1000 ரூபா நாள் சம்பளம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆம் திகதி கிடைக்கும்  - ஜீவன் 

Published By: Digital Desk 4

06 Apr, 2021 | 05:53 AM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி 1000 ரூபாய் நாள் சம்பளம் என்ற அடிப்படையில் முழுமையான சம்பளம் கிடைக்கப் பெறும்.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட தினமான மார்ச் 5 ஆம் திகதியிலிருந்து 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வேலை நாட்கள் 13 ஆகக் குறைக்கப்படும் என்று முதலாளிமார் சம்மேளனம் கூறவில்லை. கூட்டு ஒப்பந்த நடைமுறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை மாத்திரமே கம்பனிகள் கூறியிருந்தன.

இவ்வாறான கருத்துக்கள் எதிர்தரப்பினரால் வெளியிடப்பட்டவையாகும் என்றும்  இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளம் வழங்குமாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கம்பனிகள் நீதிமன்றத்தில் அவர்களது வாதத்தை முன்வைத்திருந்தனர். எனும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்கமைய வர்த்தமானி வெளியிடப்பட்ட தினமான மார்ச் 5 ஆம் திகதி முதல் 1000 ரூபாய் நாள் சம்பளத்தை கம்பனிகள் நிச்சயம் வழங்க வேண்டும். எனவே மார்ச் 5 ஆம் திகதி முதல் 1000 ரூபாய் நாள் சம்பளம் என்ற அடிப்படையில் இம்மாதம் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கப்பெறும்.

இந்த சந்தர்ப்பத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்தோடு பல தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு எம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் எம்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். எனவே புத்தாண்டின் போது பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் நிச்சயம் கிடைக்கப் பெறும்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட கம்பனியொன்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளமைக்கமைய 1000 ரூபா நாளாந்த சம்பளம் என்ற அடிப்படையில் 21 நாட்கள் முழுமையான சம்பளத்தை வழங்கியுள்ளது. அதே போன்று பிரிதொரு கம்பனி 17 நாட்களுக்கான சம்பளத்தை வழங்கியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்கினால் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்று முதலாளிமார் சம்மேனளம் கூறவில்லை. எதிர்தரப்பினரே அவ்வாறானதொரு வியடத்தைக் கூறியுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சில நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையே முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது.

அதனை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். எனவே புதிய நடைமுறைகளை நாம் வரவேற்கின்றோம். அதற்காக வேலை நாட்களை குறைப்பதாகக் கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடும் சிறந்த முறையில் நிறைவடையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதே வேளை நாம் அமைச்சைப் பொறுப்பேற்ற போது புதிய வீட்டுத்திட்டம் எதுவும் காணப்படவில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்ட வீடமைப்பு திட்டமே காணப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 4000 வீட்டுத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. எனினும் கடந்த அரசாங்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளும் முழுமைப்படுத்தப்படாமல் உள்ளன.

எனவே தற்போது கடந்த அரசாங்கத்தில் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்த எமது அமைச்சினூடாக 522 மில்லியன் நிதி ஆரம்பகட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் 1057 மில்லியன் நிதி தேவையாகவுள்ளது.

அந்த தொகை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்தகட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும். இதே போன்று தேசிய வீடமைப்பு திட்டத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள வீட்டு நிர்மாணப்பணிகளும் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்படும்.

வீடுகளை நிர்மாணிப்பது மாத்திரமே அபிவிருத்தி அல்ல. மலையத்திற்கான பல்கலைக்கழகம் தொடர்பில் பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனினும் நாமே அதனை நடைமுறையில் சாத்தியமாக்கியுள்ளோம். மலையக பல்கலைக்கழக நிர்மாணப்பணிகள் எப்போது நிர்மாணிக்கப்படும் என்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும்.

இப்பல்கலைகழகத்திற்காக கற்கை நெறிகள் தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் பல்கலைக்கழகம் ஒன்றை ஒரு வருடத்திற்குள் நிர்மாணிக்க முடியாது. எனினும் அதற்கான சகல முன்னெடுப்புக்களும் நிறைவடைந்துள்ளன. கட்டுமானப்பணிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. அவையும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13