(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கன்னி சம்மேளனம் வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள சம்மேளனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் நன்மை கருதி அமையப்பெற்ற தேசிய அரசாங்கத்தின் இது வரையிலான வெற்றிக் கொண்ட சவால்கள் மற்றும் எதிர் கால இலக்குகள் தொடர்பில் சம்மேளனத்தின் போது அறிவிக்கப்பட உள்ளதுடன் ஏற்பாட்டு பணிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்குகின்றார். 

2015 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பதவியில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றம் மற்றும் ஆகஸ்ட் மாத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பன நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் உதயத்திற்கு காரணமாகியது. இதன் பின்னரான செயற்பாடுகள் மற்றும் மக்கள் நலன்புரி திட்டங்கள் குறித்து இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டன. இதனூடாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கை அடைந்த வெற்றிகள் மற்றும் நன்மதிப்புகள் சொல்லிடங்காதவை .

இந்நிலையில் தனது கன்னி சம்மேளனத்தை மிகவும் அபிமானத்துடன் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கன்னி சம்மேளனத்தில் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.