உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன்  நோர்வே பிரதமர் ஏhனா சோல்பேர்க்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள், மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் துரித கதியிலும் இதுவரையில் சரியான திசையிலும் செல்வதாகவும் எடுத்துரைத்துரைத்துள்ளார். 

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் ஏhனா சோல்பேர்க்கிற்கும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. 

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 

புதிய அரசியலமைப்பு, தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும் நோர்வே அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுக்கவுள்ள விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு பலதரப்பட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருந்தன.