தற்கால சமூகத்தில் அமைதியற்ற மனங்களையுடைய மக்களை அமைதிப்படுத்தக்கூடிய ஒரே சமயம் பௌத்த சமயமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

பொல்கொல்லை ஸ்ரீ சாலவன போதிவிகாரைக்கு மியன்மார் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

பௌத்த தத்துவத்தின் அடிப்படையில் ஏனைய இனங்களின் கருத்துக்களையும் மதித்து ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி ஒரு நாடு என்றவகையில் அபிவிருத்தியடைவதற்குத் தேவையான தீர்வுகள் பௌத்த தத்துவத்தில் உள்ளடங்கியிருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார். 

இந்த சந்தர்ப்பம் பல 100 வருடங்களாக இருந்துவரும் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு மற்றுமொரு சிறந்த சந்தர்ப்பமாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு மகாசங்கத்தினருக்கு எண்வகைப்பூஜைப் பொருட்களை அன்பளிப்புளிப்புச் செய்து அவர்களது சுகதுக்கங்களையும் கேட்டறிந்தார். 

பௌத்த சமயத்திற்குச் செய்துவரும் சேவைகளை கௌரவித்து தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு சைத்தியவடிவிலான ஒரு சின்னத்தை ஜனாதிபதி மியன்மார் நாட்டு சங்கராஜ சங்கைக்குரிய குமா ராஹிவங்சாபிதான மகாநாயக்க தேரருக்கு அன்பளிப்புச் செய்ததோடு, ஜனாதிபதிக்கும் மகாநாயக்க தேரர் மியன்மார் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு புத்தர் சிலையை அன்பளிப்புச் செய்தார். 

இந்த நிகழ்வில் சியாமோபாலி மகாநிகாயவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட தம்மசித்தி ஸ்ரீபஞ்ஞானந்த ஞானரத்னாஹிதான தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய மாகாண ஆளுனநர் நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.