ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அரசாங்கம் என்ற  திருமணத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காகவே  சுதந்திரக் கட்சியி்ன் முக்கிய   அமைப்பாளர்களே நீக்கப்பட்டுள்ளனர்.  இது பல்வேறு விடயங்களை எடுத்துக் காட்டுகின்றது என்று  கூட்டு எதிரணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.  

சதந்திரக் கட்சியின் முக்கிய அமைப்பாளர்கள் நீக்கப்பட்டமை குறித்து விபரிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக   பாராளுமன்றம் பிரவேசித்துள்ள   சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சிலரின்   பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.   

பிரபலமான மற்றும் அர்ப்பணிப்புமிக்கவர்களைக் கொண்டே   ஒரு கட்சியின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகின்றது.   கட்சிக்கான  வாக்குகளை அதிகரிப்பதில்  அமைப்பாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். 

அந்தவகையில்  சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளோரும் கட்சிக்காக பாரிய  உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால்  ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவரின் கீழான  தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினர் இடம்பெற்றதை எதிர்த்த ஒரே காரணத்திற்காக இந்த அமைப்பாளர்கள்  நீக்கப்பட்டுள்ளனர்.  வேறு ஒரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை.   இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.