அஹங்கம, திக்கும்புர பிரதேசத்தில் ஹொல்சிம் லங்கா நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி 2016 கடந்த ஜுன் மாதம்  22ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. 

இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் போது, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தினால் சூழலுக்கு பாதுகாப்பான கட்டடம் எனும் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி. ரொஹான் கருணாரட்ன மற்றும் ஹொல்சிம் லங்கா முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

“இலங்கையின் முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளியின் நிர்மாணச் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஏனைய சகல சமூக கட்டடங்களையும் கவர்வதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையாக அமைந்துள்ளதாக நாம் கருதுகிறோம்” என ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் வெளி விவகார மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான முகாமையாளர் கிறிஷாந்த கமகே தெரிவித்தார்.

மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்த காணியில் இந்த முன்பள்ளி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை முன்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பிரதேசங்களிலிருந்து பெறப்பட்டிருந்தன. இந்த கட்டடத்தின் மரவேலைகள் கிராமத்திலிருந்து பெறப்பட்ட மரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் கூரை சூழலுக்கு பாதுகாப்பான சின்க் அலுமினியம் GI தகடுகள் கொண்டு 100 சதவீதம் அஸ்பெஸ்டஸ் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளன.

“வர்ணம் பூசுதல் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் இலங்கை மின்சார சபையின் மின் வழங்கல்களுக்கு பதிலாக சூரியப் படல்களிலிருந்து மின்வழங்கல் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதன் மூலமாக தேசிய நீர் வழங்கல் பாவனையும் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி கருத்து தெரிவிக்கையில்,

“ஹொல்சிம் லங்கா நிறுவனத்துக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன். ஹபரதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக நான் இதை கருதுகிறேன். எமது எதிர்காலம் இந்த சிறுவர்களே. இலங்கையில் முதன்முறையாக சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளியை ஹொல்சிம் லங்கா நிறுவியுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். நாட்டின் நிலைபேறான பயணத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது” என்றார்.

பாடசாலை மாணவி இமாஷி கருத்து தெரிவிக்கையில்,

“இந்த வகுப்பறை எனக்கு அதிகம் பிடித்துள்ளது. நாம் விளையாடினாலும் அதிகளவு வெப்பம் அல்லது வியர்ப்பதில்லை. நான் தினந்தோறும் முன்பள்ளிக்கு வருகை தருகிறேன். இந்த புதிய வகுப்பறையை எமக்கு வழங்கியமைக்கு ஹொல்சிம் நிறுவனத்தைச் சேர்ந்த மாமாமாருக்கு நன்றி” என்றார்.

திக்கும்புர பிரதேச சிறுவர்களுக்கு பாஞ்சல்ய முன்பள்ளியின் நிர்மாணச் செயற்பாடுகள் இன்றியமையாத தேவையாக அமைந்திருந்தது என்பதை ஹொல்சிம் லங்கா இனங்கண்டிருந்தது. 

“றுகுணு சீமெந்து செயற்பாடுகள் சமூக ஆலோசனை குழவினால் தற்போதைய பாஞ்சல்ய முன்-பள்ளியின் கட்டடம் பிரதேசத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய போதியளவு வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை எமது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தது” என கிறிஷாந்த தெரிவித்தார்.

அறிமுக நிகழ்வில் திக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஜயந்தி விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில்,

“முன்னர் இந்த முன்பள்ளியில் எமது பிள்ளைகள் பெருமளவு இடப் பற்றாக்குறையையும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் எதிர்நோக்கியிருந்தனர். எமது பிள்ளைகளுக்கு ஹொல்சிம் லங்கா சிறந்த முன்பள்ளியை வழங்கியிருந்தது. சூரிய சக்தி மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்றன சிறந்த செயற்பாடுகளாகும். பெற்றோர் எனும் வகையில் இதுபோன்றதொரு பெறுமதி வாய்ந்த சமூக செயற்பாட்டை முன்னெடுத்தமைக்காக ஹொல்சிம் லங்காவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நிலைபேறான மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான நிர்மாணம் போன்றவற்றில் தமது கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஹொல்சிம் லங்கா இந்த சூழலுக்கு நட்புறவான கட்டட நிர்மாணத்தையும்  பொறுப்பேற்றிருந்தது. “நிர்மாணச் செயற்பாடுகளின் போது அந்நடவடிக்கைகளை சூழல் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை அதிகாரிகள் ஆழமாக மேற்பார்வை செய்திருந்ததுடன்ரூபவ் இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது” என கிறிஷாந்த மேலும் தெரிவித்தார்.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. 

பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது.

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு வகையான சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன் ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது. 

இதனூடாக பாரிய திட்டங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திபாரத்தினை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

CIOB சூழல் பாதுகாப்பு நிறுவனம்: 

சிங்கப்பூரின் கட்டடம் மற்றும் நிர்மாண அதிகார சபையின் அங்கீகாரத்துடன் சூழலுக்கு பாதுகாப்பான கட்டடங்களை தரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இதன் போது சூழலுக்கான தாக்கம் மற்றும் வினைத்திறன் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. நிர்மாணம், பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது விடயங்கள் அமைச்சு மற்றும் சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு ஆகியவற்றினால் இந்த சான்று முன்மொழியப்பட்டுள்ளது. 

மதிப்பீட்டில் கவனம் செலுத்தப்படும் பிரதான விடயங்களாக வலு வினைத்திறன், நீர் வினைத்திறன், சூழல் பாதுகாப்பு, உள்ளக சூழல் தரம் மற்றும் இதர சூழல் உள்ளம்சங்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன.