சட்டவிரோத கசிப்பு அடங்கிய இரண்டு பொலித்தீன் உரைகளை தனது ஆடையினுள் மறைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இரு பெண்களுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முச்சக்கர வண்டியின் சாரதியையும் கைது செய்துள்ளதாக புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று   மாலை 6.30 மணியளவில் புத்தளம் சிலாபம் வீதியின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திலேயே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை  மேற்கொண்டதாக அப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அக்கா தங்கையான இரு பெண்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு பொலித்தீன் உரைகளிலிருந்து 160 போத்தல் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் 35 - 40 இடைப்பட்ட வயதுகளையுடையவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்ட பெண்களுள் ஒருவரின் கணவருமான சந்தேக நபர் 45 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் இந்த சட்டவிரோத கசிப்பினை வெவ்வேறு இடங்களில் விநியோகிப்பதற்காக இவ்வாறு முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார தலைமையிலான குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.