கொதிக்கும் கூட்டணி: உள்ளே நடப்பது என்ன?

Published By: J.G.Stephan

22 Feb, 2021 | 11:33 AM
image

-சத்ரியன் -

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, அடுத்த 10- 15 ஆண்டுகளுக்கு இதனை அசைக்க முடியாது என்ற, முன்வைக்கப்பட்ட கணிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவினது தலைமைத்துவத்தின் கீழ், சிங்கள பௌத்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றிருந்தார். அதனைக் கருத்தில் கொண்டும், எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து போயிருந்த சூழலைக் கருத்தில் கொண்டும் தான், அடுத்த 10 - 15 ஆண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் சாத்தியப்படாது என பலரும் எதிர்வு கூறியிருந்தனர்.

ஆனால், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருக்கின்ற நிலையில், உள்முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியிருப்பதும், ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய எச்சரிக்கைகள் வெளியாகிக் கொணடிருப்பதும், அத்தகைய எதிர்வுகூறல்களை கேள்விக்குட்படுத்துவனவாக இருக்கின்றன.

20 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் மந்தமடைந்ததுடன், கோட்டாபய ராஜபக்ஷவின் கை ஓங்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவிக்கு கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச தூக்கிப் போட்ட குண்டு, இன்னமும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், ஆளும்தரப்பில் உள்ளவர்களே கண்ணை கட்டிக் கொண்டு சண்டை பிடிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. விமல் வீரவன்ச மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம். 

அவர் அதனை திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கத்தில், விமல் வீரவன்சவோ இந்த விடயத்தில் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்றும், தனது நிலைப்பாட்டில் இன்னமும் உறுதியாக இருப்பதாகவும், கூறிக் கொண்டிருக்கிறார்.

இதுபோதாதென்று, கிழக்கு முனைய விவகாரத்தை ஒட்டி விமல் வீரவன்சவின் வீட்டில், பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள், நடத்திய கூட்டத்துக்கு பின்னர், மீண்டும் மீண்டும் கூடிப் பேசத் தொடங்கியிருப்பது சாதாரண விடயமல்ல. பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள், அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் கூடி ஆலோசனை நடத்துவது தான் கூட்டணி தர்மம்.

ஆனால், விமல் வீரவன்சவின் தலைமையில், பங்காளிக் கட்சிகள் அவரது வீட்டில் கூடிப் பேசுகின்றன என்றால், நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்றே அர்த்தம்.

இந்த ஆலோசனைக்குப் பின்னால் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் இருப்பதாக சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் கூட உள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்கிறார் விமல் வீரவன்ச என்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும், அவர் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக செயற்படவில்லை என்பது தெளிவான உண்மை.

அவ்வாறாயின், அரசாங்கத்துக்குள் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது, சாதாரண மக்களுக்கு புதிரான விடயமாகத் தான் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் அரசாங்கத்துக்குள் நடக்கின்ற இழுபறியா அல்லது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியா என்பதில் பலத்த குழப்பங்கள் இருக்கின்றன.

அண்மைக்காலமாக ஆட்சிக்கவிழ்ப்பு, ஆட்சி மாற்ற முயற்சிகள் தொடர்பாக அரசாங்கத் தரப்பில் மாத்திரமன்றி எதிர்க்கட்சி தரப்பிலும் பேசப்படுவதை அவதானிக்க முடிகிறது. “தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக, தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன.” என்று, சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்க விடயம்.

அவர் அதனைக் கூறியபோது பெரிதாக யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஜெனிவா அமர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகளைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கருதியிருந்தனர். ஆனால், ஜனாதிபதியின் அந்தக் கருத்து அதற்கும் அப்பாற்பட்ட சில விடயங்களை பூடகமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு ஆதரவாக வெளிப்படுத்திய கருத்தை, உதய கம்மன்பில போன்றவர்கள் ஆதரித்து வரும் நிலையில், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்களும் அதற்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதும் ஆச்சரியத்தையே தருகின்றன. பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பாக, பிரதமர் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பார் என்றும் விமல் வீரவன்ச தமது எல்லையை மீறக்கூடாது என்றும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் இன்னொரு பக்கத்தில், மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்தே, ஆளும் கூட்டணிக்கும் இரண்டு அணிகள் உருவாகியிருக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. அதைவிட, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் பசில் ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி வெளிப்படுத்தும் கருத்துக்களும், அவருக்கு பதவி வழங்கப்படுவதற்கு எதிராக உதய கம்மன்பில போன்றவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புகளும் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

“நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைப் போன்று, தற்போது ஏற்படுத்தலாம் என்று எதிர்கட்சியினர் வகுத்துள்ள திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ள கருத்தையும் இவ்விடத்தில் புறக்கணிக்க முடியாது.

“அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படும் தரப்பினரை இனங்காண்பது கடினமானதாக உள்ளது. ஆளும் தரப்பினர் ஒரு சிலர் எதிர்க்கட்சியினருக்கு சார்பாக செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது, உள்ளுக்குள் ஒரு கொதி நிலை காணப்படுகிறது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

அவ்வாறாயின், அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவுகளுக்கும், எதிர்க்கட்சிக்கும் தொடர்புகள் உள்ளதா என்ற சிந்திக்க வேண்டியுள்ளது. அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இரண்டு பேருமே பிளவுபட்டு நின்றதால், பெரும் பின்னடைவைச் சந்தித்து விட்டனர். இதிலிருந்து மீள்வதற்கான உத்தியாக இந்தச் சந்திப்பு நடந்ததா அல்லது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான உத்திகளை வகுப்பதற்காக நடந்ததா என்ற கேள்வி உள்ளது. எவ்வாறாயினும் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, ஆட்சி மாற்றத்துக்கு இப்போது அவசரப்பட வேண்டாம் என்றும், இது அதற்கான தருணமல்ல என்றும், ஆலோசனை கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆட்சி மாற்றத்துக்கான உள்வேலைகள் இடம்பெறுவதாலோ, அல்லது அதற்கான முயற்சிகள் நடப்பதாலோ தான், ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான ஆலோசனையைக் கூற முனைந்திருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, சர்வதேச நெருக்கடிகள், இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள சிக்கல்கள் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ரணில் விக்கிரமசிங்க அந்த ஆலோசனையைக் கூறியிருக்கலாம்.

பொதுஜன பெரமுனவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விசுவாசிகள், தமக்குள் உள்ள சிலர் உள்ளடி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த சந்தேகம், ஜனாதிபதிக்கும் இருப்பதாகத் தெரிகிறது.

அதேவேளை, தங்களைக் கிளர்ச்சிக் குழுவினராக காட்டிக் கொள்ளும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள், அரசாங்கத்தை வீழ்த்தும் எண்ணத்தை  வெளிப்படுத்தவில்லை. அதனைப் பலப்படுத்த வேண்டும் என்றே கூறுகிறார்கள்.

அவ்வாறாயின் அரசாங்கத்துக்குள் பிளவு, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் நடப்பதான ஒரு பிரமையை ஏற்படுத்த இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. ஏனென்றால் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சர்வதேச இராஜதந்திர ரீதியாகவும், அரசாங்கம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.

இந்த நெருக்கடி அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்புவதை தடுப்பதற்காகக் கூட, ஆட்சிகவிழ்ப்பு, ஆட்சிமாற்றம் என்று கவனத்தை திசைதிருப்பும்  நாடகங்களை அரசாங்கம் அரங்கேற்ற முற்படலாம். இந்த சந்தேகத்தையும் தற்போதைய நிலையில் புறமொதுக்கி விட முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13