சசிகலா அதிர்வலைகளை ஏற்படுத்துவாரா?

Published By: Digital Desk 3

15 Feb, 2021 | 12:35 PM
image

குடந்தையான்

ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசத்தை அனுபவித்த பிறகு விடுதலையான சசிகலா, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்துவாரா..? அ.தி.மு.க.வை கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டு வருவாரா..? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

சசிகலா சிறையிலிருந்து வெளியான பிறகு பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு வருகை தந்தபோது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும், அ.தி.மு.க.விலுள்ள அவரது இந்நாள் விசுவாசிகளும் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கினர்.

தமிழக எல்லையிலிருந்து சென்னை திநகர் இல்லம் வரை தொண்டர்கள் புடை சசிகலாவுக்கு வழங்கிய வரவேற்பு அவரது மீள்வருகையை அர்த்தப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சசிகலாவிடம் தொலைபேசி மூலம் நலன் விசாரித்தமை, அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்ததைவிட கூடுதலான அ.திமுக தொண்டர்கள் ஒன்று கூடி வரவேற்றமை அக்கட்சிக்குள் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்படுவதற்கு வித்திட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசின் தற்போதைய மக்கள் தொடர்பாளராக திகழும் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் ரி.ரி.வி தினகரனின் அரசியல் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து ‘தி.மு.க.வின் ‘பி டீம்’ என விமர்சித்திருக்கின்றார்.

எனினும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,'பெங்களூரூவிலிருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார். என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நடக்க வேண்டியது நடக்கும்' என தெரிவித்திருப்பதை அ.தி.மு.க.வின் நடுநிலையான நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு  மேடையிலும் சசிகலா குறித்து நேரடியாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். 

சசிகலாவைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லது அவரது முதல்வராக வேண்டும் என்ற ஆசையை திசைதிருப்புவதற்காக   மத்தியில் ஆளும் பா.ஜ.வின் தலைமையாலும், தயவாலும் தான் முடியும் என்பதை முதல்வர் எடப்பாடி நன்கு புரிந்து வைத்திருப்பதால் அவரது தொடர் நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்த பிறகே நடவடிக்கைகளை அவர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சசிகலாவின் வருகையால் டெல்டா மாவட்ட அ.தி.மு.க.வில் மட்டுமே ஓரளவு பாதிப்பு ஏற்படுமே தவிர, வேறு எந்த பகுதி அ.தி.மு.க.விலும் பாரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று  அ.தி.மு.க.வின் நடுநிலையான நிர்வாகிகள் மற்றொரு கருத்தையும் முன்வைக்கிறார்கள். 

இதற்கு அவர்கள் சசிகலா விடுதலையானபோது அ.தி.மு.க. வலிமையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எந்த சலசலப்பும் ஏற்படாததை சுட்டிக்காட்டுகிறார்கள்.

சசிகலா வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன்” என்று கூறியிருப்பதால், அவர் அ.தி.மு.க.வை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார் என்று உறுதியாகிறது.

தன்னுடைய பேச்சில், “என் அக்கா ஜெயலலிதா” என்று உரிமையுடன் குறிப்பிட்டது அக்கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களை ஈர்த்திருக்கிறது. கட்சியை ‘இரட்டை த் தலைமை’யுடன் தொடர்வதைவிட, ‘அம்மா’வைப் போல் ஒரு பெண்மணியின் தலைமையில் தொடரவே ஏராளமான தொண்டர்கள் விரும்புகிறார்கள். 

அதிலும் அ.தி.மு.க.விற்கு பெண்களின் வாக்கு வங்கி அதிகம் என்பதால் சசிகலாபோன்ற ஒரு பெண்மணி தலைமையேற்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் தொண்டர்களிடம் இருப்பதாக பெண் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

‘ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட்டு, பொது எதிரியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த வேண்டும்’ என்று சசிகலா சொல்லி இருப்பதால், தி.மு.க.வுக்கு எதிராக நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா குறிப்பிட்டிருப்பதை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் வரவேற்கிறார்கள்.

'நமது அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம் அதை காப்பது நம் கடமை.' என பா.ஜ.க. குறித்து சசிகலா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருப்பதையும் அடிமட்ட தொண்டர்கள் புரிந்து கொண்டு விட்டனர்

ஆனால் சசிகலாவின் விடுதலையின் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்படும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் வலிமையாக காலூன்ற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் திட்டம் என்பதை அ.தி.மு.க.வின் அனைத்து முன்னணி நிர்வாகிகளும் ஒருமித்த குரலில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 

இதனை உணர்ந்தேயிருக்கும் எடப்பாடி, சசிகலாவை எந்த வகையில் எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அரசியலில் அவரது எதிர்காலம் இருக்கப்போகின்றது. 

ஜெயலலிதாவின் நினைவிடத்தை ‘பராமரிப்பு பணிகள்’ என்று காரணம் காட்டி மூடியமை, அவசரம் அவசரமாக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி, ‘ஜெயலலிதா நினைவில்லமாக திறந்து வைத்தமை,  ஜெயலலிதா பயன்படுத்திய காரையும் அதில் பொருத்தப்பட்டிருந்த கொடியை அகற்றுவதற்காக அவர் மேற்கொண்ட நிர்வாக நடைமுறை, அவரது வருகை ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும் என்பதை உணர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை மறைமுகமாக விதித்து (உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வை ஒளிபரப்பாமல் தடுத்தது) ஜெயலலிதாவிடம் கற்ற அரசியல் பாடத்தை சசிகலாவிடம் பிரயோகித்து, தன்னாலும் அரசியல் ஆளுமையுடன் செயல்பட முடியும் என்பதை முதல்வர் எடப்பாடி மௌனமாக நிரூபித்திருக்கிறார்.

அ.தி.மு.க.வில் சசிகலாவிற்கு எதிராக  ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ‘தர்மயுத்தம்’ தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், மத்திய பா.ஜ.க.வின் நிர்பந்தத்திலான ஆலோசனையின் மூலமாக மீண்டும் அ.தி.மு.க.வில் ஒன்றிணைந்து பணியாற்றினார். 

அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டு, நான்காண்டுகளாக பதவியில் நீடித்து வரும் எடப்பாடி, சசிகலா குறித்து இன்றுவரை ‘மௌனயுத்தம்’ நடத்தி வருவதால், அவருக்கும் ஏதேனும் பதவி கிடைத்தால் அவரும் சசிகலாவையும் இணைத்து அதிமுகவில் ‘மூன்று தலைமை’யுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவார் என்று குறிப்பிடுகிறார்கள். 

இதனை சசிகலா அவர்கள் ஏற்றுக் கொண்டால், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி என்ற ‘இரட்டை தலைமை’ மீண்டும் தியாகத் தலைவி என்று ஆதரவாளர்களால் போற்றப்படும் சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆனால் சசிகலாவோ, தொடர்ந்து அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே முதல் இலட்சியம் என்று செயல்படுவதால், முதல்வருக்கும், முதல்வரின் மறைமுக தலைமையான பா.ஜ.க.வுக்கும் ‘செக்’ வைக்கும் அரசியல் அதிரடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பெப்ரவரி 24ஆம் திகதியன்று சசிகலா தரப்பில் அ.தி.மு.க. குறித்து உச்ச நீதிமன்றத்திலோ, தேர்தல் ஆணையத்திலோ, வழக்கு தொடரக் கூடும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் ஒரு தகவலை கசிய விட்டிருக்கிறார்கள். 

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அதன் பிறகு அ.தி.மு.க.வை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாரென அவரது ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விரைவில் விளக்கம் அளிக்கக்கூடும் என்ற எதிர்பார்க்கிறார்கள்.

இதை மனதில் வைத்து தான் அவர் விரைவில் மக்களைச்சந்திப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாக அவரது விசுவாசிகள் விளக்கமளிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22