வெற்றிகரமாக நிறைவடைந்த பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணம்

Published By: Vishnu

25 Feb, 2021 | 09:05 AM
image

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜய பயணத்தை வெற்றிகரமாக முடித்தக் கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டார்.

அதன்படி இம்ரான் கான் பாகிஸ்தானிய அதிகாரிகள் பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான 'PAK2 Gulf Stream' என்ற விமானத்தின் மூலம் அவர் நேற்று மாலை நாட்டை விட்டு வெளியேறினார்.

பாகிஸ்தான் பிரதமரை வழியனுப்பி வைப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்றிச் செல்லும் விமானத்தை இந்திய வான்வெளியூடாக பயணிப்பதற்கு அனுமதி பெற்றிருந்தாலும், அந்த வழியைப் பயன்படுத்தாமல் அரேபிய கடலுக்கு மேலேயுள்ள வான் வழியூடாக விமானத்தை இயக்குவதற்கும் பாகிஸ்தான் விமானப் படை இதன்போது நடவடிக்க‍ை எடுத்தது.

அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குறித்த வான் வழியூடாக பயணித்த பாகிஸ்தானை சென்றடைந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2021 பெப்ரவரி 23 - 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.

பிரதமர் இம்ரான் கானுடன் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்கிய உயர்மட்ட தூதுக்குழு ஒன்றும் விஜயம் செய்திருந்தது. 

இரு நாடுகளிலும் புதிய அரசாங்கங்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது விஜயமான இதுவாகும். 

இலங்கைப் பிரதமர் மற்றும் அமைச்சரவையினால் பிரதமர் இம்ரான் கானுக்கு அன்பான சம்பிரதாயபூர்வ வரவேற்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் இம்ரான் கான் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தூதுக்குழு மட்டத்திலான சந்திப்புக்களில் ஈடுபட்டார். 

இரு தரப்பினரும் ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகளிலான பன்முக இருதரப்பு உறவுகளை விரிவாக மீளாய்வு செய்தனர். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையால் குறிக்கப்பட்ட அன்பான மற்றும் சிறந்ததொரு சூழ்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகள், கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு அமர்வு மற்றும் செயலாளர்கள் மட்டத்திலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், தமது நெருங்கிய மற்றும் வழக்கமான ஆலோசனைகளை மேலும் கட்டியெழுப்புவதற்கானதொரு சரியான வாய்ப்பை இந்த விஜயம் இரு தரப்பினருக்கும் வழங்கியது.

உயர் மட்ட மற்றும் பிரதிநிதித்துவ மட்டத்திலான பரிமாற்றங்களை ஊக்குவித்தல் மற்றும் அந்தந்த நிறுவனங்களுக்கிடையில் ஆலோசனைகள், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் விரிவான முறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் பரந்த ஒருமித்த கருத்தை எட்டியதுடன், அடிக்கடி சந்திப்புக்களில் ஈடுபடுவதற்கும் ஒப்புக்கொண்டனர். 

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான 'அமைதியான அண்டை நாடு' என்ற நோக்கிற்கு அமைவான பாகிஸ்தானின் ஆதரவை பிரதமர் இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தினார்.

கலாசார இணைப்புக்கள், மனிதவள அபிவிருத்தி மற்றும் பல்வேறு பகுதிகளிலான திறன் விருத்தி, கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் விரிவான ஈடுபாட்டை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். 

பாகிஸ்தான் - இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவத் துறையில் (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 100 புலமைப்பரிசில்களை வழங்குவதாக பாகிஸ்தான் தரப்பு அறிவித்தது. மனிதவள அபிவிருத்தி மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றில் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பை இலங்கைத் தரப்பு பாராட்டியது.

பௌத்த தொல்பொருள் தளங்களுக்கான மதச் சுற்றுலாவிற்கு பெருமளவிலான ஆற்றல் இருப்பதை உணர்ந்து, காந்தார நாகரிகத்திற்கு முந்தைய பழங்கால மற்றும் கலாச்சார உறவுகளை குறிப்பிடுகையில், இரு தரப்பினரும் சுற்றுலாத் துறையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அதே வேளை, பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட விருந்தோம்பல் தொழில் துறையில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் நன்மைகளையும் எடுத்துரைத்தனர். 

கண்டியின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆசிய நாகரிகம் மற்றும் கலாச்சார மையத்தை நிறுவுவதற்கான தனது முயற்சியை பாகிஸ்தான் தரப்பு அறிவித்தது. மக்கள் தொடர்பு, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக விமான இணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்காக, 2021 பெப்ரவரி 24 ஆம் திகதி உயர்மட்ட பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடொன்று நடைபெற்றது. 

இரு நாடுகளினதும் வணிக சமூகங்களிடையே பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டிற்கான ஒரு வாய்ப்பை இந்த மாநாடு வழங்கியது. பரஸ்பர ஆர்வத்தின் முக்கிய துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். 

பில்லியன் அமெரிக்க டொலர் என்ற இருதரப்பு வர்த்தக இலக்கை அடைவதற்கான முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டது:

i. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ii. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

iii. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரவின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ) மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி பல்கலைக்கழகத்தின் இரசாயணவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான சர்வதேச மையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

iv. இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் கொம்சட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு நோக்கம்

v. இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானின் லாகூர் ஸ்கூல் ஒஃப் எக்கொனொமிக்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் மறுசீரமைப்பை பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூட்டாக ஒப்புக் கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் தமது திருப்தியை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்பு உரையாடலுக்காக, ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்துவதானது, பாதுகாப்புத் துறை உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை மேலும் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

பிரதமர் இம்ரான் கான் புதிய 50 மில்லியன் டொலர் பெறுமதியிலான பாதுகாப்புக் கடன் வரி வசதியொன்றை அறிவித்தார். பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறைப் பகிர்வு தொடர்பான விடயங்களைக் கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வலுவான கூட்டாண்மை அவசியமாகும் என்பதை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

பிரதமர் இம்ரான் கான் 2021 பெப்ரவரி 24 ஆம் திகதி இலங்கை விளையாட்டு சமூகத்துடனான ஊடாடும் அமர்வொன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்வில், கொழும்பில் 'இம்ரான் கான் உயர் செயற்றிறன் விளையாட்டு மையம்' தொடங்கப்படவிருப்பதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் முன்னிலையில் இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.

இலங்கையில் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்காக, பயிற்சி மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கலான வசதிகளுக்காக 52 மில்லியன் பாகிஸ்தான் ரூபா தொகையை வழங்குவதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தரப்பு அறிவித்தது.

கலசார பன்முகத்தன்மை, அமைதியான சகவாழ்வு மற்றும் பரஸ்பர பச்சாத்தாபம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாக இரு தரப்பினரும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் குறிப்பிட்ட அதே வேளை, இதுபோன்ற விடயங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர்.

இரு தரப்பினரும் சார்க் சாசனத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், பிராந்தியத்தில் உள்ள மக்களின் நலனுக்காக, ஒருங்கிணைப்புக்களை உருவாக்குவதற்கான சார்க் உறுப்பு நாடுகளின் தேவையை வலியுறுத்தினர். இரு தரப்பினரும் சாசன அடிப்படையிலான அமைப்புக்களைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பிராந்தியத்தில் செழிப்பை அடைந்து கொள்வதற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சார்க் செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றி கலந்துரையாடிய இரு தரப்பினரும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். சர்வதேச நியாயத்தன்மைக்கு ஏற்ப ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் நிலுவையில் உள்ள மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இம்ரான் கான் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பிராந்திய இணைப்பின் சூழலில், பிராந்தியப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் செழிப்புக்காக பி.ஆர்.ஐ. யின் முதன்மைத் திட்டமான சீனா - பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் வழங்கிய வாய்ப்புக்களை பிரதமர் இம்ரான் கான் எடுத்துரைத்தார்.

கோவிட்-19 முன்வைத்த முன்னோடியில்லாத சவால்கள் குறித்து கலந்துரையாடுகையில், தொற்றுநோயைக் கையாள்வதற்கான கூட்டு முயற்சிகளின் அவசியத்தை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டினர். கோவிட் தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்காக அளித்த மகத்தான உதவிகளுக்காக, பாகிஸ்தானுக்கு இலங்கை நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் தொடர்ந்தும் அளித்த ஆதரவுகளுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் இலங்கைப் பிரதமர் நன்றிகளைத் தெரிவித்தார்.

தமது வசதிகளுக்கு அமைய பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

தனக்கும், தனது பிரதிநிதிகளுக்கும் அன்பான விருந்தோம்பலை வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் இம்ரான் கான் நன்றிகளைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26