(.கிஷாந்தன்)
கொஸ்லந்தில் மண்சரிவு ஏற்பட்டு எதிர்வரும் அக்டோம்பர் மாதம் 29 ஆம் திகதியுடன் 2 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அடிப்படை தேவைகளும் இதுவரையில் நிறைவேற்ற படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எமது நாட்டில் 2014.10.29 அன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய சம்பவமே கொஸ்லந்தை மீரியபெத்தையில் நடைபெற்ற மண்சரிவாகும். மண்சரிவில் முழு தோட்டமே மண்மேட்டினால் புதையுண்டதுடன் அதிகமானவர்களும் மண்மேட்டில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவமே மலையக மக்களிடையில் இருக்கும் குடியிருப்பில் உள்ள ஆபத்துகளை வெளிகாட்டிய ஒரு சம்பவமாகும்.

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை கூட மீட்க முடியாமல் அப் பிரதேசமே கைவிடப்பட்டது. இதன்போது 39 பேர் காணாமல் போயிருந்ததாகவும், இவர்களில் 14 பேர்களின் உடல்களும், எச்சங்களும் மீட்கப்பட்டதாகவும் அப்போது இருந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சொத்துகளையும் இழந்து உறவுகளையும் இழந்து நிர்கதியான நிலையில் அநாதைகளாக இத்தோட்டத்தில் உள்ள தொழிற்சாலையிலும், பாடசாலையிலும் தற்காலிமாக தஞ்சம் புகுந்தனர்.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட போது இம்மக்களுக்கு அணைவரும் கரிசினை காட்டினாலும், இம்மக்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறிக்கு ஆளாகியது.

அனர்த்தம் ஏற்பட்டு 2 வருடங்கள் எட்டியுள்ளபோதிலும் இம்மக்கள் நிரந்தர குடியிருப்பில் குடியேருவதற்கு காத்திருப்பதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் அரசாங்கம் ஆட்சி மாற்றத்தினாலும், 100 நாள் வேலைத்திட்டத்தினாலும் இழுபறியானது, அத்தோடு வேலைபாடுகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது ஞாபகப்படுத்தபடுகின்றது. எனினும் இந்த வீடமைப்புதிட்டம் தற்போது முற்று பெரும் தருணத்தில் உள்ளது.

இருப்பினும் 2 வருடங்களில் விசேட தினங்களான பொங்கல் அன்றும், தமிழ் சிங்கள புதுவருடம் ஆகிய விசேட தினங்களில் வீடுகளை கையளிப்படும் என அதிகாரிகளினால் கூறிய போதிலும் இது சாத்தியப்படவில்லை.

எனவே உயிரிழந்தவர்களுக்காக வழிபாடுகள் செய்வதற்கு இம்முறை எதிர்வரும் தீபாவளிக்கு முன்பதாக உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை புதிய வீடுகளில் வைத்து வழிபாடுகள் செய்தவற்கு கொஸ்லந்தை மக்கள்தெனிய பகுதியில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் கையளிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டு பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தஞ்சம் புகுந்த 75 குடும்பங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இரண்டு வருடங்கள் தங்களுடைய வாழ்க்கையை பல துயரங்களுடன் பல்வேறுப்பட்ட அபிலாஷகளை இழந்தும் எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்களுக்கு எப்போது விடிவு ஏற்படும் ?