இனம், சமயம், குலம், மொழி, நிற வேறுபாடுகள் இல்லாத விளையாட்டு மைதானங்கள் நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையங்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

நேற்று எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற 'விளையாட்டு நட்சத்திரங்கள் 2016' விளையாட்டு விழாவின் அங்குரர்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

நாட்டின் 9 மாகாணங்களையும் பிரிதிநிதித்துவபடுத்தி விளையாட்டுத்துறை  பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளின் பங்குபற்றுகையுடன் இந்த 'விளையாட்டு நட்சத்திரங்கள்' விளையாட்டு விழா நடைபெறுகின்றது. 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தை வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்திவிடாது நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த ஒன்றரை வருடகாலமாக அரசாங்கம் கூடிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றுவதற்காக விளையட்டுத்துறையினால் பெற்றுக்கொடுக்க முடியுமான பங்களிப்புகள் மிகவும் கூடியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அந்த வகையில் நாட்டில் 9 மாகாணங்களிலுமுள்ள நகர மற்றும் கிராமப்புற விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி அவை எல்லாவற்றையும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய நிலையங்களாக அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய உச்சபட்சமான வரப்பிரசாதங்களையும் சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிலுள்ள எல்லா விளையாட்டு வீரர்களும் அவர்களது திறமைகள், இயலுமைகளினூடாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விளையாட்டுத்துறையின் எல்லா பிரிவுகளையும் முன்னேற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தமது சேவைக் காலப்பகுதியில் திறமைகளை வெளிப்பிடுத்திய ஓய்வுபெற்ற  10 விளையட்டுத்துறை அதிகரிகளுக்கு இதன்போது ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. 

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி  ஜயசேகர, அமைச்சர் தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த, சப்பிரகமுவ மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா, முதலமைச்சர் மஹீபால ஹேரத், சப்பிரகமுக மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அத்துலகுமார ராகுபத்த ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.