எதிர்வினைகளும் மறக்கும் சுபாவங்களும்..!

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 01:15 PM
image

எம்.எஸ்.தீன் -
முஸ்லிம்கள் தமக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளையும், அடக்குமுறைகளையும், தமது மக்கள் பிரதிநிதிகளின் சமூகத் துரோகங்களையும் இலகுவாக மறந்துவிடும் சுபாவத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

1915ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் காலத்திற்கு காலம் நடைபெற்றும் வந்துள்ளன. ஆயினும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை.

முஸ்லிம்களின் இந்நிலைக்கு அச்சமூகத்தை தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் சமூக, அரசியல், மதத் தலைவர்களே காரணமாகும். இவர்கள் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுடன் ஒட்டி உறவாடி தங்களின் சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலேயே அக்கறையுடன் செயற்படுகின்றார்கள். 

இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களின் மீது பல தடவைகள் திட்டமிடப்பட்டு வேண்டுமென்று தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை மட்டுமே இக்கட்டுரையில் உள்ளடக்கப்படுகின்றது.


திகன கலவரம்
கண்டி – திகன கலவரம் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான நஸ்டஈடும், நீதியும் வழங்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு மார்ச் 04ஆம் திகதி பௌத்த இனவாதக் கும்பலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கலவரம் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

மார்ச் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாக அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இத்தாக்குதலில் முஸ்லிம்களின் 445 வீடுகளும், 24 பள்ளிவாசல்கள், 65 வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலவும் தீயிட்டு சேதமாக்கப்பட்டன. இரண்டு பேர் உயிர் இழந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இத்தாக்குதல்கள் குறித்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்களில் உண்மையான தாக்குதல்தாரிகள் இன்று வரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை. அவர்களை கண்டுபிடிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தவுமில்லை. இத்தாக்குதல்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக் குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. என்றாலும், இன்னும் இந்த விசாரணை அறிக்கை வெளிப்படுத்தவில்லை. 

திகன தாக்குதல் சம்பவம் அரசியல் பின்புலத்தைக் கொண்டதாகவே இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றன. திகன வன்முறையின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் மஹாசோன் பலகாய (மாபெரும் பிசாசுப்படை) அமைப்பின் தலைவர் அமித்வீரசிங்க உட்பட 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். ஆயினும், அமித்வீரசிங்க 2019 ஜுன் 04ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை ஆட்சி மாற்றத்தின் மூலமாகவே உறுதி செய்து கொள்ளலாமென்று முஸ்லிம்கள் முடிவு செய்தார்கள். அதனால்தான், மைத்திரி – ரணில் கூட்டாட்சியை முஸ்லிம்கள் ஏற்படுத்தினார்கள். ஆனால், அந்த ஆட்சியிலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை விடவும் மைத்திரி – ரணில் கூட்டாட்சியில்தான் முஸ்லிம்கள் வரலாற்றில் என்றும் அனுபவிக்காத துன்பங்களை அடைந்தார்கள். காலி – ஜிந்தோட்டை, அம்பாறை, மினுவாங்கொடை எனப் பல இடங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காகவே பௌத்த இனவாதிகளினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

2014ஆம் ஆண்டு தாக்குதல் 
2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11ஆம் திகதி தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த மதகுரு ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டன. இதனைக் கண்டித்து சில பௌத்த பிக்குகளின் தலைமையில் அளுத்கம நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதனால், வன்முறை வெடித்தது.

அளுத்கம, பேருவளை, தர்காநகர் பிரதேசங்கள் பௌத்த கடும்போக்கு வன்முறையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் முஸ்லிம்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி ஒளிந்து கொண்டார்கள். இந்த வன்முறையில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் உயிர் இழந்தார்கள். சுமார் 80 பேர் காயங்களுக்குள்ளானார்கள். 

இத்தாக்குதல்கள் நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தார். அவரால் முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ரிஷாத்; பதியூதீன், அதாவுல்லாஹ் ஆகியோர்களும் அமைச்சர் பதவிகளிலேயே இருந்தார்கள். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. இத்தாக்குதல் நடைபெற்று 06 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தாக்குதல்கள்தாரிகள் கைது செய்யப்படவில்லை.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர், குருநாகல், மினுவானங்கொடை உட்பட சுமார் 30 பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். பாதுகாப்பு தரப்பினரின் அனுசரணையுடனே இத்தாக்குதல்கள் நடைபெற்றன. வழக்கம் போலவே முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

பௌத்த கடும்போக்குவாத தேரர்களினதும், அமைப்புக்களினதும் வழிகாட்டுதலில் இத்தாக்குதல்கள் நடைபெற்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், வீடுகளும், பள்ளிவாசல்களும் இலக்கு வைக்கப்பட்டன. முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். 

இத்தாக்குதல் சம்பவங்களிலும் வெளியூர்களில் வருகை தந்தவர்களே தாக்குதல்களை மேற்கொண்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தார்கள். இத்தாக்குதல்களை தாக்குதல்களுக்குள்ளான பிரதேசத்தை சேர்த்த பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் பகிரங்கமாக கண்டித்து ஆர்ப்பாட்டங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்களினால் முஸ்லிம்களின் பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

அரசாங்கத்தின் நிலைப்பாடு
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியும் சரி, மைத்திரி – ரணில் கூட்டாட்சியும் சரி இரண்டு அரசாங்கங்களும் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னவார்த்தைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

மேற்படி ஆட்சிக் காலங்களுக்கு முன்னரும் முஸ்லிம்களின் மீது நாட்டின் பல பாகங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்று வரைக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் தரப்படவில்லை.

இதன் மூலம் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் பகை அரசியலை செய்து கொண்டாலும், ஆட்சியை பிடிப்பதற்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து செயற்பட்டாலும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், சமூகக் கட்டமைப்புக்களையும் சீர்குழைப்பதில் ஒற்றுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதனைக் காண முடிகின்றது. 

முஸ்லிம் தலைவர்கள்
முஸ்லிம்களின் மீது மேற்படி தாக்குதல்கள் நடைபெற்ற காலங்களில் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே இருந்துள்ளனர். 

முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறியதுடன், முஸ்லிம்களுக்கு நீதியை வழங்காத அரசாங்கத்தில் பங்காளிகளாகவும் உறவு வைத்துக் கொண்டார்கள். 

அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது, பௌத்த இனவாதிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்களை கண்டிக்காது, பௌத்த கடும்போக்குவாதிகளை மாத்திரம் கண்டித்தார்கள். அது மட்டுமல்லாது ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்குரிய முட்டுக் கொடுப்புக்களையும் செய்தார்கள். 

முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்திற்கு விரோதமாக நடந்து கொண்டிருப்பதற்கு பிரதான காரணம், முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை மறப்பதேயாகும். 

அநியாயங்களுக்குரிய நீதியை கேட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பதற்காக, அவற்றை சமூகம் மறந்துவிட முடியாது. தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நியாயம் கேட்கும் போதே மாத்திரமே ஓரளவுக்காவது பாதுகாப்பு கிடைக்கும் என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13