திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகபுரம் 2 ஆம் பிரிவு கற்புகனார் வீதியைச் 21 வயதுடைய சிவகுமார் வினோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

திருக்கோவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியதால் தம்பட்டை முருகன் கோவிலுக்கு அருகில் தென்னை மரம் ஒன்று முச்சக்கர வண்டியின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்த விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.