உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதிக்கான செயற்பாடுகளில் திருப்தியில்லை : 2 ஆவது ஆண்டை முன்னிட்மு பேராயரின் அதிரடி தீர்மானம்

20 Apr, 2021 | 06:57 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதிக்கான தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளிலும் முழுமையாக திருப்தியடைய முடியாது. 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை விடுத்து ஒரு சிலரை சூத்திரதாரிகள் எனக் குறிப்பிட்டு கைது செய்வதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் விசேட ஆராதனைகள்  இடம்பெறவுள்ளதோடு , நாளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.

பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொச்சிக்கடை திருத்தல ஆராதனை

நாளை புதன்கிழமை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதோடு , முதலாவதாக குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நேரமான 8.45 க்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

நாடளாவிய ரீதியிலுள்ள சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் இவ்வாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளதோடு , நாட்டு மக்கள் அனைவரையும் அதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கொச்சிக்கடை திருத்தல ஆராதனைகளுக்கு வத்திக்கான் தூதுவர் உள்ளிட்ட பிற நாட்டு தூதுவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு , ஓமல்பே சோபித தேரர் , ஹசன் மௌலவி மற்றும் கொச்சிக்கடை ஆலய குருக்கள் ஆகிய மதத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கட்டுவாப்பிட்டி தேவாலயம்

இதே போன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. 

அங்கு 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னம் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்தோடு மேரி ஸ்டெல்லா பாடசாலை மைதானத்திலிருந்து , கட்டுவாப்பிட்டி வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு செல்லும் வகையில் மத பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை நடைபெறவுள்ள விசேட ஆராதனைகளில் கலந்து கொள்வதற்கு சகலருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

விசாரணைகளில் திருப்தியில்லை

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைப்பட்டுள்ள பரிந்துரைகளை தவிர்த்து , ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் திருப்தியடைந்து விட முடியாது. 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் எம்மால் 100 வீதம் திருப்தியடைய முடியாது. தற்போதுள்ளதை விடவும் மேலும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

கத்தோலிக்க மக்களுக்காக மாத்திரம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் இந்து , பௌத்த , முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணி கண்டறியப்படும் வரை முழு நாடும் அச்சுறுத்தல் மிக்க நிலைமையிலேயே காணப்படும். இந்த கோரிக்கைகளின் மூலம் மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவில்லை. உண்மையை கண்டறியும் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டால் நாடு அபாய கட்டத்திலிருந்து மீள முடியாது.

விசேட ஆராதனைகளின் போது திருத்தலங்களுக்கும் தேவாலயங்களும் பலத்த பாதுகாப்பை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. பாதுகாப்பை வழங்குவதற்க ஏதுவாள் அமைந்த காரணிகளை இனங்கண்டு , அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் மிகக் குறைவானோரை கைது செய்வது போதுமானதல்ல. எனவே நிலைமையின் பாரதூரத்தன்மையை புரிந்து கொண்டு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கடுமையாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் அவர் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது நான் அதற்கு பதலளித்திருந்தேன். 

அந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் தொடர்பிலும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் தொடர்பிலும் நான் தனித்தனியாக கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே வேளை தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் 100 வீதம் திருப்தியடைய முடியாது. எனவே ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தமை

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு கட்சி தலைவர் மாத்திரம் எதிராக வாக்களிக்க ஏனைய அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில் உள்ள இரகசியம் என்ன? முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று தெரிவித்த நபருக்கு ஆதரவாக இந்த செயற்பாடு இடம்பெற்றிருக்கிறது. 

இதற்கான காரணம் என்ன? இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசாங்கம் இரகசிய கூட்டணியாக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய சகோதரர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போதே நாம் இதனைக் கூறியிருந்தோம். இவ்வாறு அரசாங்கம் இவ்வாறு இரகசிய கூட்டணியாக செயற்பட்டு உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை புறந்தள்ள முயற்சித்தால் அது முழு நாட்டுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்