(லியோ நிரோஷ தர்ஷன்)

காணாமல் போனவர்கள் தொடர்பாக நாளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள  சட்டமூலமானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. இதனை தடுப்பதற்கு கூட்டு எதிர் கட்சி ஜனாதிபதிக்கு கடுகதி தபால் அனுப்பியுள்ளதுடன் நாட்டு மக்களும் இதற்கு எதிராக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காகவே இந்த சட்ட மூலத்தை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வருகின்றது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தின் ஆபத்து தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டிற்கு அச்சுறுத்தலான விடயங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கும் போது அரசியலமைப்பின் 129 ஆவது பிரிவின் முதலாவது சரத்தில் இல்  ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அதனை தடுக்க வேண்டும். இதனை கடுகதி தபால் மூலம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம். பொது மக்களுக்கும் இந்த பொருப்புள்ளது. உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளது. 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தின் உள்நோக்கம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். முற்றிலும் நாட்டின் சுயாதீன தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் சட்டமூலமாகும் . இதற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நாட்டு மக்கள் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.