இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் ! சில பகுதிகள் முடக்கம் : 3 மரணங்கள் பதிவு

26 Apr, 2021 | 10:25 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகியவை அபாயமுடையவையாக சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய இன்றையதினம் இரவு 10 மணிவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2000 ஐயும் கடந்துள்ளதோடு , காலி, களுத்துறை , கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. 

கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு அரச அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கோ அல்லது வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு வருவதற்கோ தடை விதிக்கப்பட்டிருக்காவிட்டாலும் , அமெரிக்கா , பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அந்நாட்டு பிரஜைகளுக்கு இலங்கைக்கான பயணம் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளன.

இன்று 952 தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை நாட்டில் 952 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2331 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 94 577 பேர் குணமடைந்துள்ளதோடு , 7050 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் காலி, கம்பஹா, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவு ,  கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலு கெதர மற்றும் களுஹக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் , மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்தை, பெலவத்தை கிழக்கு மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இம்புல்கொட கிராம சேவகர் பிரிவு மற்றும் கட்டுதம்பே கிராம சேவகர் பிரிவு ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் முதல் குருணாகல் மாவட்டத்தில் திட்டவெல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவும் , குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் , நிராவிய மற்றும் நிகடலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , களுத்துறையில் அதிகாரிகொட பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரு வாரத்திற்கு முடக்கம்

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஞாயிறுக்கிழமை மாலை 3 மணி முதல் 72 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்ட தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மூடப்பட்டது

கொழும்பு - பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் ஊழியருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதால் நாளையும் நாளை மறுதினமும் அதனை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நீக்கல் நடவடிக்கைகளின் பின்னர் 29 ஆம் திகதி பணியகம் மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்கள்

நிலவும் கொவிட் நிலைமைக்குள் அரச சேவைகளை தடையின்றி வழங்கவும் , சுகாதார பாதுகாப்பாக அவற்றை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

அதற்கமைய அரச அலுவலகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் உத்தியோகத்தர்களை அழைப்பதற்கான சுற்று நிரூபம் நாளை செவ்வாய்கிழமை வெளியிடப்படும் என்று பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 48 சுகாதார விதிமுறைகளில் தேவையேற்படின் அரச மற்றும் தனியார் அலுவலங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிக அபாயத்தில் மேல் , வடமேல் மாகாணங்கள்

தற்போதுள்ள கொவிட் பரவல் நிலைமைக்கு அமைய மேல் மற்றும் வட மேல் மாகாணங்களே அதிக அவதானம் மிக்கவையாகக் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களிலும் எதிர்வரும் தினங்களில் இவ்வாறு அபாய நிலைமை ஏற்படக் கூடும் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

உயிரிழந்தோர்

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளின் அறிவித்தல்

மீண்டும் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளமையால் தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இலங்கை கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையால் விமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்பதால் அந்நாடுகள் தமது பிரஜைகளுக்கு இந்த அறிவிப்பை விடுப்பதாக தெரிவித்துள்ளன.

சுற்றுலா பயணிகள் , வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள்

சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் ஏதேனும் மாற்று தீர்மானங்கள் எடுக்க வேண்டியேற்பட்டால் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள்  மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வரும் செயற்பாடுகள் வழமையைப் போன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீகஹாவத்தை , நீர்கொழும்பு பொலிஸாருக்கு தொற்று

மீகஹாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதால் மீகஹாவத்தை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டுப்பாடுகளுடன் திருமணங்களுக்கு அனுமதி

ஏற்கனவே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வைபவங்களை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றலுடன் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மோட்டார் வாகன திணைக்களத்தின் அறிவிப்பு

கொவிட் பரவல் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே.அழககோன் தெரிவித்துள்ளார். 

நாளை முதல் சேவையை பெற்றுக் கொள்ளவிருந்த சேவை பெறுனர்களுக்கான வேறு தினம் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் வருகை தந்து தமக்கான சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33