அமைச்சர் பாலித ரங்கே பண்டார தன்னை தாக்கியதாக 22 வயதான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (12) இரவு பல்லம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு அமைச்சர் பாலித ரங்கே பண்டார தனது வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர் மதுபோதையில் நடு வீதியில் நின்றுக்கொண்டிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இளைஞரை பல்லம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் பல்லம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த நபரை  அமைச்சர் பாலித ரங்கே பண்டார பொலிஸில் ஒப்படைத்துள்ளார் எனவும், இதேவேளை வைத்திய பரிசோதனையில் குறித்த நபர்  மது அருந்தியிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள இளைஞர் தான் மதுபோதையில் இல்லையெனவும்,தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.