மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது இன்று தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர்  குறித்து விசாரிக்கும் இந்த காணாமல்போனோர் ஆணைக்குழுவின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை இடையிடையே நீடிக்கப்பட்டு வந்தது. 

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம முடிவுக்கு வந்த நிலையிலேயே இன்றைய தினம் இது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்தக் குழுவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு  சர்வதேச ஆலோசனைகளை வழங்க சர்வதேச நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.  

இது தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம  வீரகேசரிக்கு தகவல் தருகையில், 

முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவர எமக்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் நாம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை என்ன செய்தோம் என்பதை விளக்கி அறிக்கையாக ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்தோம். மாறாக இது முழுமையான அறிக்கை என்று கூறமுடியாது. எமக்கு இன்னும் 12 மாதகாலம் வழங்கியிருந்தால் நாங்கள் பெரும்பால பிரச்சினைகளுக்கு முடிவினைக் கொண்டு வந்திருப்போம். புதிதாக நிறுவப்படவுள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எமது அறிக்கை வழங்கப்படுமா என தெரியவில்லை என்றார்.