காரைக்குடியில் தன் ஒருதலை காதலை சேர்த்து வைக்ககோரி கையடக்கத் தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் இரு மகன்களின் ஒருவரான ஜெயச்சந்திரன் மும்தாஜ் என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், ஜெயச்சந்திரனின் குடிப்பழக்கத்தால் மும்தாஜ் அவரைப் பிரிந்து சென்று விட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே ஜெயச்சந்திரனின் அண்ணன் முருகனுக்கு தம்பியின் மனைவி மும்தாஜ் மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டது.

எனவே, தம்பி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, 60 அடி உயர கோபுரத்தில் முருகன் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

உடனடியாக முருகனின் குடும்பத்தார் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க,சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கீழேயிறங்க சம்மதித்த முருகன், செங்கல்கற்களை தலையில் அடித்துக் கொண்டு புலம்பியுள்ளார். தரையை நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த முருகனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக முருகனை பொலிஸார் வைத்தியசாலைக்கு  கொண்டு சென்றுள்ளனர்.

கையடக்கத்தொலைபேசி கோபுரத்தில் ஏறிய முருகன் மது போதையில் இருந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.