பேராயரும் சர்வதேச நீதியும்

Published By: Gayathri

22 Feb, 2021 | 11:48 AM
image

-கபில்

"தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச மட்டத்தில் நீதி கோர முற்பட்டபோது, நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் பற்றி அதிகம் போதித்து தனக்கு கீழிருந்த குருமார்களையும் கட்டுப்படுத்தி சர்வதேச நீதிக்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த பேராயர், ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதியை நாடி சர்வதேச நீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக இருக்கின்றார்"

கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடந்த வாரம் திடீரென பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதற்கும் தயங்கப் போவதில்லை என்று அவர் வெளியிட்ட கருத்தே அவரை தலைப்புச் செய்திகளில் இடம்பெற வைத்தது.

பேராயர் மல்கம் ரஞ்சித்தின் இந்தக் கருத்தை கேள்வியுற்ற பலருக்கும் ஆச்சரியம்! அவரா இப்படிக் கூறியிருப்பார் என்று இந்தச் செய்தியை வெளியிட முன்னர், ஊடகங்களின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர்கள் இன்னொரு முறை சரிபார்த்துக் கொண்டனர்.

ஏனென்றால், பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கடந்தகால செயற்பாடுகள், கருத்துக்களை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமான செய்தி தான். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் உண்மையிலேயே அவர் அவ்வாறு தான் கூறியிருந்தார்.

நான் எந்தவொரு சர்வதேச நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்கும் என்று நம்பவில்லை. ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அத்தகைய உதவிக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். ஜெனிவாவில் ஏற்கனவே சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், ஈஸ்டர் ஞாயிறு பிரச்சினையை மற்றொரு சர்வதேச தலைப்பாக மாறுவதற்கு அனுமதிக்காது என நம்புகிறேன்” என்றே அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 6 சதவீதம் மக்கள் பின்பற்றுகின்ற கத்தோலிக்க மதத்தின் முதல்வராக இருக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்திருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு எதிராக அவர் மிகவும் வெளிப்படையான அரசியலை முன்னெடுத்திருந்தார்.

அத்துடன், ராஜபக்ஷவினருக்கு சார்பான அரசியல் கருத்துக்கள், நிலைப்பாடுகளையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்களில், ஆறில் ஒரு பங்கினர், வடக்கு, கிழக்கிலேயே வாழுகின்றனர்.

சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கத்தோலிக்க மக்கள் வசிக்கின்ற வடக்கு, கிழக்கில், போரின் போது பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர். 

இன்னும் பெருமளவானோர், காணாமல் ஆக்கப்பட்டனர். போரில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்த ஒருபோதும் முன்வரவில்லை.

பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அல்லது சிங்கள பௌத்த விசுவாசத்தையே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். பல இனங்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், குறிப்பிட்ட ஒரு மதத்தினர் பெரும்பான்மையினராக இருப்பதால், அவர்களுக்கே முன்னுரிமை, அவர்களே நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்ற வாதமும், வரட்டுத்தனமும் அபத்தமானவை.

சிங்கள பௌத்த பேரினவாதம், ஏனைய சிறுபான்மை இனங்களையும், மதங்களையும் விழுங்குவதற்கு இவ்வாறான நிலையே காரணம். சிங்கள பௌத்த பேரினவாதம், சிறுபான்மை மதங்களையோ, இனங்களையோ மதிப்பதில்லை. அவற்றை அச்சுறுத்தலாகவே பார்த்து வந்திருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும், அதற்குப் பின்னரும் இலங்கையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத்ததினருக்கும், ஆலயங்களுக்கும் எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல்களே அதற்குச் சாட்சி.

அவ்வாறான வன்முறைகளை சிங்கள பௌத்த பேரினவாதிகள் முன்னெடுத்து வந்தபோதும், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும்பாலும் பொறுமை காத்துக் கொண்டிருந்தார்.

சிங்கள பௌத்த அடிப்படைவாதத்துடன் அவர் முட்டி மோதுவதற்குத் தயாராக இருக்கவில்லை. அதனுடன் அவர் மோதத் தயங்கியதற்கு, அவருக்குள் இருந்த இனப்பற்றும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பேராயர் மல்கம் ரஞ்சித் அதே பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கவில்லை. காரணம், இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள், இஸ்லாமிய மதம் சார்ந்தவர்கள்.

இஸ்லாமிய மதம் வன்முறைகளைப் போதிக்கவில்லை. ஆயினும், இஸ்லாமிய மத தீவிரவாதிகள் சிலர், ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்களை இலக்கு வைத்து, இலங்கைத் தீவிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும், சந்தேக கண்கொண்டு பார்க்கின்ற நிலைக்குத் தள்ளி விட்டார்கள்.

இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு வரலாறு மிக குறுகியதாயினும், சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அது தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும், இனப்படுகொலை செய்வதற்கும் பல்வேறு வழிமுறைகளை பல தசாப்தங்களாக பின்பற்றி வந்திருக்கிறது.

அவ்வாறானதொரு சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக வாய்திறக்க மறுத்து வந்த பேராயர், இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்ப்பதில் தன்னைவிட வேறு யாரும் இல்லை என்று காட்டிக் கொள்ள முனைகிறார்.

அதனை விட, தமிழ் மக்கள் தமக்கான நீதியை எப்போதெல்லாம் கோரினார்களோ, அதற்காக சர்வதேச அளவில் முயற்சிகளை முன்னெடுக்க முயன்றார்களோ, அதற்கெல்லாம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தடையாகவே இருந்து வந்திருக்கிறார்.

தனக்கு கீழ் இருந்த, தமிழ் மக்களுக்கான நியாயம் கோர முயன்ற கத்தோலிக்க மதகுருமார்களையும் அடக்கி வைக்க முயன்றார். இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் வெளியே தெரியாமல் பாதுகாத்து வந்தார்.

tamil makkal

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச மட்டத்தில் நீதி கோர முற்பட்டபோது, நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் பற்றி அதிகம் போதிக்க முனைந்தார்.

சர்வதேச நீதிக்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அவர் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. அப்படிப்பட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இப்போது, ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே, நியாயம் கிடைக்கும், கிடைக்காது என்று மாறி மாறி கருத்துக்களை வெளிப்படுடுத்தி வந்தவர் பேராயர். அவர் இன்னமும் கூட உள்நாட்டு பொறிமுறையை நம்புகிறார். ஆனாலும், அவர் சர்வதேச பொறமுறைக்கு செல்லத் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எனினும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதற்கு மட்டும், சர்வதேச தலையீட்டை அவரால் ஏற்க முடியவில்லை. தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டு 12 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை காலமும் உள்நாட்டுப் பொறிமுறைகளை காரணம் காட்டியே அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவரையில் உள்நாட்டு நீதிப் பொறிமுறை சாத்தியப்படாத நிலையில், சர்வதேச நீதிமன்றத் தலையீட்டை வலியுறுத்தும் நிலைக்கு தமிழ் மக்கள் மாத்திரமன்றி மனித உரிமை அமைப்புகளும், ஐ.நாவும் சர்வதேச சமூகமும் கூட வந்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், பேராயர் மல்கம் ரஞ்சித் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, சர்வதேச நீதிக்கான கோரிக்கையை வலியுறுத்தினால் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை நாடும் அவரது கருத்தின் மீதான உண்மைத் தன்மையில் நம்பிக்கை வைக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04