யாருடைய கையில் தமிழகம்?

Published By: Gayathri

09 Feb, 2021 | 04:55 PM
image

எம்.காசிநாதன்

''என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும், சசிகலா வருகையால் அ.தி.மு.க.விற்குள் சசிகலாவிற்கும், இரட்டை தலைமைக்குமான போட்டியாக உருவெடுத்துள்ளதை தவிர்க்க முடியவில்லை. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவந்து, வேட்பாளர்கள் பெயர்களை அ.தி.மு.க வெளியிடும்போது, இந்த போட்டி மேலும் விஸ்வரூபம் எடுக்கவே வாய்ப்புகள் உள்ளது.''

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் இறுதி ஆளுநர் உரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் கொள்கை அறிவிப்பிற்கான ஆளுநர் உரையை சம்பிரதாயப்படி 2021இன் ஆரம்பத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

“நாங்கள் இந்த அமைச்சரவை மீது கொடுத்த 97 பக்க ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலைசெய்து ஆளுநர் உத்தரவிடவில்லை” என்று குறை கூறி, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. வெளிநடப்பு செய்திருக்கிறது. 

ஆனால், முதல்வரின் முன்மொழிவில் அவருக்கு சாதகமான திட்டங்கள் ஆளுநர் உரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் அ.தி.மு.க.விற்கும் - தி.மு.க.விற்கும் இடையில்தான் மீண்டும் களை கட்டியிருக்கிறது. 

முதலமைச்சர் பதவிக்கு  எடப்பாடி பழனிச்சாமிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நேரடிப் போட்டி உருவாக்கப்பட்டுவிட்டது. வழக்கம்போல் திராவிட கட்சிகள் தமிழ்நாடு தேர்தல் களத்தை தேசிய கட்சிகளான காங்கிரஸிடமோ, தமிழ்நாட்டில் தங்கள் கணக்கை வலுவாக துவங்கவேண்டும் என்று வியூகம் அமைத்து செயல்படும் பா.ஜ.க. விடமோ விடத் தயாராக இல்லை.

மூன்றாவது சக்தியாக புறப்பட்டு- இன்னும் நிலை நிறுத்திக்கொள்ள பாடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவ்விடத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோரிடமும் விட்டுவிட நினைக்கவில்லை.

இந்தச் சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கில் பெப்ரவரி 2017இல் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு, பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகியிருக்கிறார். இதனால் சசிகலா என்ற சூறாவளி அ.தி.மு.க.விற்குள் வீசத் தொடங்கி விட்டது. 

அவரை வரவேற்று ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகள், பதாகைகள் அமைகின்றார்கள். அவ்வாறானவர்களை எடப்பாடியும், பன்னீர் செல்வமும் கட்சியிலிருந்து நீக்கி வருகின்றார்கள்.

ஆனால், அப்படி வரவேற்ற ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப்பை இதுவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. சென்னை திரும்பும் சசிகலா சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்வார் என்று பேச்சு எழுந்ததும், இப்போது அந்த நினைவிடத்தை “பராமரிப்புப் பணிகள்” என்று காரணம் காட்டி பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி திறந்த நினைவிடத்தில், உடனடியாக பராமரிப்புப் பணிகள் என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு புறப்பட்டபோது, இதே நினைவிடத்தின் மீது,  ஓங்கி கையால் அடித்து சபதம் செய்து விட்டு சசிகலா சென்றிருந்தார்.

அப்போது அவர் பதவியில் அமர்த்திய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. முதலமைச்சர் மட்டுமல்ல, அ.தி.மு.கவே பா.ஜ.கவுடன் கூட்டணியாக இருக்கிறது. 

பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு மாறாக சசிகலாவுடன் பழனிச்சாமி நெருக்கம் காட்டவும் முடியாது. அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு, மீண்டும் பொதுச் செயலாளர் என பதவி கொடுக்கவும் முடியாது.

ஆகவே, சசிகலா வரவால் அ.தி.மு.க.விற்குள் துவங்கியுள்ள சலசலப்பு, அடுத்து எந்த திசையை நோக்கி நகரும்? இதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க.வினர் மனதிலும் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிடமும் எழுந்துள்ள கேள்வி.

ஒரு காலத்தில் அ.தி.மு.க. என்றால் சசிகலா. சசிகலா என்றால் அ.தி.மு.க. என்ற நிலைமை இருந்தது. ஆனால், அவர் சிறைக்குச் சென்ற பிறகு அத்தனையும் காலாவதியாகி விட்டது. அ.தி.மு.க.வை “ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்” ஆகியோரின் இரட்டைத் தலைமை எடுத்துக் கொண்டு விட்டது. 

அ.தி.மு.க.வின் கட்சி விதிகள் மாற்றப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியே நீக்கப்பட்டு, அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வழங்கி விட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், இன்றைய திகதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடுசெய்ய தேர்தல் அதிகாரிக்கு கடிதம் வழங்குவது உள்ளிட்ட, அனைத்து அதிகாரங்களும் “ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்” இரட்டையர்களிடம்தான் இருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்கும் அதிகாரத்தை “ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்” பயன்படுத்த முடியுமா? மத்திய அரசில் இருக்கும் பா.ஜ.க. தலைமை பச்சைக் கொடி காட்டினால் மட்டுமே அது முடியும். அந்த ஒப்புதல் இல்லாமல், இந்த இரட்டையர்கள் சசிகலாவை சேர்க்க முனைந்தால், முதலமைச்சராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டபோது ஏற்பட்ட தர்மயுத்தம் அ.தி.மு.க.வில் மீண்டும் துவங்கும்.

அதனால் கட்சிக்கும் பிரச்சினை! சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நேரத்தில் இரட்டை இலைக்கும் பிரச்சினை! ஆகவே இந்த இரு பிரச்சினைகளை, தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி களத்தில் இறங்குகின்ற நேரத்தில் உருவாக்கிக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயராக இல்லை.

அதனால்தான் அவர் “சசிகலா அ.தி.மு.க.வில் சேருவார் என்ற பேச்சுக்கு நூறுசதவீதம் இடமில்லை” என்று அழுத்தம், திருத்தமாக ஜனவரி மூன்றாவது வாரத்தில் டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்த பிறகு பேட்டியளித்தார்.

சசிகலா வரவால், ஸ்டாலினுக்கும் தனக்கும் உள்ள நேரடிப் போட்டி எவ்விதத்திலும் பிசுபிசுத்துப் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக காய்களை நகர்த்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சசிகலா வருகையால் தற்போதைக்கு டி.டி.வி. தினகரன் தலைமைதாங்கி நடத்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வலு கூடலாம். அதை சமாளிக்கும் விதத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய கோரிக்கையான வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுத்தாவது, டாக்டர் ராமதாஸை தன் அணியில் தக்கவைத்துக்கொள்ள அ.தி.மு.க. படாத பாடு படுகிறது. 

மத்திய அரசின் அதிகாரம் தேர்தல் நேரத்தில் தேவைப்படும் என்பதால், பா.ஜ.க.வும் கோபித்துக் கொள்ளாத ஒரு தொகுதிப் பங்கீட்டை அளிக்க தயாராகி வருகிறது அ.தி.மு.க.

தென் மாவட்டங்களில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் தங்களை “தேவேந்திரர் குல வேளாளர்” என அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது அ.தி.மு,க, அரசு. 

முத்தரையர்கள் மாநாட்டில் பங்கேற்று, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் பழனிச்சாமி. 

என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும், சசிகலா வருகையால் அ.தி.மு.க.விற்குள் சசிகலாவிற்கும், இரட்டை தலைமைக்குமான போட்டியாக உருவெடுத்துள்ளதை தவிர்க்க முடியவில்லை. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவந்து, வேட்பாளர்கள் பெயர்களை அ.தி.மு.க வெளியிடும்போது, இந்த போட்டி மேலும் விஸ்வரூபம் எடுக்கவே வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் “ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி” ஆகியோரின் கையில் மட்டும் இருக்குமா? அல்லது போட்டி திசை மாறுமா? என்பது அப்போதுதான் தெரியும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13