தரவரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருந்தாலும் அவர்களை விட சிறப்பாக விளையாடி தொடரை வென்றோமென இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 163 ஓட்டங்களால்  வீழ்த்தி இலங்கை அணி 3-0 என வைட் வொஷ் செய்து தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றிகொண்டு வெள்ளையடிப்புச் செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அஞ்சலோ மெத்தியு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மெத்தியுஸ் மேலும் தெரிவிக்கையில்,

இது சிறந்ததொரு திருப்பு முனை. குசல் மெண்டிஸின் துடுப்பாட்டம் சிறந்த முறையில் இருந்தது. இதனால் இந்தத் தொடர்  ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

முதல் இரு போட்டிகளிலும் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். வெற்றியின் பலன் அனைவருக்கும் சாரும். இலங்கை கிரிக்கெட் சபை, அணியின் தெரிவுக்குழு உட்பட அனைவரையும் சாரும்.

இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி கூருகின்றேன். குறிப்பாக வெற்றிக்கு பக்கபலமாக இருந்த இலங்கை அணியின் ரசிகர்களை மறக்க முடியாது.

இந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

வீரர்களின் அறையில் வெற்றியின் வெளிப்பாடு நம்ப முடியாததாக இருந்தது. உண்மையில் அதுவொரு இனிமையான தருணமாக இருந்தது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடர் முக்கியமானது. உண்மையில் இதுவொரு சிறந்த தொடர்.

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் உண்மையில் எம்மை விட சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். தொடர் ஆரம்பமாவதற்கு முன் நான் தெரிவித்தது போன்று எமது அணி வீரர்கள் அவர்களை விட திறமையாக செயற்பட்டார்கள்.

நாம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினோம். இதேபோல் நாம் கடுமையான போராட்டத்தை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் வெளிப்படுத்துவோம்.

ஹேரத்திடம் நல்ல பலமிருந்தது. அவருக்கு நன்றாக ஓடவும் பாயவும் முடியாது. இருந்தாலும் பந்தை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. இத் தொடரில் 25 ற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எதிர்காலத்தில் சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்கள் உள்ளன.

எமது அணியிலுள்ள பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் பந்து வீசி இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச்செய்வார்கள் என்ற நம்பிக்கை அணித் தலைவர் என்ற ரீதியில் எனக்கு இருந்தது.

ரங்கண ஹேரத், டில்ருவன் மற்றும் சந்தகன் போன்ற பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது இவ்வாறான ஆடுகளத்தில் போட்டியை வெற்றிபெறுவதற்கு அணித் தலைவர் என்ற ரீதியில் பயப்பட வேண்டிய தேவையில்லை.

கண்டியில் குசல் மெண்டிஸின் துடுப்பாட்டத்தில் தான் எல்லாம் மாற்றமடைந்தது. இதன் பின்னர் எமது அணியில் நம்பிக்கை பிறந்தது. எமக்கு முழுமையான உறுதி மற்றும் நல்ல மனநிலை ஏற்பட்டது. 

எமது அணியில் சங்கா, மஹேல இல்லாத வெற்றிடத்தை புதிய வீரர்கள் நிரப்ப வேண்டுமென எதிர்பார்த்தேன்.

தனஞ்சய டி சில்வா , குசல் மென்டிஸ், குசல் ஜனித் ஆகியயோர் சிறப்பாக செயற்பட்டனர். 

இறுதிப் போட்டியில் கையில் 6 தையலுடன் துடுப்பெடுத்தாடி சதம்பெற்ற கௌசல் சில்வாவுக்கு  அணித்தலைவர் என்ற வகையில் பெருமையடைகின்றேன்.

நான் அணித் தலைவராக இருக்க வேண்டுமென அணியினர் நம்பிக்கை வைத்திருந்தார்கள். எமது அணிக்கு அணித்தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லாவிடியில் ஒருநாளேனும் அணித் தலைவராக இருக்க மாட்டேன்;. 

கடந்த சில மாதங்களாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியை நோக்கிப் பயணித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.