பா.ஜ.க.வுக்கு வேண்டாத வேலை

Published By: Digital Desk 2

22 Feb, 2021 | 02:40 PM
image

என்.கண்ணன்

பாரதீய ஜனதா கட்சி, தீவிர வலது சாரி இந்துத்துவ கட்சி. ஆனால், இலங்கையிலோ பௌத்தர்கள் தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில், பா.ஜ.க.வினால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது, கனவு என்பதை விட மிகையான கற்பனை என்றே கூறலாம். 

தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, அல்லது ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கு வியூகங்களை வகுத்திருக்கும் பாரதீய ஜனதா கட்சி, அடுத்ததாக இலங்கையின் மீதும், நேபாளத்தின் மீதும் குறிவைத்திருக்கிறது.

பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா இதனைத் தெரிவித்திருப்பதாக, திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் டெப் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சிலர் இதனை நகைச்சுவையாக பார்க்கிறார்கள். சிலர் இதனை ‘சீரியசான” விடயமாக நோக்குகிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சியை வலுவாக எதிர்க்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.

நேபாள வெளியுறவு அமைச்சர் இந்தியாவிடம் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள அதேவேளை, இலங்கையிலும் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியுமா ? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா ? என்ற விவாதங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், வெளிநாட்டு அரசியல் கட்சிகளால் இலங்கையில் செயற்பட முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவ.

வெளிநாட்டு அரசியல் கட்சி ஒன்று, இலங்கையில் பதிவு செய்து கொள்வதற்கோ, தேர்தலில் போட்டியிடுவதற்கோ நேரடியாக வாய்ப்பு இல்லை.

ஆனால், அந்தக் கட்சியின் கிளை போலச் செயற்படக் கூடிய ஒரு கட்சியை, இலங்கையில் தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியும். 

உதாரணத்துக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தாயகம் இலங்கை அல்ல. அவை சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவின் கம்யூனிச சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டவை. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிகளாகத் தான் அவை இருக்கின்றன.

ஆனால் உள்நாட்டில் அவற்றுக்கென ஒரு கட்டமைப்பு, தலைமைத்துவம் எல்லாம் இருக்கின்றன.

சீன, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இவற்றுக்கு தொடர்புகள் இருந்தாலும், அங்கிருந்து நேரடியாக கட்டுப்படுத்தப்படுபவை இல்லை.

அதுபோல, பா.ஜ.க.வினால் நேரடியாக இலங்கை தேர்தல்களில் போட்டியிட முடியாவிட்டாலும், அதனை ஒத்த பெயருடனோ, வேறொரு பெயரிலோ இலங்கையில் ஒரு கட்சியை உருவாக்க முடியும்.

தேர்தலில் போட்டியிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர், ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்குத் தேவையான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, அதற்குரிய அங்கீகாரத்தையும் பெற முடியும்.

ஆக, பா.ஜ.க. இலங்கையில் வேறொரு வடிவத்தில் காலடி வைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

அந்தக் கட்சி இலங்கையில் போட்டியிட நினைத்தால், உள்நாட்டில் கட்சியை உருவாக்கி போட்டியிட வைக்க முடியும்.

ஆனால், அமித்ஷாவின் கனவான, இலங்கையில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற முடியுமா என்பது தான் சிக்கல்.

பாரதீய ஜனதா கட்சி, தீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சி. ஆனால், இலங்கையிலோ பௌத்தர்கள் தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

இவ்வாறான நிலையில், பா.ஜ.க.வினால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது, கனவு என்பதை விட மிகையான கற்பனை என்று கூறுவதே பொருத்தம்.

இதனைப் புரிந்து கொண்டிருப்பதால் தான், அமைச்சரவை இணைப் பேச்சாளரான உதய கம்மன்பில, இன்னொரு நாட்டின் கட்சி இங்கு ஆட்சியைப் பிடிப்பதற்கு தேசப்பற்றுள்ள இலங்கை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் உதய கம்மன்பில போன்றவர்களுக்கு, இவ்வாறான முயற்சிகள் சிங்கள மக்களிடம் எடுபடாது என்பது நன்றாகவே தெரியும்.

எனவே, பா.ஜ.க. தனது பினாமியாக நிறுத்தும் ஒரு கட்சியைக் கொண்டு இலங்கையில் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

ஆனால் ஆட்சிமைப்பதற்கு பேரம் பேசக் கூடிய, ஆட்சியாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடிய ஒரு கட்சியை வேண்டுமானால் கட்டியெழுப்பலாம். அதுவும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்க முடியாது. 

சில காலங்களுக்கு முன்னர், சுப்ரமணியன் சுவாமி அளித்திருந்த ஒரு செவ்வியில், இலங்கையில் இந்துத்துவ கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.

எனவே, அமித் ஷாவின் விருப்பம் என்பது, புதிய விடயமல்ல. இவ்வாறாக ஒரு கட்சியை இலங்கையில் உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. எதனை அடைய என்று எதிர்பார்க்கிறது என்ற கேள்வி உள்ளது.

இலங்கையில், இந்தியா தனது படைகளை நிறுத்த முடியாது. ஆனால் ஒரு கட்சியை உருவாக்கி, அதனை வலுப்படுத்துவதன் மூலம், இலங்கையின் அரசியலில் தான் நினைத்ததை சாதிக்க முடியும்.

அவ்வாறாயின் இந்துக்கள் செறிவாக வாழும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே, பா.ஜ.க. ஒரு கட்சியை தொடங்க வேண்டும். அவ்வாறான கட்சி நிச்சயமாக, பா.ஜ.க.வின் எடிபிடி என்ற அடையாளத்துடன் தான் பார்க்கப்படும். 

அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தி, ஓரம்கட்டும் வகையிலான முயற்சியாக அது இருக்குமேயானால், அதுவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தும்.

ஏனென்றால், இலங்கையில் தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ள இந்தச் சூழலில், பா.ஜ.க.வும், வேறு குட்டையைக் குழப்ப முனைவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தும்.

இலங்கையில் தமது கட்சியை விரிவாக்கம் செய்வதன் மூலம், தமிழர்களின் நலனை பேண முனைகிறதா? இலங்கையின் நலனை பேணப் போகிறதா ? அல்லது இந்திய நலனை உறுதி செய்யப் போகிறதா ? என்ற பல கேள்விகள் அதன் முன் இருக்கும்.

இவற்றுக்கு அப்பால் பா.ஜ.க.வின் இந்த முயற்சி சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கே சாதகமானதாக இருக்கப் போகிறது. ஏற்கனவே சீனாவுடன் நெருங்கியுள்ள இலங்கை அரசாங்கம், இந்தியாவை வெட்டி விட்டு காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறான தருணத்தில், பா.ஜ.க. இலங்கையில் கால் வைக்கும் திட்டத்தை கொண்டிருந்தால், வழக்கத்திலே இந்தியா படையெடுக்கும், ஆக்கிரமிக்கும் என்ற சந்தேகம் கொண்டுள்ள சிங்கள மக்களை இன்னும் உசார்படுத்தி விடும்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அகலக் கால் பதித்திருப்பினும், தனது நாட்டுக்கு வெளியே காலடி எடுத்து வைக்க முனைவது அதற்கு ஆபத்தாகவே அமையலாம்.

ஏனென்றால், அவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது, அது பா.ஜ.க. என்ற கட்சியின் முனைப்பாக பார்க்கப்படாது. அது இந்தியாவின் அகண்ட ஆதிக்க முயற்சியாகவே பார்க்கப்படும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அது பாதிக்கும்.

வடக்கு, கிழக்கில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தமிழர்கள்,  பா.ஜ.க. போன்றதொரு பலமான சக்தியின் நிழலில் இருக்க விரும்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அந்தக் கட்சியின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், 2009இற்குப் பின்னர் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா, சொற்களுக்கு அப்பால், தனது கடமைப் பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை.

சீனாவையும், கொழும்பையும் முதன்மைப்படுத்தியே இந்தியா முடிவெடுத்ததே தவிர, தமிழர்களை கருத்தில் கொள்ளவில்லை.

இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தமிழர்கள் பா.ஜ.க.வின் நிழலில் பாதுகாப்புத் தேட முனைவார்கள் என்று அந்தக் கட்சி எதிர்பார்த்தால், அது ஏமாற்றமே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04