கூட்டணி நெருக்கடியில் காங்கிரஸ் ?

Published By: Gayathri

02 Mar, 2021 | 02:04 PM
image

“மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்கு மாறாக கடனாக பெறப்படும் தொகை நீங்கலாக மாநிலத்தின் மொத்தக் கடன் 5.70 இலட்சம் கோடி ரூபா” என்ற அ.தி.மு.க. அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையின் 106 ஆவது பக்கத்தில் உள்ள வரிகள் இன்றைய சூழலில் தமிழகத்தின் நிதி நிலைமை எத்தகையை நெருக்கடியில் மூழ்கியிருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

இதைக் கண்டித்து பிரதான எதிர்கட்சியான தி.மு.க. வெளிநடப்புச் செய்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நடைபெறும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டது.

அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்புச் செய்துவிட்டு வெளியே வந்து விட்டது. 

சட்டமன்றத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து வெளிநடப்புச் செய்து விட்டாலும், இரு கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு இன்னும் உறுதி செய்யப்படாமல் ஒரு “கூட்டணி நெருக்கடி” கொடி கட்டிப் பறப்பதுதான் தற்போதைய தலைப்புச் செய்தி.

தி.மு.க. சார்பில் தனியாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் தனியாக “ஏர் உழவன்” பேரணிகளை- வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வின் போராட்டங்கள் கட்சி நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது என்றாலும், காங்கிரஸின் நிகழ்ச்சி வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்படும் பேரணி ஒரு பொது நிகழ்ச்சி நிரல் என்பதேயாகும். 

இதுபோன்ற பேரணியில் தி.மு.க.வையோ, கூட்டணிக் கட்சிகளையோ காங்கிரஸ் கட்சி அழைக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணித் தலைவராக இருக்கும் ஸ்டாலினையும் அழைக்கவில்லை.

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகூட மாநாடு ஒன்றை நடத்தி ஸ்டாலினை அழைத்துப் பேச வைத்து விட்டது. 

ஆனால், இதுவரை காங்கிரஸ் மேடையில் தி.மு.க. தலைவரை காணமுடியவில்லை. “தி.மு.க.வை நம் மேடைக்கு அழைத்து வந்து விட்டால் ஆசனப் பேரம் பேச முடியாது” என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது.

அதனால்தான் தமிழகம் வந்த ராகுல் காந்தி ஸ்டாலினை சந்திக்கவில்லை.

அவர் புதுவைக்கு வந்தபோதும் சந்திக்கவில்லை. காங்கிரஸும் - தி.மு.க.வும் பரஸ்பர ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது புது கூட்டணி சூழல்களை உருவாகுமா என்ற கேள்வி எங்கும் எழுந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை “தேடிச் சென்று கூட்டணி வைக்கவேண்டிய நிலையில்” காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை என்பதையே காலக் கண்ணாடி உணர்த்துகிறது.

1967இல் அதாவது 54 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த போது ஆளுமை மிக்க காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்தார்கள்.

மாநில அளவில் மதிப்புமிக்க தலைவர்கள் இருந்ததால் அவர்களின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைந்தன. ஆனால் அந்த தோல்விக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, அதனால் தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு எல்லாம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தியது.

காமராஜர் போன்ற எளிமையான தலைவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் இருந்த செல்வாக்கையும் சிறகடித்துப் பறக்கவிட்டு விட்டது. 232 தொகுதிகளில் போட்டியிட்டு 1967இல் 51 இடங்களில் வெற்றி பெற்று, 41 சதவீத வாக்குகளை வாங்கியிருந்தது அக்கட்சி. 

அந்த 41 சதவீதம் எங்கே போனது? யார் யாரிடம் பிரிந்து சென்றது? என்பதை இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதை கண்டுபிடிக்கவும் அடுத்தடுத்து வந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் பலவீனம்,  தமிழகத்தில் மறைந்த இந்திரா காந்தி இருந்த போதும் தூக்கி நிறுத்த முடியவில்லை. 

ராஜீவ் காந்தி 13 முறை தமிழகத்திற்கு விஸிட் அடித்தபோதும் கட்சியை வளர்க்க முடியவில்லை. இப்போது ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வந்தும் “காங்கிரஸ் கட்சியின் தேவையை” மற்ற கட்சிகளுக்கு உணர்த்த முடியவில்லை.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் காங்கிரஸின் மீது எழுந்த வெறுப்பு இன்னும் மறையவில்லை. அதனால் இன்று “4” சதவீத வாக்கு உள்ள கட்சி காங்கிரஸ் என்ற எண்ணம் தமிழக வாக்காளர்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டு விட்டது.

மாநிலத் தலைவர்களை வளர்க்காமல், டெல்லியிலிருந்து தலைவர்களை திணிக்கும் கலாசாரத்தால் காங்கிரஸ் கட்சி கதியற்றுக் கிடக்கிறது. புதுச்சேரியில் அப்படியொரு “தலைவர் திணிப்பில்” ஈடுபட்ட முதலமைச்சராக நாராயணசாமியை நியமித்ததாலேயே தற்போது அங்கும் தேர்தலுக்கு முன்பே ஆட்சியை இழந்து நிற்கிறது. 

தென்னகத்தில் இருந்த கடைசி ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி இழந்து, தென்னக மாநிலங்களின் வரை படத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு இடமில்லை என்ற சூழலை உருவாக்கி விட்டது. மாநிலத்தில் கட்சிக்கு செல்வாக்கினை வளர்க்க யாரும் முனைந்து செயற்படாதது, புதுச்சேரியில் இருந்த ஆட்சியையும் பறிகொடுத்தது.

எல்லாம் அக்கட்சியின் தமிழக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ஆட்சிக்கு வர முடியாது என்று 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு உணர்த்தி விட்டது. அது தமிழக ஆதாரம் என்றால், சமீபத்தில் பீஹாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியால், அங்கு லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆட்சிக்கு வர முடியவில்லை.

தாங்களும் ஆட்சிக்கு வரமுடியாது. இன்னொரு கூட்டணிக் கட்சி ஆட்சிக்கு வரவும் தங்களால் உதவிட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க. சிம்மசொப்பனமாக இருக்கிறது. “மாலுமி” இல்லாத கப்பல் போல்-இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தற்போது காங்கிரஸ் கட்சி நிற்கிறது.

2004 முதல் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி 2014 பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டியிட்டது. 

மற்றபடி 2006,  2011, 2016 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்தித்து விட்டது. அதில் ஒரு முறை மட்டுமே ஆட்சிக்கு வந்தது.

தி.மு.க. இந்த சூழலில், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திரும்பக்கூடாது என்பதில் தி.மு.க இந்த முறை தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. 

அதனால் காங்கிரஸுக்கும், தி.மு.க.விற்கும் இடையிலான தொகுதி பங்கீடு தொங்கலில் நிற்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை 18 முதல் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பது தங்களுக்கு இலாபமில்லை என்று ஊர்ஜிதமாக நம்புகிறது.

ஆனால், அந்த எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து தற்போது குழுக்கள் சந்தித்துப் பேசிக் கொண்டாலும், ஸ்டாலினும், ராகுல் காந்தியும் எடுக்கும் இறுதி முடிவே போட்டியிடும் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும்.

அதேநேரத்தில், “கௌரவப்” பிரச்சினையால் காங்கிரஸ் கட்சி மாற்று முடிவுகளை எடுக்கும் சூழல் உருவானால் அதன் பிறகு தமிழகத்தில் புதிய கூட்டணி சூழல் பிறக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22