ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 2

04 Apr, 2021 | 03:14 PM
image

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதியன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று  மாலை ஏழு மணியுடன் தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று வாக்கு சேகரித்தார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, ' ஓமலூர்ர் தொகுதி அ.தி.மு.க வின் கோட்டை. இது எனது கோட்டையாக உருவாக அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும். இன்றைய தினம் ஸ்டாலின் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார். அவர் போடாத வேடமே இல்லை.

இந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியை பிடிக்க கனவு காண்கிறார். அந்தக் கனவு பலிக்காது. மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர். ஒருமித்த கருத்துள்ள தலைவர்கள் இணைந்து வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். ஸ்டாலின் தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி.

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க வை உருவாக்கினார். ஜெயலலிதா அ.தி.மு.க வை கட்டிக்காத்தார். இரு பெரும் தலைவர்கள் வழியில் நான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகிறேன். சேலம் மாவட்டத்தில் நான் எடப்பாடியை விட ஓமலூருக்கு தான் அதிக அளவில் வந்து சென்றுள்ளேன்.

இந்த தொகுதி முழுக்க எனக்கு அத்துப்படி. அனைத்து கிராமங்களுக்கும் வருகை தந்திருக்கிறேன். உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் முதலமைச்சராக உள்ளார். சேலம் மாவட்டம் முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை உடையது. நம்முடைய மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை, என்ன செய்ய வேண்டும்? என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளேன். நீண்டகாலம் அ.தி.மு.க வில் மாவட்ட செயலாளராக இருந்து, உங்கள் எண்ணங்களை அறிந்து பிரச்சனைகளை தெரிந்து வைத்துள்ளேன். மீண்டும் ஜெயலலிதா அரசு தொடர அ.தி.மு.க விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

வறட்சி , புயல், தொடர் மழையால் பாதித்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். 2011 ஆம் ஆண்டிற்கு முன்பு ஓமலூர் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நல்ல தரமான சாலைகள் அமைத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த இருக்கிறோம். ஓமலூர் தொகுதியில் எட்டு அம்மா மினி கினினிக்குகளை அமைத்துள்ளோம். அதிகமான மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஓமலூர் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. நிலமற்ற, வீடற்ற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். எந்த நிலத்தையும் எடுக்காமல், சந்தை விலைக்கு வாங்கி வீடு கட்டப்பட உள்ளது. எந்த ஜாதி என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் ஏழை ஜாதி இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

ஸ்டாலினுக்கு என்னைப்பற்றி பேசாவிட்டால் தூக்கம் வராது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் முதலமைச்சரை யாருக்கும் தெரியாது என்று சொன்ன ஸ்டாலின், இன்றைக்கு அனைத்து ஊருக்கும் சென்று என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். தி.மு.க ஆட்சியில் எதுவும் செய்யாததால் அதை பற்றி சொல்ல முடியாமல் என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை எல்லோருக்கும் தெரிய வைத்து விட்டார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். படிப்படியாக மக்களின் ஆதரவோடு இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால் ஸ்டாலின் அவருடைய அப்பாவின் செல்வாக்கில் இந்த நிலைக்கு வந்துள்ளார். படிப்படியாக வரும் பாதை எவ்வளவு கடினம் என்பது எனக்குத்தான் தெரியும். ஸ்டாலினுக்கு அந்தக் கஷ்டம் என்ன என்பதே தெரியாது.

நமக்கு நாமே திட்டத்தில் விவசாய நிலத்தில் கான்கிரீட் சாலை அமைத்து அதில் ஷூ போட்டு சென்ற ஸ்டாலின், என்னைப் பார்த்து போலி விவசாயி எனக்கூறி அவதூறு பரப்பி, கொச்சைப்படுத்தி, தரம் தாழ்த்தி பேசுகிறார். ஜனநாயக நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ.. அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி சூழ்ச்சி செய்து முதலமைச்சராகிவிட்டார். வாய் பேச முடியாத நிலையில் கூட திமுக தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை. உங்கள் அப்பாவே உங்களை நம்பாத போது நாட்டு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள். பெற்ற அப்பாவே உடல்நிலை சரியில்லாத போது கூட ஸ்டாலினை நம்பாததிலிருந்தே அவருடைய தகுதி என்ன என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது.

70 வயது ஆகியும் சினிமா நடிகர் போல சுற்றி வருகிறார். எம்ஜிஆர் என நினைக்கிறார். ஆனால் எம்ஜிஆர்  எம்ஜிஆர் தான். தந்தையின் வெளிச்சத்தில் ஸ்டாலின் வந்துள்ளார். ஆனால் உழைப்பால் எங்கள் விலாசத்தை தேடி உள்ளோம். மக்களை பார்க்காமல் குடும்பத்தை மட்டுமே பார்த்து வருகிறார். ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் மக்களை ஸ்டாலினின் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். குடும்பத்தை தவிர்த்து தி.மு.க வில் யாரும் முன்னுக்கு வர முடியாது. ஆனால் அ.தி.மு.க வில் சாதாரண தொண்டர் சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், ஏன் முதலமைச்சரே கூட ஆகலாம். உழைக்கிறவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள் அதிமுகவில் ஏற்றம் பெறலாம். இந்தியாவிலேயே ஜனநாயக கட்சி அ.தி.மு.க  தான்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த வயதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற இரவு பகல் பாராமல் பாடுபட்டு வருகிறார். நம்முடைய கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது.

அதிமுகவில் நிறைய ஊழல் நடந்ததாக ஸ்டாலின் பச்சை பொய் பேசி வருகிறார். ஆனால் இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளியை தி.மு.க வைத்துள்ளது. 13 தி.மு.க அமைச்சர்கள் அவர்கள் பதவியில் இருக்கும் பொழுது ஊழல் செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. எங்கள் மீது முறைகேடு புகார் குறித்து விவாதிக்க தயார் என்றும் குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் சொல்ல தயாராக இருப்பதாக சொல்லியும் இதுவரை ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லவில்லை. சாலை போடாத நிலையில் எப்படி ஊழல் செய்ய முடியும். எவ்வளவு அப்பட்டமான பொய் எவ்வளவு எரிச்சல். அவரின் மனக்குமுறல் தான் இப்படி வெளிப்படுகிறது. அதனால் படித்தே பார்க்காமல் யாரோ எழுதியதை கொண்டுபோய் ஆளுநரிடம் கொடுத்துவிட்டார். சவால்விடுத்தும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார்.

ஊர் ஊராக குறைகளை கேட்டு, மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டு போடுகிறார். 100 நாளில் முதலமைச்சரானவுடன் பூட்டை உடைத்து மனுக்களுக்கு தீர்வு காண்பேன் என்கிறார். விஞ்ஞான உலகில் மக்களை ஏமாற்ற முடியாது. இனிமேல் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது என்பதால் மக்களை தந்திரமாக ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி வருகிறார். பதவியில் இருக்கும்போது ஏன் மனு வாங்கவில்லை? அதிகாரம் இருக்கும்பொழுது மக்களை சந்திக்க மாட்டார். இந்த தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த தேர்தல் வரை ஸ்டாலின் மக்களை சந்திக்க மாட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏழெட்டு தடவை சென்று வந்துள்ளேன். மக்கள் பாதிக்கப்படும் போது மக்களை நேரடியாகச் சென்று சந்தித்துள்ளேன். பொய் மூட்டைகளை எவ்வளவு அழித்து விட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள். 

ஏழை எளிய மாணவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசு. அப்போது அதிகாரத்தில் இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது வரத்து செய்வேன் என்கிறார். இன்றைக்கு வரை நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 41 சதவீத அரசு பள்ளி மாணவ மாணவியர் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து அவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியுள்ளோம். நடப்பாண்டில் 435 பேர் மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த 600 பேர்  மருத்துவர்களாக ஆகமுடியும். 

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னபடி எல்லாம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், வொஷிங் மெஷின், 6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1, 500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தி தரப்படும். இலவச கேபிள் இணைப்பு, ஓட்டோ வாங்க 25,000 ரூபாய் மானியம், நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வட்டியில்லா கடன், 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும். இஸ்லாமிய பெருமக்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளோம்.

நாங்கள் பாதுகாப்பு அளிக்காதது போல் தி.மு.க வினர் பேசி வருகின்றனர். எம்ஜிஆர் ஜெயலலிதா வழயில் அ.தி.மு.க அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக, கண்ணை இமை காப்பது போல் காத்து வருகிறோம். தி.மு.க வின் அவதூறு பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். உங்களை சகோதரர் போல நினைத்து வாழ்ந்து வருகிறோம். அ.தி.மு.க அரசு அமைந்தது முதல் இன்றுவரை சிறுபான்மை மக்கள் எந்த இடத்திலும் பாதிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்த பூமி அமைதியாக இருக்கும் பூமி. சாதி சண்டை , மத சண்டை கிடையாது. அவரவர் அமைதியான முறையில் தொழில் பார்த்து வருகிறார்கள். இது இந்த நிலை தொடர அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க வேண்டும்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10