மியன்மாரின் இராணுவ ஆட்சி விடுத்துள்ள எச்சரிக்கை !

Published By: Gayathri

09 Feb, 2021 | 12:22 PM
image

லோகன் பரமசாமி

மியன்மாரில் மீண்டும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.  இந்த ஆட்சி கவிழ்ப்பு வெளிப்படையாக தேர்தல் முறைகேட்டால் எழுந்தவொரு தனிப்பட்ட இராணுவ தளபதியின் அதிகாரம் நோக்கிய நகர்வாக காட்டப்படுகிறது. பின்புல ஆய்வுகளின் கணிப்பின்படி இது இருபெரும் வல்லரசுகளான சீன –அமெரிக்க களமுனையுடனேயே ஒப்பிடப்படுகிறது. 

சர்வதேசம் மியன்மார் இராணுவத்தை ஒரு தரப்பாகவும், மியன்மார் ஜனநாயக சக்திகளை இன்னுமொரு தரப்பாகவும் கையாளுகின்றன. 

இராணுவத்திடம்  சீன பின்புலம் அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது. அமெரிக்க காங்கிரசில் செல்வாக்கு மிக்க சிந்தனை குழுவான வெளியுறவு கொள்கைகளுக்கான மையம் ஏற்கனவே வெளியிட்ட தனது கட்டுரையொன்றில் மியன்மாரானது தேசிவாத, பௌத்த பேரினவாத கருத்து உருவாக்கத்தை பரப்புவதில், தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கும்,‘தட்மடொவ்’ எனப்படும் இராணுவ தலைமைக்கும் கூட்டுப் பங்கிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. 

இதுவே ரோஹிங்கியா மக்கள் மனிதத்துவ கையாள்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற விரோத உளநிலையை உருவாக்கியது அத்துடன் பல அரசியல் தலைவர்களின் பங்கும் இதில் இருக்கிறது.

ஆனால் இன அழிப்பு தாக்குதல் விவகாரத்தில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பு மட்டுமே உள்ளது என்றும் அந்த கட்டுரைத் தகவல்கள்  கூறியிருந்தன. அத்துடன் இந்த விவகாரத்தால் எழுந்த அரசியல் எரிகாயங்களை ஆங்சாங் சூகி தாங்க வேண்டி ஏற்பட்டதாகவும் அக்கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 

ஆக, மேற்கு தரப்பு ஆங்சாங் சூகியை அழுத்தத்திற்குள் உட்படுத்தி வந்தாலும் அவர் தம்முடன் இணைந்துச் செல்லக்கூடியதொரு சூழலை எப்போதும் மேற்குலகம் தயாராகவே வைத்திருந்தது.

மியன்மாரில் சுமூகமான அரசியல் நிலைமை நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதில் சீன தரப்பு கவனமாகவே இருந்து வந்திருந்தது. சீனா தனது தென்மேற்கு பகுதியான யுனான் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய துணை பிராந்தியமாக மியன்மாரையே வைத்திருந்தது. 

மியன்மாரில், சீனா- மியன்மார் பொருளாதார பாதை, ஆற்று அணை கட்டுதல், எண்ணை குளாய்த் திட்டம், வீதித்திட்டம், ஆழ்கடல் துறைமுக கட்டமைப்பு என்று பாரிய அளவிலான திட்டங்கள் காணப்படுகின்றன.

 

இத்திட்டங்கள்மூலம் சீனா, மியன்மாரை கடன் பொறிக்குள் தள்ளுவதில்  கவனம் செலுத்தியதுடன் மட்டுமல்லாது. மியன்மாருடனான தனது தேச எல்லைகளையும் உறுதிப்படுத்தி கொள்வதிலும் கவனம் செலுத்தி வந்திருந்தது.

அண்டை நாடு ஒன்றுடன் மிக நீண்டகால சுமூக உறவை வைத்திருக்க எண்ணம் கொண்டுள்ள நாடுகள் தமது அரசில், எல்லைகளை பரஸ்பர இணக்கப்பாட்டுடன் உறுதிப்படுத்தி, கட்டமைத்து கொள்வது மிக முக்கியமானதொரு விவகாரமாகும். 

அந்தவகையில் சீனா மியன்மாருடன் உறுதியான மிக நீண்ட பொருளாதார உறவை வளர்த்து கொள்வதன் ஊடாக தனது தென்பிராந்திய பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டிவந்தது.

மியன்மார் அரசியல் சட்டத்தின் பிரகாரம் தேசிய பாதுகாப்புச் சபையே அதியுயர் அதிகாரம் கொண்டதாகும். பதினொரு உறுப்பினர்கள் கொண்ட உயர் சபை, நாட்டின் தலைவரால் நடத்தப்படுகிறது. ஆனால், பாராளுமன்றத்தில் 25 சதவிகித ஒதுக்கீடு மியன்மார் இராணுவ தரப்பிற்கு இடமிருந்தது. 

மிக முக்கிய இராணுவ தலைமை தனது பிரதிநிதிகளை கொண்டிருக்கும் நிலை இருந்தது. இதனால் சீன தரப்பு, இராணுவத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் சமாந்தரமான  சுமூக உறவை பேணி வந்தது.

அதன்காரணமாக, நாட்டில் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார திட்டங்களை உருவாக்கப்பட்டதோடு இராணுவத்திற்கு பயிற்சிகளும் ஆயுதங்களும் தாராளமாக வளங்கப்பட்டு வந்தது. 

இதனால் எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் சீன சார்பு நிலையிலிருந்து விலக முடியாத தன்மை உருவாக்கப்பட்டது. 

2015 ஜுன் மாத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மியன்மார் அரசின் முக்கிய ஆலோசகரான ஆங் சான்சூகியும் சீன தலைவர் ஷி ஜின்பின்கும் ஆறுதடவைகள் சந்தித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் கம்பியாவினால் முன்வைக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலில்  இன அழிப்பு குற்றச்சாட்டுகளில்  ஆன்சாங் சூகி தனது கை சுத்தமானது என்பதை நிரூபிக்கும் நிலையை எடுத்ததுடன் இராணுவத்தையும் காப்பாற்றவும் கடுமையான முனைந்திருந்தார். 

ஆனால், இவரது ஆட்சி காலத்தில் உருவாகிய ஜனநாயக திரையின் பின்னால் இராணுவத்தின் கைகளும் பொளத்த பேரினவாதமும் இருப்பதை  மேற்குலக பத்திரிகைகள் கூறி வந்தன.  

மேற்கு நாடுகள் சூகி மீது அதிக நம்பிக்கையை கொண்டிருக்கின்றபோதும், அவருடைய சீனவுடனான உறவு காரணமாக மேற்கு நலன்களுக்கு அமைவாக கடும் அழுத்தங்களை மாத்திரம்  பிரயோகித்து வந்தன. 

மியன்மாரில் மீண்டும் மேற்கு சார்பு நிர்வாகம் ஒன்றை சூகி ஊடாகவே நிறுவுவதற்கு சர்வதேசம் தயாரான போதுதான் இந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஜனநாயக கட்சி நிர்வாகத்தில் ஆன் சாங் சூகி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அன்றைய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும், சூகிக்கும் இடையில் அந்நியோன்னியமான பரஸ்பர உறவு இருந்தது. 

அன்றைய சர்வதேச சூழலில் சீன அமெரிக்க வர்த்தக, பாதுகாப்பு போட்டியின் கொதிநிலையும், மியன்மார் உள்நாட்டு பொறிமுறையும் கணிசமான மாற்றத்தை நோக்கியதாக இருந்தது. 

குறிப்பாக, மியன்மார் மீதான பொருளாதாரத் தடையை தளர்த்தி கொள்ளவேண்டிய தேவை அன்றைய இராணுவ ஆட்சியாளருக்கு இருந்தது. இதனால் அங்சாங்சூகி விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல, இன்றும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மியன்மார், அமெரிக்க இடையேயான உறவில் புதிய திருப்பம் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதற்கு அமைவாக உள்நாட்டு அரசியல் பொறிமுறையில் ஜனநாயகத்தை கட்டி அமைப்பதிலும் அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து இராணுவத்தை சிறிது சிறிதாக அகற்றும் செயற்பாடுகளிலும் ஆன்சாங் சூகி இறங்கியுள்ளார். 

அதேபோல சீனாவின் ‘ஒரே பட்டு ஒரே பாதை’ திட்டம் மிக வேகமாக மியன்மாரில் பல பில்லியன் டொலர்கள் முதலீடுகளுடன் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இராணுவ புரட்சி ஏற்பட்டதானது, சீனா மியன்மாரை இழக்க தயாரில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது.

 

இங்கே மியன்மாரின் தற்போதைய நிலை இலங்கையில் உள்ள தமிழ் மக்களை எச்சரிப்பதாகவே பார்க்கவேண்டி உள்ளது. கொழும்பில் ஆட்சி செய்த இரு சிங்கள பேரினவாத கட்சிகளும் கடந்த காலங்களில் சீன பொருளாதார திட்டங்களை நோக்கியதான போக்கையே கையாண்டு வந்திருக்கின்றன.

மியன்மாரில் ஜனநாயக பண்பாட்டை உருவாக்குதல் போன்ற கையாள்கையை சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை எதிர்பார்க்காதபோதிலும் சீன ஆளுமையின் பிடியிலிருந்து வெளியேற வேண்டிய தேவைகள் உள்ளன. 

இதனை அடையும் பொருட்டு 2009 இனப்படுகொலைகளுக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணை தொடர்பான விவகாரங்களை கையில் எடுப்தற்கு தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து நிற்க வேண்டிய தேவை இந்தியா உள்ளிட்ட மேற்குலகத்திற்கு உள்ளது. 

இந்தநிலையில், ஏற்படும் சந்தர்ப்பங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் பொறிமுறைகளை கையாளக்கூடிய ‘கூட்டு நிர்வாக கட்டமைப்பு’ ஒன்று தேவை என்பதையே மியன்மார் இராணுவ ஆட்சி எச்சரித்திருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04