தேர்தல்கள் நடைபெறும் காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியான சகல இளைஞர் யுவதிகளுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணி தேர்தல்கள் செயலாளரிடம் மனுவொன்றை கையளித்தது.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று மனுவினை தாக்கல் செய்து விட்டு பின் ஊடகங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்தபண்டார மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்ககையில்,

நாட்டில் வாழுகின்ற 3 இலட்ச இளைஞர் யுவதிகள் வாக்களிக்காமல் இருக்கின்றனர். தேர்தல்களுக்காக ஆட்பதிவுகள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி பதிவு செய்யப்படுகின்றது. 

இக்காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியாகாத இளைஞர் யுவதிகள் தேர்தல்கள் இடம்பெறும் காலப்பகுதியில் 18 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆகிவிடுகின்றனர். ஆகவே இக்காலப்பகுதியில் அவர்களுக்கான வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாது செய்யப்படுகின்றது. 

இவ்வாறு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாமல் வருடாந்தம் 3 இலட்சம் இளைஞர் யுவதிகள் நாடு தழுவிய ரீதியில் இருக்கின்றனர். இவர்களினது வாக்குரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக புதியதோர் தேர்தல் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியே இன்று இந்த மனுவை தேர்தல்கள் செயலாளரிடம் கையளித்துள்ளோம்.

குறித்த மனுவினை கையளிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் எனும் ரீதியில் என்னுடன், சட்டத்தரணிகள் குழுவோன்றும் இணைந்து செயற்பட்டது. இம்மனுவின் மூலம் 18 வயது நிரம்பிய சகலருக்கும் தேர்தல் காலப்பகுதியில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்து அவர்களது வாக்குரிமை நிறைவேற்றப்படவேண்டுமென அவர் தெரிவித்தார்.