டை இலைச்சின்னமும் தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டது. 1989 இல் நடந்த தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அத்தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா கணிசமான இடங்களில் வெற்றி கண்டார்.



இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தோல்வி கண்டார். இதன் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜானகி அறிவித்தார். பின் ஜெயலலிதா தலைமையில்,பிரிந்து கிடந்த அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு இரட்டை இலைச்சின்னமும் மீட்கப்பட்டது.பல தேர்தல்களில் அதிமுக வும்,திமுக வும் மாறி மாறி தமிழகததை ஆட்சி செய்தது.இடையில் திமுக வின் போர்வாளாக இருந்த வையாபுரி கோபால்சாமி (வைகோ)திமுக வினருடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து மதிமுக என்ற புதியதோர் கட்சியை ஆரம்பித்தார். 









ஆரம்பத்தில் ஆரவாரமாக இருந்த மதிமுக நாளடையில் தமிழகத்தின் வலிமை நிறைந்த திராவிடர் கட்சிகளான திமுக,அதிமுக வினருடன் தாக்குப் பிடிக்க முடியாத காலங்களில் தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணியாக செயற்பட்டு தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொண்டது.இந்நேரத்தில் டாக்டர் ராம்தாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி,திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள்,மூப்பனார் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் ஜி.கே.வாசன் தலைமையிலான காங்கிரஸ்,டி.ராஜேந்திரனின் லட்சிய திமுக,புதிய தமிழகம்,சீமான் தலைமையிலான நாம் தமிழர்,வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி,சரத்குமாரின் மக்கள் சமத்துவமக்கட்சி,கார்த்திக்கின் போஃவர்ட் புளக்,விஜயகாந்தின் தேமுதிக கட்சி என பல உபரிக்கட்சிகள் தமிழகத்தில் தோன்றின.



ஆயினும் இக்கட்சிகள் இது வரை ஆட்சியமைக்கவில்லை. தேர்தல் காலங்களில் கூட்டணி மட்டுமே அமைத்தது .இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நிகழ்வு பல வருடங்களாக சர்ச்சைக்குரிய இழுபட்ட நிலையில் இருந்தது பாரிய பேசு பொருளாக தமிழக அரசியல் வட்டாரத்தில் இருந்தது.









இவ்வருட ஆரம்பித்தில் தன் உடல் நிலையைக் காரணம் காட்டி தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்ற அதிர்ச்சி நிறைந்த செய்தியை தன் ரசிகர்களுக்கு தெரிவித்து விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற ஆரூடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் நடிகர் கமலஹாசன் அதிரடியாக "மக்கள் நீதி மையம்"என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது தேர்தல் களத்தில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளார்.










நடிகர் ரஜியின் அரசியல் ஆர்வம் மதில் மேல் பூணைக் கதையாகவே ஆரம்பத்திலிருந்தே காணப்பட்டது. அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என மிகத் துள்ளியமாக ஆரூடம் கூறியவர் சுப்ரமணியசாமி மட்டுமே. மக்கள் திலகம் எம்ஜியார்,ஜெயலலிதா போன்றோர் முதல்வர் நாட்காலிக்கான அத்திரவாரத்தை பல வருடங்களுக்கு முன்னே அரசியல் பாசறையில் பல அனுபவங்களைப் பெற்று அடிமட்டத்திலிருந்து இருந்து சினிமா வாயிலாக மக்களை வெகுவாக கவர்ந்து அதையே அரசியல் மூலதனமாகக் கொண்டு தமிழகத்தின் முதல்வர்கள் ஆனார்கள்.ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது அவ்வாறான சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டது.


ரஜினி நடித்த "குசேலன்"படத்தில் ரஜினி நடிகர் அசோக்குமாராக வருவார்.அப்போது கல்லூரி ஆசிரியர் வேடத்தில் நடிக்கும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் அவரிடம்,அரசியலுக்கு வருவதாக இருந்தால் ஒன்று வருவேன் எனச்சொல்ல வேண்டும் அல்லது மாட்டேன் எனச் சொல்ல வேண்டும். நீங்களோ மக்களையும் குழப்பி உங்களையும் ஏன் குழப்புகிறீர்கள் என காரசாரமாக ஓர் கேள்வியைக் கேட்பார்.



அதற்கு அசோக்குமார் வேடம் தாங்கிய ரஜினி கூறிய பதில்,சில திரைப்படங்களில் இயக்குனர்கள் சொல்வதை தான் நடித்து கூறினேனே தவிர அரசியலுக்கு நேரடியாக வருவேன் என்று ஒருகாலும் கூறியதில்லை என்பார். அந்த பதிலே கடைசியில் உண்மையுமானது, நடிப்பின் சிகரமாகிய விளங்கிய சிவாஜி கணேசனின் நிலை தனக்கும் அரசியலில் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயப்பாடும் ரஜினிக்கு இருந்தது.



ஆயினும் ஒரு சமயம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக "மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என குரலை உயர்த்திப் பேச ,அத்தேர்லில் திமுக வெற்றி  பெற்று கலைஞர் கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.ரஜினி என்ற ஓர் தனி மனிதனின் ஒரு வார்த்தை தமிழக அரசியலையே மாற்றியமைத்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கடைசி வரை ரஜினி என்ற மனிதருக்கு தமிழக மக்கள் மத்தியில் ஒர் ஈர்ப்பு சக்தி இருந்தது உண்மையே.ஆனால் கடைசி நேரத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பு அவரது அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றம் நிறைந்ததாகவே அமைந்தது. 





காமராஜர் தலைமையிலான காங்கிரஸுக்குப் பின்  இந்திய மத்திய அரசின் ஆட்சியாளர்களான காங்கிரஸோ பிஜேபியோ தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் ஜெயராம் ஜெயலலிதா,என்ற வீரச்சொல்லை அம்மையார் இறக்கும் வரை தக்க வைத்திருந்தார்.



இரு தடவை வாஜ்பாய் அரசு கவிழ காரணமாகவும் ஜெயலலிதா இருந்துள்ளார்.மன்னார் குடி சசிகலாவின் நட்புக்குப்பின் ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு சரியத் தொடங்கியது.இதனை கலைஞர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியம் சரியாக பயனபடுத்திக் கொண்டது. ஜெயலலிதா  மீதும் அவர் தோழி சசிகலா போன்றோர் மீதும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில்  சொத்துக் குவிப்பு வழக்கு தொடுத்து,சில ஆண்டுகள் பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தில்  சிறைவாசம் அனுபவிக்கச் செய்தது திமுக.









இதன் மூலம் அதிமுகவை சின்னாப்பின்னமாக்கவும் திமுக முனைந்தது.ஆயினும் ,மேன் முறையீடு செய்து   வழக்கில் வென்று புதுத்தெம்புடன் பீஃனிக்ஸ் பறவைப் போல்  எழுந்து  தமிழகத்தின் முதல்வராக மறையும் வரை இருந்தார் ஜெயலலிதா. இந்தியாவின் பிரதமர் பதவிக்கான அத்தனை தகைமைகளும் ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணிக்கு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கட்டியம் கூறினர்.



மக்கள் திலகம் போல் "அம்மா "என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, உண்மையிலேயே தமிழகத்தின் ஆதர்ஷ சக்தியே.அவர் சிறையில் இருந்த போது அவரது தீவிர விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக சில வருடகள் பதவியில் இருந்தார்.டிசம்பர் 05.2016 ஜெயலலிதா மறைந்த பின் அவரது அந்தரங்கத் தோழியான சசிகலாவின் வழுவான கரங்களில் அதிமுக சிக்குண்டது.




சசிகலா "சின்னம்மா'' ஆனார். அதிமுக பிளவுபட்டு விடுமோ என்ற சூழ்நிலை உருவானது. அப்போது சசிகலா தலைமையில்  நடந்த அதிமுக கட்சி செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓர் ஜந்துவைப் போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் பாதங்களில் வீழ்ந்தார்.இந்நிகழ்வு பல ஊடகங்களில் விஸ்வரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது.



பின் எடப்பாடி பழனிச்சாமி தமிகத்தின் முதல்வராக தற்போது வரை உள்ளார் என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் நீறு பூத்த நெருப்பாக அதிமுகவில் இன்னும் கோஷ்டிப்பூசல் உள்ளது. தற்போதைய நிலையில் கண்களுக்கு புலப்படாத பல அணிகளாக பிளவுபட்ட நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ளது அதிமுக. தென்னிந்திய அரசியல் களத்தில் கர்நாடகத்தைத் தவிர பிஜேபி மற்ற மாநிலங்களில் தன் ஆளுமையை வேரூன்ற நினைத்த தருணங்களில் அது வெறும் பகற்கனவாகவே இதுகாறும் உள்ளது. 




தமிழக அரசைப் பொறுத்த வரையில் அது மத்திய அரசான பிஜேபி யின் கைப்பாவையாகவே உள்ளதென எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை அள்ளி வீசுவதிலும் சில உண்மைகள் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் தனது வீரியம் கொண்ட அரசியல் அனுபவங்களால் மத்திய அரசையே ஆட்டிப் படைத்த ஜெயலலிதாவின் கொள்கைகள் எடப்பாடி பழனிச்சாமி அரசில் காற்றில் பறக்கவிட்டிருப்பது முற்றிலும் உண்மையே.



சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் இத்தேர்தலில் அதிமுக பாரியத் தோல்வியைத் தழுவும் சூழ்நிலையே அதிகம் காணப்படுவதாக கருதுகின்றேன்.அதற்கான காரணங்கள்,கட்சிக்குள் ஐக்கியமின்மை,முன்னுக்குப்பின் உளரக்கூடிய வகையில் அமைந்த அதிமுக அமைச்சர்களின் பேச்சுகள்,செம்பரம்பாக்கம் நீர் நிலை உடைப்பு அனர்த்தம்,தூத்துக்குடி ஸ்ட்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்,சசிகலா,தினகரனின் போர்க்கொடி,தமிழக மக்களுக்கு பிடிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டம்,எதிர் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் காப்பி,பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்காமை,தமிழக விவசாயிகளை திருப்தி படுத்தாமை,தமிழகத்துக்கு ஒவ்வாத பிஜேபியுடனான கூட்டணி,நாம் தமிழர்,மக்கள் நீதி மையம் போன்ற சிறிய கட்சிகளால் ஏற்படும் வாக்குச் சிதறல்கள்,ஜெனிவா கூட்டத்தொடரில் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்க்கெதிராக நடுநிலை வகித்தது,அதைக் கொஞ்சமும்  கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமியின் அரசு,ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரனிடம் படுதோல்வி கண்டது.

தமிழக மக்களுக்கு பிடிக்காத சில விடங்களை மத்திய அரசின் ஆணைக்கிணங்கி அமல் படுத்தியமை, நீட் தேர்வு கல்வி முறை,விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமை,திமுக வில் துரைமுருகன்,ஆர்.ராசா,திருச்சி சிவா,கனிமொழி,தமிழச்சி தங்கபாண்டியன்,சுப.வீரபாண்டியன்,திண்டுக்கல் ஐ.லியோனி ,மதிமுக வில் வைகோ ,நாம் தமிழர் கட்சியில் சீமான் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் போன்ற  சிறந்த பேச்சாற்றல் கொண்ட வல்லுனர்கள் அதிமுக வில் இல்லாமை,கட்சியை ஜெயலலிதா போல் கட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை போன்ற காரணங்களால் அதிமுக இத்தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பதே எமது யூகம்.



மாறாக சமீபத்தில் நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் திமுக வினர் பெற்ற இமாலய வெற்றி,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் வழுவான அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாகவும் திமுக திகழ்கின்றமை,அத்துடன் எம்ஜியார் ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் மாற்றங்களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். 


இதில் உபரிக்கட்சிகளான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம்,சீமானின் நாம் தமிழர் போன்ற கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரம் இம்முறை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.ஆனால் இக்கட்சியினர் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கடுகளவேனும் இல்லை என்றே கூறவேண்டும். 



கோவைத் தெற்கில் போட்டியிடும் கமலஹாசன்  வேண்டுமானால் ஒரு வேளை வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வாய்ப்புண்டு,ஏனெனில் அத்தொகுதியில் எதிரணியில் களம் காணும் வானதி சீனிவாசன் பிஜேபி சார்பில் போட்டியிடுவது கமலஹாசனின் வெற்றிக்கு சில வேளை சாதகமாக அமையலாம். 



அத்தொகுதியில் போட்டியிடும் திமுகவின் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான மயூரா ஜெயக்குமார் வேண்டுமானால் இரண்டாம் நிலைக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனக்கூறலாம். இம்முறையும் பிஜேபி பல இடங்களில் தோல்வியைத் தழுவும்.இதற்கு தமிழ் நாட்டின் பிஜேபியினர் நடத்திய வேல் யாத்திரை அப்பட்டமான தேர்தல் சாயம் கொண்டதென கடும் விமர்சனங்களுக்கு ஆளானமை,பிஜேபியின் தமிழ் நாட்டு  ஏஜனட்டுகளான  எஸ்.வி.சேகர்,எச் ராஜா போன்றோரின் செயற்பாடுகள் மக்களை முகம் சுளிக்க வைத்ததும் ஒரு காரணம். 




திமுக வின் சர்க்காரியா ஊழல்,2 ஜி ஸ்பெக்ரம் ஊழல் போன்றவைகளையும் மக்கள் மறந்தவர்கள் இல்லை. ஆயினும் இன்றைய சூழலில் அதிமுக வினரின் திமுக வினருக் கெதிரான  பிரசாரங்கள் பெரிதளவில் எடுபடுவதாகத் தோன்றவில்லை.


சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இம்முறை ஓரளவிற்கு வாக்குகளை பெறக்கூடிய நிலையுள்ளது.ஆயினும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. புதுவையில் பிஜேபி கவர்னராக இருந்த கிரண்பேடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டியது. இதன் எதிரொலியாக அங்கு ரெங்கசாமி பிஜேபி கூட்டணியும் தோல்வியடையும் சூழலே அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.




இங்கும் திமுக  கூட்டணி  வெற்றி வாகை சூடும் வாய்ப்பு அதிகமுள்ளது.தேமுதிக ஸ்தாபகர் விஜயகாந்த் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யும் நல்லெண்ணத்திலேயே கட்சி ஆரம்பித்து அரசியல் களம் கண்டு ஓரளவிற்கு தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் தலைவராக இருந்தது என்னவோ உண்மையே. 












பலருக்கும் பல உதவிகளை நல்கிய பரோபகாரி விஜயகாந்த். நாளடைவில் அவரின் தடுமாற்றம் நிறைந்த பேச்சுகள் மக்களை வெறுப்படையச் செய்தன. இதற்கு காரணம் கட்சியின் ஆளுமையை மைத்துனன் சுதீஷ் மற்றும் மனைவி பிரேமலதா போன்றோரின்,கட்சி உரிமைகள் சுவீகரிப்பும்,செயற்பாடுகளுமே எனக் கூறினால் இக்கருத்தில் ஆழம் நிறைந்த உண்மைகளும் நிறையவுண்டு. 



ஒரு சில ஊடகங்கள் விஜயகாந்த்தை கோமாளியாக சித்தரித்தது. தமிழ்த் திரையில் பலமாக கோலோச்சிய கேப்டன் விஜயகாந்த் அரசியலில் தன் பலத்தை தக்க வைக்க தவறிவிட்டார் .அதற்கு அவரது உடல் நிலையும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.  ஜெயலலிதா இருந்த போது அதிமுக வுடன் கூட்டணி அமைத்து 28 தொகுதிகளில் வெற்றி ஈட்டிய தேமுதிக நாளடைவில் ஜெயலலிதாவை பகைக்கும் வகையில் காய்களை நகர்த்த அதன் செல்வாக்கு சரியத் தொடங்கியது.



தன்னை தமிழக மக்கள் எம்ஜியார்  ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் ஓர் மாயத்தோற்றத்தை தமது ரசிகர்கள் வாயிலாக, அதீத தன்னம்பிக்கையின் அடிப்படையில் நம்பிய  விளைவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.இத்தேர்தலிலும்  தேமுதிக பெரிதாக ஒன்றும் சாதிக்கும் நிலையில்லை. சரத்குமாரும் தான் சார்ந்த நாடார் சமூக மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்.இருப்பினும் அதே சமூகத்தைச் சார்ந்த  கர்மவீரர் காமராஜர் போல் அவராலும்,அவரின் மக்கள் சமத்துவக்கட்சியாலும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் போனது .வன்னியர் வாக்கு வங்கியை மேலாக நம்பியிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராம்தாஸ்,அவர் மகன் அன்புமணி ராம்தாஸ் போன்றோருக்கும் இத்தேர்தல் ஒரு சோதனையே. 



தமிழகத்தின் இரு பெரும் அரசியல் சாணக்கியம் நிறைந்த தூண்களான கலைஞர் கருணாநிதியும்,அம்மா என்ற ஆதர்ஷ சகதியான ஜெயலலிதா ஜெயராமும் இல்லாத ஓர்  களமாக இத்தேர்தல் அமைகின்றது. ஆயினும் திமுக,அதிமுக ஆகிய இமாலய திராவிடக் கட்சியினர்களுக்கே நேரடிப் போட்டி. எதிரவரும் ஏப்ரல் 06 ம் நாள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஒப்படைப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினருக்கா,கலைஞர் கருணாநிதியின் வாரிசாகிய திமுக தலைவர் ஸ்டேலினிடமா,மே மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில  தமிழகத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.



234 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி ஸ்டேலின் தலைமையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்பதை தமிழகத்தில் தற்போது நிகழும் சூழ்நிலைகளை வைத்து உறுதியிட்டு கூறலாம் என்ற பதிவை இப்பதிவின் வாயிலாக அறியத்தருகின்றேன்...! 

ஸாஹித்ய ரத்னா

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22