நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்

Published By: Vishnu

24 Mar, 2021 | 01:19 PM
image

2021.03.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. இலங்கையிலுள்ள நீர்த்தேக்கங்களில் நன்னீர் சிறகு மீன்கள் மற்றும் நன்னீர் பெரு இறால் வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட மீனவத்தொழிலை பயனுள்ள, வினைத்திறனாக, நிலைபேறான வகையில் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கருத்திட்டத்தை மேற்கொள்ளல்.

இலங்கையில் நன்னீர் பெரு இறால் வளர்ப்புக்கு அதிக கேள்வி இருப்பதுடன் கிராமிய மீனவச் சமூகத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய துறையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இறால் குஞ்சுகள் நன்னீர் நீர்த்தேக்கங்களில் விடுவிப்பது விஞ்ஞானபூர்வமாக இடம்பெறாததுடன், அது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வது பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. அதற்மைய இலங்கை வயம்ப பல்கலைக்கழகம், உருஹூனு பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகார சபை, தேசிய நீரியல் வள ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி முகவராண்மை நிறுவனம் (NARA), மற்றும் அவுஸ்திரேலிய ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்துடன் ( James Cook University of Australia) இணைந்து குறித்த ஆய்வுக் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்கும், அதற்காக குறித்த நிறுவனங்களுக்கிடையே ஆய்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. COVID – 19 தொற்று நிலைமையில் கல்விக் கட்டமைப்பின் கற்றல் - கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வானொலிச் சேவை ஒத்துழைப்பை பெறல்.

COVID – 19 தொற்று நிலைமையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்தற்காக 3 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையான பாடவிதானங்களை உள்ளடக்கி 'ஐ அலைவரிசை' மற்றும் 'நேத்ரா அலைவரிசை' ஊடாக 'குருகுலம்' கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகின்றது. அதற்கமைய தற்போது தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சி சென்றடையாத பிரதேசங்களுக்காக வானொலி அலைவரிசைகள் பயன்படுத்தப்படுவது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது. வானொலி மூலம் கல்வி நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் போது, வானொலி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த நிகழ்ச்சிகளை செவிமடுக்கக்கூடிய வாய்ப்புள்ளதுடன் அதிகமான மாணவர்களுக்கு குறித்த கல்வி நிகழ்ச்சியை செவிமடுக்கும் சந்தர்ப்பமும் உண்டு. அதற்கமைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய அலைவரிசை மற்றும் பிராந்திய அலைவரிகைள் மூலமாக குறித்த கல்வி நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இளைஞர் தொழில் முயற்சி அபிவிருத்தி நிதியத்தை தாபித்தல்.

புதிய தொழில் முயற்சியாளர்களாக வியாபாரத் துறையில் பிரவேசிக்கும் இளைஞர் சமூகத்திடம் முதலீட்டுக்கு போதுமான நிதிவளம் இன்மை, அவர்கள் முகங்கொடுக்கும் முக்கிய சவாலாக உள்ளது. அதனால் பல்வேறு முறைசாரா முறைகள் மூலம் தேவையான நிதிவளத்தை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் தொழில் முயற்சியாளர்கள் முயற்சிப்பதால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் மூலம் இளைஞர் அபிவிருத்தி நிதியத்தை ஆரம்பிப்பதற்கும், குறித்த நிதியத்தை மேம்படுத்துவதற்காகவும், இளைஞர் அபிவிருத்தி லொத்தர் ஆரம்பிப்பதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நிதியத்தை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. தேசிய விளையாட்டு தினத்தை பிரகடனப்படுத்தல்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 6 ஆம் திகதி இலங்கை தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு 2014 ஜுலை மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி என்பது, நாட்டில் நிலவும் உற்சவ காலம் மற்றும் புதுவருட கொண்டாட்ட தயார்படுத்தல்களால் குறித்த தினத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்வது சிரமமாகும். விளையாட்டு தினத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் விளையாட்டு தொடர்பான அறிவும், ஈடுபாடும் ஏற்படுவதால் தேசிய விளையாட்டுத் தினமாக வேறொரு தினத்தை பிரகடனப்படுத்தும் தேவையை விளையாட்டுத் துறைசார்ந்த பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு புகழை ஈட்டித்தந்த டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட ஜுலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. முன்மொழியப்பட்ட சொத்துப் பயன்பாட்டு சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டம்.

2021 வரவு செலவு உரையில் குறிப்பிட்டவாறு தேசிய நலன் மற்றும் தேசிய பொருளாதார மேம்பாட்டுக்காக காணி உள்ளிட்ட குறைபயன்பாட்டுச் சொத்துக்களை அதிக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள குறைப் பயன்பாட்டு அரச காணிகள், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ள காணி உள்ளிட்ட குறைப்பயன்பாட்டுச் சொத்துக்கள் அரச தொழில் முயற்சியாளர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக பொருத்தமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவது முக்கிய தேவையாக உள்ளது. அதற்கமைய சொத்துப் பயன்பாட்டு சீர்திருத்த ஆணைக்குழு எனும் பெயரில் நிறுவனமொன்றை தாபித்து அடையாளம் காணப்படும் குறைப்பயன்பாட்டுச் சொத்துக்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வற்காக குறித்த நிறுவனத்துக்கு தேவையான சட்ட அதிகாரங்களை வழங்குவதற்கும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் உள்ளடங்கலாக சொத்துப் பயன்பாட்டு சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தின் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 1969ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்.

இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள செரமிக் உற்பத்திகளை 180 நாள் கடன் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்காக அனுமதியை வழங்குவதற்கும், பத்திக் மற்றும் கைத்;தறி மூலம் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தவிர்ந்த சேலை வகைகளை 90 நாள் கடன் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் உள்ளடங்கலாக 1969ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2214/56 இலக்கம் கொண்ட 2021 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் குறித்த சட்டத்தின் 20 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக முக்கிய கட்டளைச் சட்டங்களை திருத்தம் செய்தல்.

இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச் சட்டங்களான மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் போன்றவற்றை இற்றைப்படுத்துவதற்காக, சட்டவரைஞரால் குறித்த சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறித்த சட்ட மூலத்தில் மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பல சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்கள் உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் திருத்தியமைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 154எ அரசியலமைப்பின் ஏற்பாட்டுக்கமைய மாகாண சபைகளின் கருத்து கேட்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 2013 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான உடன்படிக்கைச் சட்டத்தின் 34(1) உறுப்புரையின் கீழ் தயாரிக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல்.

2013 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான உடன்படிக்கைச் சட்டத்தின் 34(1) உறுப்புரையின் கீழ் தயாரிக்கப்பட்ட 2021 பெப்ரவரி மாதம் 23ஆம் திகதிய 2216/4 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. ஏழு மில்லியன் (07) 'ஸ்புட்னிக் V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்.

கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் சனத்தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப கட்டமாக 05 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது ரஷ்யா தயாரிப்பான 'ஸ்புட்னிக் V' தடுப்பூசி இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய ஏழு மில்லியன் (07) 'ஸ்புட்னிக் V' தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. முன்மொழியப்பட்ட விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம்.

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வரி சேகரித்தல், வினைத்திறனாக்கல் தேவை 2021 வரவு செலவு திட்ட யோசனை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் ஏற்பாடுகளின் கீழ் மதுபானம், சிகரட், வாகனம், தொடர்பாடல் மற்றும் பந்தயம் கட்டல் போன்ற துறைகளுக்கு ஏற்ப பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி அறவிடலை இலகுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்துக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதியமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்காக சர்வதேச ஊக்குவிப்பு செயன்முறை

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் பொருளாதார அபிவிருத்தியின் தீர்மானம் மிக்க சக்தியாக அமைந்தாலும், கடந்த சில வருடங்களில் பல்வேறு முதலீட்டாளர்களை நேரடியாக இலக்காகக் கொள்ளும் மூலோபாயங்களை இனங்கண்டிருக்காமையால் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் செயன்முறை பலவீனமாக உள்ளது. இலங்கை மற்றும் போட்டித்தன்மை மிக்க நாடுகளால் மிகவும் உயர்வான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயாகும். அதனால் முதலீட்டுக்கு பொருத்தமான உபசரிப்பு நாடாக இலங்கையை கவர்ந்திழுப்பதற்காக சிறப்பாக திட்டமிட்டு இசைவு மற்றும் கேந்திரமான சந்தைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்னணி சர்வதேச ஆலோசனை கம்பனி சேவையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்.

கொழும்பு துறைமுக நகரம் என அழைக்கப்படும் விசேட பொருளாதார வலயத்தை அமைப்பதற்காக 2021 ஜனவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அநுராதபுரத்தை ஒளடத உற்பத்தி வலயமாக நிறுவுதல்.

சர்வதேச தர நியமங்களுக்கமைய நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து மருந்துகளும் இலங்கையில் தயாரித்து தரத்தில் உயர்வான மருந்துகளைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குவதற்காக உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் ஒயாமடு தேசத்துக்கு மகுடம் இடம்பெற்ற வளாகத்தில் 'அநுராதபுர ஒளடத உற்பத்தி வலயத்தை' அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஆர்வம் காட்டும் தகைமை வாய்ந்த உள்ளூர்; முதலீட்டாளர்களிடமிருந்து கருத்திட்ட யோசனைகள் கோரப்பட்டு கல்வியியலாளர் குழுவால் 24 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த முதலீட்டாளர்களால் 28,200 மில்லியன் ரூபாய்களை இக்கருத்திட்டத்தின் கீழ் முதலிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முதல் 5 வருட வரிச்சலுகை காலத்துடன் கூடிய 35 வருடங்கள் காணியை குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள ஒளடத உற்பத்தி வலயத்தின் மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்றவற்றை இராஜாங்க அமைச்சின் கீழ் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இறைபதம் அடைந்த இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் அவர்களின் இறுதிக் கிரியைகள்

இறைபதம் அடைந்த இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க, தர்மபால வம்சலங்கார சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ திரிபிடக விஷாரத பிரவச்சன கீர்த்தி ஸ்ரீ சாசன சோபன ஸ்ரீ சுமங்கல வித்யாவதங்ச அதிவணக்கத்துக்குரிய அக்கமகா பண்டித, மகோபாத்ய சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் தேசிய, சமய மற்றும் புத்தசாசன ரீதியாக இலங்கைக்கு ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு வணக்கத்துக்குரிய தேரர் அவர்களின் இறுதிக்கிரியை நிகழ்வு இடம்பெறவுள்ள 2021 மார்ச் மாதம் 25 ஆம் திகதி துக்க தினமாக பிரகடனப்படடுத்துவதற்கும், இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு அன்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான சாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

- அரசாங்க தகவல் திணைக்களம்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55