காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிக்கு தேனீரில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ 7 ஆண்டுகளாக இணைபிரியா தோழிகளாக பழகி வந்துள்ளார்கள்.

சிட்னியில்  வடிவமைப்பு கல்லூரியில் பயின்ற இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி உள்ளார். மேலும் ஜெசிகா மற்றும் அவரது காதலருக்கும் இடையே இருக்கும் உறவை கைவிடும்படி மிர்னா வலியுறித்தியும் உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனையடுத்து, மிர்னா தனது தோழியிடம் இருந்து விலகியே இருந்துள்ளார். இந்நிலையில், தொடர்புகள் அறுந்துப்போய் இருந்த மிர்னாவிடம் கடந்த ஆண்டு வாட்ஸ்அப்  மூலம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட ஜெசிகா, மிர்னாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதைதொடர்ந்து, இந்தோனேசியாவில் உள்ள தனது தோழி பூன் ஜுவிடா என்பவருடன் இணைந்து ஜெசிகா, மிர்னாவை  கொலை செய்ய திட்டமிட்டு ஒரு ஹோட்டலில் சந்திக்க அழைத்துள்ளார். ஜெசிகா, மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான தேனீரில் விஷம் கலந்து வைத்திருந்துள்ளார்.

மிர்னா வந்ததும் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் விஷம் கலந்த தேனீரை மிர்னாவிடம் கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.

ஆனால் ஒரு வாய் மட்டுமே அந்த தேனீரை அருந்திய மிர்னா, அதன் சுவை வேறு மாதிரி இருப்பதை உணர்ந்து குடிக்க மறுத்துள்ளார். ஆனால், அருந்திய அந்த ஒரு வாய் தேனீரே அவரது உயிரை பறிக்க போதுமானதாக இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெசிகா, தற்போது இந்த கொலை வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.

இச்சம்பவத்திற்கு  ஓராண்டுக்கு முன்னதாகவே ஜெசிகா தனது காதல் முறிவாலும், தோழியின் பிரிவாலும் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது முன்னாள் காதலரின் வாகனத்தை சூறையாடியுள்ளார். மேலும் மது போதையில் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.