கொச்சைப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டம்..!

Published By: J.G.Stephan

15 Feb, 2021 | 11:20 AM
image

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடைபெற்ற பேரணி மற்றும் பொலிகண்டியில் நிறைவுற்றபோது நிகழ்ந்த சம்பவங்களை அடியொற்றி இலங்கை தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா எழுதிய கட்டுரை

மக்கள் போராட்டம்
தமது உரிமைகளுக்காக மக்கள் களத்தில் இறங்கிப் போராடுகின்றார்கள் என்றால் அதைத் தடுக்கச் சட்டத்தில் இடமில்லை. அதற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறவும் முடியாது ஏனெனில் அது மக்களுக்கான மக்களின் போராட்டம். 

உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் போராட்டம் ஆரம்பித்தால் அது சிறுகச்சிறுகத் திரட்சி பெற்று உத்வேகங் கொண்டு இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கும் அராசாங்கமோ அரசோ அதை அவ்வளவு எளிதில் அடக்கிவிட முடியாது அடக்க நினைத்தாலும் அது வீரியம்பெற்றுக் கொண்டே ஓங்கிச் செல்லும். 

ஏனெனில் அது மக்களின் போராட்டம் அது அவ்வளவு எளிதில் வீரியமிழக்காது. மக்களின் போராட்டத்தில் அரசியல் சாயம் கலக்கும்போது அது சிக்கலுக்குரியதாகிவிடுகின்றது. மக்கள் போராட்டத்தில் அரசியவாதிகள் தமது அரசியல் சாயத்தோடு கலந்துவிட முயற்சிக்கும் போது அது மக்கள் போராட்டத்தை மழுங்கடித்துவிட முனையும்.

அதனால் தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்படும். குறிப்பிட்ட போராட்டத்தில் பெறப்பட்ட அத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகளும் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகளுக்கு எதிராகவேபெறப்பட்டதன்றி மக்களுக்கு எதிராகப் பெறப்படவில்லை. இது நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான புள்ளி. 

மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டத்தில் குழப்பம் விளைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் தனி நபர்கள் தனிஅமைப்புகள் கட்சிகள் என்று வரும்போது குழப்பம் விளைவதால் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதே சட்டத்தின் பார்வையின் முன் இருக்கின்ற விடயம். 

எனவே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ‘தனிநபர்கள்’ மக்கள் பெயரால் எதையோ அடைய நினைக்கின்றார்கள் என்பது தான் தெளிவானது. தனிநபர்கள் தமக்கான சுயநல எதிர்பார்ப்புகளைக் களைந்து விட்டுமக்களோடு மக்களாகி நிற்கின்ற போது அதன் அர்த்தம் வேறுபடும்.

அரசியல் வேடிக்கை வித்தை

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் மக்கள் போராட்டத்தில் தாமாகக் கலந்து கொள்வது சிக்கலுக்குரியதல்ல. மக்கள் போராட்டமொன்றுக்கு அவர்களைத் தனியாக அழைக்க வேண்டியதில்லை தமது மக்களுக்காக அவர்கள் எப்போதும் களத்தில் குதிக்கத் தயாராக  இருக்க வேண்டும்.

 மக்களாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் முன்நிலையோடு அதை நகர்த்தி சமயத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் அதை நடைமுறைச் சாத்தியப்படுத்திய போது அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது சுய அரசியல் நலவுகளுக்கான எதிர்பார்ப்புகளை தூக்கியெறிந்துவிட்டு அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காமலும் மக்கள் போராட்டத்துக்கு அரசியல் சாயம் அடிக்காமலும் அதில் பங்கு பற்றியிருக்க வேண்டும். 

அதைத் திட்டமிட்டுக் கொள்வதில் அல்லது ஒழுங்கைத் தீர்மானித்துக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால் அந்த ஒழுங்கு ஒரிரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை அடையாளமாக்கிட வேண்டும் என்ற ஆசையுடன் செயற்பட்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தை அரசியல் ரீதியில் முன்னெடுப்பதாகத் தெளிவாக அறிவித்துவிட்டு களமிறங்கிச் செயற்படுதல் என்பது வரவேற்கத் தக்கது. அதில் ‘மக்கள் சிவில் சமூக அமைப்புகள்’ என்ற திரைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு அறிக்கைவிட வேண்டிய அவசியமிருக்காது. தைரியமாக தாங்கள் தான் இப்போராட்டத்தின் பங்காளர்கள் என்று மார்புதட்டிச் சொல்ல முடியும். அரசியல் வேடிக்கை வித்தைகாட்ட வேண்டிய  அவசியமும் ஏற்பட்டிருக்காது. 

முரண்பாடுகள்
மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கும்போது அது அரசியல் கணக்குப் பார்க்கும் நேரமல்ல. மக்களுக்காக களமிறங்கினால் அந்தப் பணியைச் செய்ய அரசியல் பிரமுகர்கள் தெளிவான உறுதியுடன் இருக்க வேண்டும். முரண்பாடு எப்போது தோற்றம் பெறுமென்றால் யார் பெரிய ஆள் என்ற கேள்வி தோன்றும் போதுதான். பொலிகண்டியிலும் அதுதான் நடந்திருக்கின்றது. தன்னைப் பெரியாளாக்கிக் காட்டத் தனிநபர்கள் முயல்கின்றபோது அது அவரவர் கட்சி அரசியல் சார்ந்த பிரச்சினையாக அது மாறிவிடுகின்றது. அதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஏனெனில் அது மக்களால் வடிவமைக்கப்பட்ட போராட்டம் அதில் அரசியல் இலாபம் தேட முனைவது சிறுபிள்ளைத் தனமானது. 

சுமந்திரனின் வெளிப்பாடு
“இடையில் வந்தவர்கள் இடையில் போய்விட்டார்கள். இதை பொத்துவில்லில் ஆரம்பித்தவர்கள் இதோ இங்கேதான் இருக்கின்றார்கள். இதுதான் பொலிகண்டி, பொலிகண்டி என்று சொல்லிக் கொண்டு ஒரு பகுதியினர் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இந்த முரண்பாடுகளை நாம் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது. நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் என்ற செய்தியைத்தான் நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். நமக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அரசாங்கத்துக்குப் போய்ச் சேரக்கூடாது” அதுதான் சுமந்திரனின் பேச்சின் சாரம். 

முரண்பாடுகளும் உள்ளகக் குழப்பங்களும் இருந்தன என்பதை அவரது வார்த்தைகளே உணர்த்தின.  நமக்குள் ஒற்றுமையில்லை என்ற செய்தி வெளியில் சென்றுவிடக் கூடாது பொது வெளியில் பகிரங்கமாக அவர் கூறுகின்றார். அதாவது பிளவுபட்டிருக்கின்றோம் என்ற செய்தியை தெளிவாக அவர் பிரகடனப்படுத்துகின்றார். அந்தப் பிரகடனப்படுத்தலில் அவர்கொஞ்சம் கூட சஞ்சலப்பட்டதாகவோ வேதனைப்பட்டதாகவோ தெரியவில்லை. புலதளங்களல் நேரடி ஒளிபரப்பினை மிகுந்த அவதானத்துடன் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கத் தக்கதாகவே இப்படிப் பேசுகின்றார் என்றால் அவர் எவ்வளவு புத்திசாலி என்று பார்த்துக் கொள்ளுங்கள். 

இதே புத்திசாலித்தனத்தை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுப் பெறப்பட்ட விசேட அதிரடிப்படையினரால் வழங்கப்பட்ட அவரது பாதுகாப்பு விடயத்திலும் அவரே தெளிவுபடுத்திவிட்டார்.  சுமந்திரன் அப்படிச் செய்திருக்கக் கூடாது. தனிநபர்கள் பங்குபோட்டுக்கொள்ளவும் கீர்த்தி பெற்றுக்கொள்ளவும் அந்தப்பேரணியைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. அதுதான் மக்களின் அர்ப்பணிப்புக்கு அளிக்கப்படும் கௌரவமாகும்.

மக்களுக்கான தெளிவு
உண்மைகள் நிரூபனமாக சில மாயத் தோற்றங்கள் தானாக விலகும் அதுதான் இப்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணத்தின் விளைவாக ‘தெளிவான சந்தைப்படுத்தல் மூலோபாயம்’ அவதானிப்பாளர்களுக்கு புலப்பட்டது. தமிழர்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைக்குரிய இறுதித் தேர்வாகவும் தானே இருப்பதாக நிறுவ எடுக்கப்பட்ட முயற்சிகள் அப்பட்டமாக வெளிப்பட்ட நிகழ்வாகவும் இந்தப் பேரணி திகழ்ந்துவிட்டது. 

இப்போதைக்கு கட்சியின் தலைமைத்துவக் கதிரையைத் தவிர வேறு எதுவுமே சுமந்திரன் போன்றவர்களின் கண்களுக்குச் சமகாலத்தில் புலப்படமாட்டாது. நடை பயணமும் அந்த நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. எனவே மக்கள் அதனை வெகுவிரைவில் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்.

சுயநலனுக்கான பெருமிதம் 
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இக்காலப் பகுதியில் அரசியல் இலாபம் தேட மக்கள் எழுச்சியைப் பயன்படுத்திட முனைகின்ற நபர்கள் எங்கிருந்தார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த தேர்தல் வரை இத்தகையவர்களுடைய பெயர் தமிழரசுக்கட்சியிலோ அல்லது வேறு அரசியல் கட்சி சார் செயற்பாடுகளின் போதோ, இந்தப் பன்னிரெண்டு வருட காலத்தில் இருந்திராத அக்கறை இப்போது திடீரென்டு எங்கிருந்து வந்தது? 

அதுவும் கொரோனா என்ற தொற்று வியாதி அச்சுறுத்திக் கொண்டு கட்டாய சமூக இடைவெளியையும் மக்கள் கலப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவதான மிகுந்த இன்றைய நாட்களில் கோமாவில் இருந்து விழித்துக் கொண்டது போன்று வெறும் கோசங்களை மட்டும் சுமந்து கொண்டு வீதிக்குவரத் தோன்றியது எப்படி? 

சமூகவலைத்தளங்களில் பல்லாயிரம் வீரர்கள் இருக்கின்றார்கள் தமது நவீன தொலைபேசியில் இணைய இணைப்பும் மின்சேமிப்பும் இருக்கும் வரைப் போராடுவார்கள். அவர்களின் போராட்டத் திறன் அந்தத் தொடு திரைகளுக்குள் மட்டுமே முடங்கியிருக்கும். இத்தகைய போராளிகளின் போராட்ட வீரியம் தானும் ஓராள் இங்கு இருக்கின்றேன் என்பதை அடையாளப்படுத்துவதைத் தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

தமக்கு முன்னுள்ள மற்றைய தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் குற்றஞ்சொல்லி அவர்கள் தலைமைத்துவத்துக்கு அருகதையற்றவர்கள் என்ற கருத்தினை மக்கள் மனதில் பதிப்பது மட்டுமே அந்த வார்த்தைகளுக்குள் பதுங்கியிருந்த விடயம். அதை யாரைத் திருப்திப்படுத்த செய்தார். அதற்குப் பின்னால் மறைந்திருந்த எதிர்பார்ப்பின் இலக்கு என்ன? 

தமிழ்மக்களின் அடுத்த தலைமைத்துவ ஆளுமை தாமே என்பதை நிறுவிக்கொள்ள முனைவதா அல்லது இதுவரை இருந்த தலைவர்களுக்குப் பின்னால் செல்வதில் உங்களுக்கு எதுவுமே கிடைப்பதற்கில்லை இனி நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக வீதியில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இறங்குவோம். 

எனவே நாங்கள் தலைமையாக இருந்து வழிநடாத்தச் சரியானவர்கள். எனவே எங்களைச் சார்ந்த இங்குள்ளவர்களை மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதைத்தான் கடந்த பன்னிரெண்டு வருடங்களும் உங்களுக்குப் போதிக்கத் தவறின. இப்போது அதை நாங்கள் தெளிவு படுத்திவிட்டோம். ஏனெனில் தமிழ் பேசும் மக்களுக்கே தலைமைத்துவத்தை வழங்கும் ஆற்றல் எங்களுக்கு வந்துவிட்டது. என்பது தான் சொல்ல வரும் செய்தியாக அமைந்துவிட்டது.

மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களின் மீதுள்ள நேசத்தில் இன்னும் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் அதனையடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலும் யுத்தம் முடிந்து ஆறாவது ஆண்டிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விடிவைத் தரவல்ல சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதற்குள்ளும் தெளிவான சுயநல அரசியல் சூட்சுமங்களைக் கைக்கொண்டதன் விளைவால் தோற்றுப் போனது மக்கள் மட்டுமே. 

அப்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை, மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம் இருந்தது, எங்கிருந்து எங்கும் நடமாடும் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம், கூட்டமாகச் செயற்படும் சுதந்திரம் எல்லாமே இருந்தன. அரசியல் ரீதியில் மக்களின் வாக்குப் பலம்பெற்ற நபர்கள் குறிப்பிட்ட அணி அல்லது வட்டத்துக்குள்ளேயே இருந்தார்கள். 

அந்த நான்கு வருடங்களையும் வீணாகக் கதைத்துக் கடத்திவிட்டு இப்போது எந்த இலக்கை நோக்கி நகர்கின்றார்கள் என்பதை மக்கள் குறிப்பறிந்து விளங்கிக்கொள்ளாவிட்டாலும் சிந்திக்கும் திறன்கொண்ட நபர்களும் நிகழ்வுகளின் பின்னணியை ஆய்வு செய்கின்ற நபர்களும் விளங்கிக் கொள்ளமல் இருப்பார்களா. எனவே யாருடைய தேவைக்காக அந்தப் பன்னிரெண்டு வருடங்களை இழுத்தார்கள் என்பது பற்றி மேலும் விரிவாக ஆராயத் தேவையில்லை. அதில் பயனுமில்லை.

பேரணியின் சொந்தக்காரர்கள் 
மக்கள் தான் சொந்தக்காரர்கள். பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் என்னென்னசெய்வதென்று தெளிவாக சிவில் சமூகப் பிதிநிதிகளால் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அரசியல் கட்சியல் தமது ஆதரவைத் தருவதாக வாக்களிக்கப்பட்டது. 

பேரணியின் போக்கைத் குறிப்பிட்ட சிலர் திசைதிருப்பிடாமல் இருந்திருந்தால் அந்த ஆதரவை அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி வழங்கியிருக்கும் பொலிகண்டியில் நினைவுக்கல் நாட்டும் நிகழ்வோ அல்லது பேரணியில் அரசியல்வாதிகளுக்கு மாலைபோட்டு அவர்களைத் தனித்துவப் படுத்திக் காட்டும் திட்டங்களோ இருக்கவில்லை. 

ஆனால் திடீரென்று நினைவுக்கல் முளைத்து அது காணாமலும் போய் இருந்தது. 

ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை சிறுநொடியில் நகைச்சுவையாக்கிடும் காரியம் நினைவுக்கல் விடயத்தில் இடம்பெற்றபோது துயரப்பட்டது மக்களுக்கான உண்மையான குரலின் சொந்தங்கள்தான். கட்சிஅரசியல் போட்டிக்குள் அல்லது நிலைநிறுத்தலுக்குள் இந்தப் போராட்டத்தை அடகுவைக்க எடுக்கப்பட்ட முயற்சி கண்டிக்கத் தக்கது. மக்களின்விருப்பின் பேரில் அப்படியே அதை விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மக்கள் போராட்டமாக இருக்கும்.

உள்வாங்கி அழித்தல் செயற்பாடு
2002ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களால் முஹர்ரம் எழுச்சி என்ற பெயரில் மக்களின் அரசியல் விழிப்புப் போராட்டமொன்று வடிவமைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின்அரசியல் முகவரியாய் இருந்த தலைவர் அஷ்ரப் மரணித்து சிறிது காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் நிகழ்ந்தால் பலரின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். 

நேரடியாக அதை எதிர்த்து அழித்து விடாமல் பக்குவமாகக் கையாள வகுக்கப்பட்ட திட்டந்தான் ‘உள்வாங்கி அழித்தல்’ அப்போதைய அரசியல் தலைமை மாணவர்களுக்கு வஞ்சகமாக ஆசை வார்த்தைகளையூட்டி நாங்களும் உங்களோடு இருப்போம். நீங்கள் ஏன் தனியாகச் செய்யப்போகின்றீர்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து வருகின்றோம். எல்லாரும் சேர்ந்தே செய்வோம் என்று மாணவர்களை உள்வாங்கி இறுதியில் அவர்கள் திட்டமிட்டிருந்த அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. மாணவர்களின் போராட்டம் அப்படியே நீர்த்துப் போனது முஸ்லிம் அரசியலில் எவ்வித மாற்றமும் நிகழும் வாய்ப்பே குறைந்து போனது.

அதே பாணியிலான உள்வாங்கி அழித்தல் செயற்பாடு பொலிகண்டி பேரணியிலும் இடம்பெற்றது. மக்களாக எல்லாவற்றையும் தயார்படுத்த அரசியல்வாதிகள் அவற்றின் பயனைத் தமது அரசியல் அடைவுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். பொலிஸ் தடைகள் தகர்த்து சதிமுயற்சிகள் முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவதான தலைவர்களாகத் தம்மைச் சுயவிளம்பரப்படுத்திக் கொண்டு மக்களின் போராட்டத்தை உள்வாங்கி அழித்து இறுதியில் அனைத்துக்குமான சாதக நன்மைகளை தமக்குள் பதுக்கிக் கொண்டு ஒய்யாரமாக வெளிப்படும் காணொளிகளைக் நாம் அனைவரும் தெளிவாகக் கண்டு கவலை கொண்டோம். 

மக்கள் திரண்ட களத்திலும் இறுதி நாள் நிகழ்விலும் அரசியல்கட்சி சார்ந்த செயற்பாட்டாளர்களால் உடைவு ஏற்பட்டு குழுக்களாகப் பிரிந்து நின்ற துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விட்டதுக்குக் காரணமே, யார் உரிமை கொண்டாடுவது என்ற நிலையில் இருந்து  ஏற்பட்டது தான். 

இந்தச் சில்லறைத்தனமான வேலைக்காக கொஞ்சம்கூட வருத்தப்படாமல் மக்கள் மன்றில் தாமே இதன் பூரண உரித்தாளிகள் தாமில்லாவிட்டால் இவ்வெழுச்சிப் பேரணியே கிடையாது என்ற கோதாவில் உரையாற்றிவிட்டுக் கிளம்பியவர்கள் பாராளுமன்றத்தில் மாற்றிப் பேசினார்கள்.

தமக்கு ஏற்ற மாதிரி எல்லாவற்றையும் மாற்றிப்பேசி சிங்கள மக்களுக்கு மத்தியில் வேறு விம்பத்தைக் கட்டமைக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே அதைப் பார்க்க முடிந்தது. இத்தகைய மாற்றிப் பேசும் தன்மையும் சுயநலப்போக்கும் புதிதில்லை தான் ஆயினும் மக்களின் மனவுணர்களை மதித்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்குக் கௌரவமளித்து அவர்களது முயற்சிக்கான கௌரவத்தை அவர்களின் போராட்டக் களத்திலேயே அளித்திருக்கலாம். அதற்குரிய இடம் அது தான் ஆனால் அதை அங்கு செய்யுமளவுக்கு பரந்த மனப்பான்மை இருக்கவில்லை, தலைமைத்துவ ஆசை அதற்கு இடங்கொடுக்கவில்லை என்பது தமிழர்களின் துர்ப்பாக்கியமே.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04