வட்­டு­வா­கலில் அருட்­தந்தை பிரான்சிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் பொறுப்­பா­ளர்­களுள் ஒரு­வ­ரான சுமன், கடற்­புலித் தள­ப­தி­களுள் ஒரு­வ­ரான நரேன்­ மற்றும் காவல்­துறை முக்­கி­யஸ்­த­ரான மாதவன் ஆகியோர் எங்­கே­ என காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­குழு முன்­னி­லையில் அவர்­களின் உற­வி­னர்கள் கேள்வி எழுப்­பினர்.

காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் நான்காம் நாள் அமர்வு நேற்று திங்­கட்­கி­ழமை பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதில் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

அவர் அளித்த சாட்­சி­யங்­களின் விபரம் வரு­மாறு,

விடு­தலைப் புலி­களின் கடற்­படைத் தள­ப­தி­களில் ஒரு­வ­ரான நரேன் என அழைக்­கப்­படும் சிவ­ஞா­ன­சுந்­தரம் ஜனார்த்­த­னனின் பெற்றோர் சாட்­சி­ய­மளிக்­கையில்

எனது மகன் விடு­தலைப் புலிகள் அமைப்பில் இணைந்து நீண்­ட­கா­ல­மாக செயற்­பட்டு வந்தார். கடற்­புலிப் பிரிவில் தள­ப­தி­களில் ஒரு­வ­ராக இருந்­தவர் நரேன் என அழைக்­கப்­பட்டார்.

யுத்தம் உக்­கி­ர­ம­டைந்து இறுதி நாட்­களை எட்­டி­யி­ருந்த நிலையில் வட்­டு­வாகல் பாலத்­தி­னூ­டாக பலர் இரா­ணுவ கட்­டுப்­பாடு நோக்கி நகர்ந்து கொண்­டி­ருந்­தார். எனது மக­னுடன் நாங்­களும் வட்­டு­வாகல் பாலத்­தினை அடைந்­தி­ருந்­த­போது இரா­ணுவம் பலரை தடுத்து வைத்­தி­ருந்­தது. அதன் பின்னர் சிறிய ஒலி பெருக்­கி­யூ­டாக விடு­தலைப் புலி­களில் இருந்­த­வர்கள் எம்­மிடம் வந்து சர­ண­டை­யுங்கள் உங்­க­ளுக்கு பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­கின்­றோ­மென அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து நானும் எனது மனை­வியும் எங்கள் கைகளால் எனது மகனை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் அருட்­தந்தை பிரான்சிஸ் ஜோசப் முன்­னி­லையில் ஒப்­ப­டைத்தோம். அதன் பின்னர் அவர்­களை பேருந்து வண்­டி­களில் ஏற்றிக் கொண்டு சென்று விட்­டனர். நானும் மனை­வியும் வவு­னியா­வி­லுள்ள இடைத்­தங்கல் முகாமில் சிறிது காலம் தங்­கி­விட்டு பின்னர் சொந்த ஊரை அடைந்­துள்ளோம்.

எனது மகனை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கைய­ளித்­த­தற்கு நாமே சாட்­சி­யா­ளர்­க­ளாக உள்ளோம். எனது மகன் உள்­ளிட்ட பலர் அவ்­வாறு அருட்­தந்தை முன்­னி­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. தயவு செய்து அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? எங்­குள்­ளார்கள்? என்­பதை நீங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டு­மென மன்­றாட்­ட­மாக கேட்டுக் கொண்­டனர்.

இதே­வேளை விடு­தலைப் புலிகள் அமைப்பின் காவற்­துறைப் பொறுப்­பாளர் பா.நடே­சனின் நேரடி கண்­கா­ணிப்பில் செயற்­பட்­டி­ருந்த மாதவன் என்று அழைக்­கப்­படும் சிவ­சி­தம்­ப­ரத்தின் மனை­வி­யான வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த சிவ­சி­தம்­பரம் இன்­ப­ரூபி சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்­தின்­போது வட்­டு­வாகல் பாலத்­தி­னூ­டாக நாம் நடந்­து­வந்து கொண்­டி­ருந்தோம். அதன்­போது இரா­ணுவம் எங்­களை தடுத்­து­வைத்­தது. எங்­க­ளுடன் பலர் அமர்ந்­தி­ருந்­தார்கள். அதன்­பின்னர் விடு­தலைப் புலிகள் அமைப்­பி­லி­ருந்­த­வர்­களை சர­ண­டை­யு­மாறும் பொது மன்­னிப்­ப­ளிப்­ப­தா­கவும் பகி­ரங்க அறி­வித்தல் விடுத்­தனர்.

இத­னை­ய­டுத்து எனது கண­வனை எனது கைக­ளா­லேயே இரா­ணு­வத்­தி­ன­ரி­டத்தில் ஒப்­ப­டைத்தேன். அவரை அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பல்­வேறு பேருந்­து­களில் ஒன்றில் ஏற்றிச் சென்­றார்கள். ஆனால் பேருந்தின் அடை­யா­ளத்தை என்னால் மு­டி­ய­வில்லை. அதன்­பின்னர் நாம் இடைத்­தங்கல் முகா­மிற்குச் சென்று சொந்த இடத்­திற்கு வருகை தந்­தி­ருந்தோம். எனினும் எனது கணவர் எங்கு சென்றார் என்­பது தெரி­ய­வில்லை. அவ­ருடன் சென்­றி­ருந்த ஒரு­சி­லரை நினைவு வைத்து அவர்­க­ளி­டத்­திலும் விசா­ரித்தோம். இருப்­பினும் கணவர் தொடர்­பான எந்த விப­ரங்­களும் கிடைக்­க­வில்­லை­யென அழு­த­வாறே குறிப்­பிட்டார்.

விடு­தலைப் புலி­களின் பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான சுமன் என்று அழைக்­கப்­படும் வைர­முத்து ரதீஸ்­வ­ரனின் மனைவி ரதீஸ்­வரன் சபிதா சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

யுத்தம் இறுதிக் கட்­டத்தை அடைந்­போது நானும் எனது கண­வரும் பிள்­ளை­களும் 16 ஆம் திகதி இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்தோம். அன்­றை­ய­தினம் இரா­னு­வத்­தினர் பதி­வு­களை மேற்­கொண்­டதன் பின்னர் வேறு இடத்­திற்கு அழைத்துச் சென்­றனர். இதன் பின்னர் அடுத்­தநாள் விசா­ர­ணைக்­காக என்­னு­டைய கண­வரை தனி­யாக அழைத்துச் சென்­றனர். விசா­ர­ணைக்­காக அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்கள் அன்­றைய தினம் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அந்த இடத்தில் நானும் எனது பிள்­ளை­களும் என்னைப் போன்று விசா­ர­ணைக்கு அனுப்­பி­விட்­டி­ருந்த உற­வுகள் பலரும் காத்துக் கொண்­டி­ருந்தோம்.

இரா­ணு­வத்­தினர் யாரையும் விடு­விக்­காத நிலையில் மறுநாள் எமது உற­வி­னர்கள் எங்­கே­யென இரா­ணு­வத்­தி­ன­ரிடம் விசா­ரித்தோம்.

விசா­ரணை நிறை­வ­டைந்­ததும் அவர்­களை அனுப்­பி­வைப்போம். நீங்கள் முகா­மிற்குச் செல்­லுங்கள் உங்­க­ளுடன் அவர்கள் இணைக்­கப்­ப­டு­வார்கள் எனக் கூறினர். அதற்­க­டுத்த தினத்­தன்று நாங்கள் முகா­மிற்குச் சென்றோம். நாங்கள் முகா­மிற்குச் செல்லும் போது என்­னு­டைய கணவர் உள்­ளிட்ட பலரை இரா­ணு­வத்­தினர் மூன்று பஸ்­களில் ஏற்றி கொண்டு செல்­வ­தை நாங்கள் நேர­டி­யா­கவே பார்த்தோம்.

அது மட்­டு­மல்­லாமல் எனது கண­வரை அத்­த­ரு­ணத்தில் சந்­தித்துக் கதைப்­ப­தற்கும் சந்­தர்ப்பம் கிடைத்­தது. அதன்­போது நீங்கள் ஒமந்தை முகா­மிற்குச் செல்­லுங்கள் நாங்­களும் அதே ஓமந்தை முகா­மிற்குத் தான் வரு­கின்றோம் என்று என்­னி­டத்தில் கணவர் கூறினார்.

ஆனால் நாங்கள் அங்கு சென்ற பின்னர் பஸ்­களில் ஏற்றிச் செல்­லப்­பட்ட என்­னு­டைய கணவர் உள்­ளிட்ட புலி­களின் தள­ப­திகள் பொறுப்­பா­ளர்கள் யாருமே அங்கு வர­வில்லை. எங்கள் கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாங்கள் பார்த்திருக்க மூன்று பஸ்களில் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய கணவர் எங்கே. விசாரணை செய்கிறோம் என்று அழைத்துச் செல்லப்பட்டு முகாமிற்கு கொண்டு வருகின்றோம் என்று கூறி பஸ்ஸில் ஏற்றியவர்களுக்கு என்ன நடந்தது?

என்னுடைய கணவரை இராணுவத்தினரே மறைத்து வைத்திருக்கின்றனர். எனக்கு கணவரும் என் பிள்ளைகளுக்கு அப்பாவும் வேண்டும். காலங்கள் பல கடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். எனக்கு எனது கணவரே வேண்டும். அவரை மீட்டுத் தந்தால் அந்தவொரு உதவியே போதுமானது என்றார்.