தமிழர்களின் நீதிக்கோரிக்கையும் கருத்துருவாக்கச் சவாலும்

Published By: Gayathri

21 Feb, 2021 | 09:36 PM
image

லோகன் பரமசாமி

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது சர்வதேச அரங்கில் சக்தி அற்ற குறைபாடுகள் கொண்டதொரு அமைப்பாக காணப்படுகின்றதென பல இடங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகள் பேரவையானது மனித உரிமைகளை மீறும் எந்த நாடுகளையும் தண்டனைக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவல்லனவாக இருக்கின்றன. 

அந்த நபர் ஆட்சி அதிகாரத்தில், முக்கிய பதவிகளில், இராஜதந்திர குற்ற விலக்குரிமை உள்ளவராக இருப்பாராயின் அந்த நபர் மீது ஏதேட்சையாக எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து விட முடியாது.

அத்துடன் நாடுகளுக்கு காணப்படும் இறைமையின் காரணமாக அந்தந்த நாடுகளின் ஆளும் தரப்புக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரச கட்டமைப்புக்களை சீர்குலைக்காத வகையிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பட்டு வருகின்றது.

இவ்விதமான காரணங்களை வெளிப்படையாக கூறிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியிருந்தது.

ஆனால் சீனா, கியூபா, எத்தியோப்பியா, ரஷ்யா, வெனிசுலா போன்ற நாடுகள் ஐ.நா.மனித உரிமை சபையில் அங்கத்துவ நாடுகளாக உள்ளன. ஆனால், இவை அனைத்தும் பல்வேறு மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்ட தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டிய நாடுகளாக உள்ளன.

அவ்வாறிருக்கையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின்போது தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்தே அமெரிக்காவும் பேரவையின் அங்கத்துவத்திலிருந்து விலகியிருந்தது.

இருப்பினும் தற்போது ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமானது தனது வெளியுறவு கொள்கையில் ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் என்பனவற்றை முதன்மை படுத்துவதாக கொண்டுள்ளது. 

அந்த வகையில் பலத் தரப்பட்ட இராஜதந்திர கருவிகளையும் பயன் தரகூடிய வகையில் உபயோகித்தல் என்ற அடிப்படையில் அமெரிக்காவின், உலகத்திற்கான தலைமைத்தவத்தை மீள் கட்டுமானம் செய்வதில் மனித உரிமைகள் விவகாரம் முக்கியமானதொரு கருவியாக கொண்டுள்ளது.

அதனடிப்படையிலேயே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணையவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் அதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில், 

“மனித உரிமைகள் விடயங்களில் இஸ்ரேலிய மனித உரிமைகள் விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுவது பெரிதல்ல. ஆனால், இஸ்ரேலிய மனித உரிமை விவகாரங்கள் அடைந்துள்ள தோல்விகள் பாரிய பனிப்பாறையொன்றின் மேல் தெரியும் சிறு குமிழி போன்றது தான்.

உலகில் எதேச்சாதிகார ஆட்சி அதிகாரங்களினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பல நாட்டு மக்களுக்கு சேவை செய்யகூடிய அமைப்பாக மனித உரிமை பேரவையை சீர்செய்ய வேண்டி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விவகாரங்களை பேரவையின் நிகழ்ச்சி நிரலின் இலக்கம் ஏழின் கீழாக விவாதிப்பதற்கென குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் இஸ்ரேல் தொடர்பிலான அதிகளவான விவாதங்களை தவிர்த்து பேரவையின் நிகழ்ச்சி நிரல் நாலின் பிரகாரம் இதர நாடுகளின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளதாக தற்போதைய அமெரிக்க நிர்வாகம் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நாளையதினம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரே இந்த வருடத்திற்கான முதலாவது கூட்டத்தொடராகவும் உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரிலே அமெரிக்கா, சாதாரணமானதொரு பார்வையாளராகவே தனது வகிபாகத்தினை கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வருட முடிவில் ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளின் பேரவை அங்கத்துவத்துவ உரித்து முழுமையாக நிறைவடையும்போது அமெரிக்கா முழு உரிமை கொண்ட அங்கத்துவ நாடாக மீண்டும் பேரவையில் இணைந்து கொள்ளவுள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய அணுகுமுறையும் அது குறித்த நோக்கமும் இங்கே முக்கியமானதாகும். பூகோள சர்ச்சைகளை முகாமை செய்வதில் அமெரிக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக சீன நிதிப்பங்களிப்பை செயலூக்கம் பெற வைப்பதுடன் தனது சர்வதேச இராஜதந்திர ஆளுமை விடயத்தில் அமெரிக்கா தன்னை முதன்மை படுத்தி கொள்வதே மனித உரிமைகள் பேரவையினுள் அமெரிக்காவின் மீள் வருகைக்கான பிரதான காரணமாக உள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் அறிக்கைகளின் பிரகாரம், சீனாவின் மேற்கு மாநிலமான சின் ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு மில்லியன் வரையான உய்குர் இஸ்லாமிய மக்கள் சீன அரசின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளால் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல திபெத் மக்களின் சுதந்திரமான வாழ்வும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இந்த இருவிடயங்களிலும் தற்போதைய பைடனின் நிர்வாகம் அதிக கரிசனைகளைக் கொண்டுள்ளது. அண்மையில் இராஜாங்க செயலர் பிளிங்கன் விடுத்த டுவிட்டர் பதிவொன்றில் “திபெத் மக்களின் லாசா பண்டிகைக்கு வாழ்த்துக்கள். திபெத்தியர்களது சுதந்திரமாக மத, கலாசார, மொழி இருப்பிற்கு என்றும் அமெரிக்கா துணை நிற்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல ரஷ்யாவில் ஜனாதிபதி புட்டீனை எதிர்த்து நின்ற அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைலர் அலெக்சி நவால்னியின் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு எதிரான போராட்டங்கள் வெகுவாக வலுத்துள்ளன. 5400பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா ‘ஜனநாயக உரிமைகள்’ என்ற விடயத்தினை முன்னிலைப்படுத்தி ஆதரவளித்து வருகின்றது. அத்துடன் மிக அண்மையில் மியன்மாரில் ஏற்பட்ட இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் பைடன் நிருவாகம் தனது கடுமையான விமர்சனத்தினையும், எச்சரிக்கைகளையும் செய்துள்ளது.

இந்த வகையில் அமெரிக்க இராஜாங்க செயலர் கூறிய அந்த பாரிய பனிபாறையின் நீரில் அமிழ்ந்து போய்க்கிடக்கும் கூறுகளில் ஒன்றாக தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கை காணப்படுகின்றது. 

அம்மக்களுக்கான நியாயம் வழங்கப்பட வேண்டுமாயின் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையின் மீள் அங்கத்துவத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள அமெரிக்கா தமிழர்களின் விடயத்தினை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள விடயமாகின்றது.

சர்வதேச கருத்து உருவாக்கமும், கருத்தாதரவு தேடலும் தனித்துவமான நகர்வுகளும் அமெரிக்காவின் தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுவதற்கு முக்கியமான காரணிகளாக உள்ளன. 

தமிழர்களின் தாயகத்தில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தனித்துவமானதாக இருந்த போதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பேரம் பேசலுக்கு வலு சேர்ப்பதாகவும் கொள்ளப்பட்டிருந்தது.

அதேபோல அமெரிக்கா எவ்வாறு மனித உரிமைகள் விவகாரங்களை கையில் எடுத்து தனது தலைமைத்துவத்தை கையாள நினைக்கிறதோ அதுபோன்றே தமிழ் மக்களின் அரசியல் தலைமை துவத்திற்கான போட்டியாகவும் இந்த போராட்டத்தை நோக்கவும் வித்திட்டது.

ஆக, வல்லரசுகளின் நலன்களுக்கும் தனிப்பட்ட அரசியல் தலைமைத்துவங்களினது நலன்களுக்கும் அப்பால், சர்வதேச மனித உரிமைகள் விழுமியங்களுக்கான சவாலாக தமிழ் மக்களின் நீதி கோரல் கருத்துருவாக்கப்பட வேண்டிய நிலையை அடைந்துள்ளது. இதில் திடமான நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் எட்டவேண்டியிருப்பதும் முக்கியமான விடயமாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13