நாட்டின் தேசிய பாதுகாப்பையும்   கடற்பாதுகாப்பையும்  உறுதி செய்யும் நோககில்   8 தொடக்கம்  12  வரையான  போர் விமானங்களை  கொள்வனவு செய்வதற்கு  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று     அமைச்சரும்  அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தம் நோக்கில் ஓர் அரசிடமிருந்து பிறிதொரு அரசுக்கு பொருள் கொள்வனவு செய்யும் அடிப்படையின் கீழ்  போர் விமானங்களை கொள்வனவு செய்ய அரசாஙகம்  தீர்மானித்துள்ளது. 

அந்தவகையில்  விமானங்களை வழங்கும் ஆர்வம் கொண்ட விமான உற்பத்தியாளர்கள், உதவி உற்பத்தியாளர்கள், அதிகாரம் பொருந்திய அரச அதிகாரிகள் மூலம் விருப்பத்தின் அடிப்படையில்  இலங்கை விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்கு    பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இவ்வாறு  8 தொடக்கம்  12 வரையான போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.   தற்போது  கையிருப்பில் உள்ளவை   பயன்பாட்டுக்காலம் முடிவடைந்தவையாகும். எனவே   புதியவற்றை கொள்வனவு செய்யவேண்டிய தேவையுள்ளது.